Saturday, January 30, 2010

மறைந்தது நாகேஷ் மட்டுமல்ல

நான் விரும்பும் நாகேஷ் அவர்களுக்கு நாளை (31.01.2010) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...
அவருக்காக ஒரு அஞ்சலி...
Friday, January 22, 2010

பொங்கல் பீலிங்க்ஸ்

இந்த முறையும் புத்தக கண்காட்சி சென்றிருந்தேன். தினமும் பதிவுலகில் கண்காட்சி குறித்தும் அங்கு நிகழ்ந்த 'பதிவர் சந்திப்புகள்' குறித்தும் பல பதிவுகள் வந்திருந்தபடியால் புத்தகங்களில் ஒரு கண்ணும் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என இன்னொரு கண்ணும் வைத்தபடி இருந்தேன். 8.30 க்கு கண்காட்சி மூடப்படும் என 8.15க்கு அறிவித்ததால் கடைசி நேர பரீட்சைக்கு கட கட வென படிப்பது போல நான்கைந்து வரிசை ஸ்டால்களை அவசரமாய் கடக்க வேண்டி இருந்தது. சில புத்தகங்கள் வாங்கினேன். நான் தேடி போன எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'வெற்றிக்கு ஏழு படிகள்' கிடைக்கவில்லை. பதிப்பித்த அல்லயன்ஸிலேயே ஒன்று கூட இல்லை. கடைசி வரை பதிவர் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

* * *


சென்னை அமைந்தகரையில் உள்ள வ.உ.சி பூங்காவில் சென்னை சங்கமம் சென்றிருந்தேன். நல்ல திருவிழா கூட்டம். பூங்காவின் நடுவே மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தது. சென்னை சங்கமத்தில் எனக்கு பிடித்த முதல் விஷயம் அதன் ப்ரோமோ விளம்பர டிசைன்கள்.... வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகள்.பூங்கா முழுவதும் சமையல் வாசம். உணவு ஸ்டால்களில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்க பெரிய்ய்ய்ய்ய்ய லைன். சமையல் நிபுணர் தாமுவின் ஸ்டாலில் விருதுநகர் பிரியாணி வாங்கி சூடாக இறக்கினேன்.


ஸ்டாலுக்கு சற்று தொலைவில் சமையல் கலைஞர் தாமு அமர்ந்திருந்தார். பல சமையல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். என்னிடம் கூட ஒரு புத்தகம் இருப்பதாய் ஞாபகம். டி.வி. சமையல் நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன். அம்மா சொல்லி இருக்கிறார். மற்ற சமையல் நிபுணர்கள் கையில் க்ளவுஸ், ஸ்டைலான உபகரணங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் பொழுது, இவரது செய்முறை படு சிம்பிளாக இருக்கும். அப்படியே வெறுங்கையில் சிக்கனை மசாலாவில் பிரட்டி சட்டியில் போடுவார். எந்த ஒரு செயற்கை தனமும் இருக்காது.அவரை பார்த்ததும் அது நினைவுக்கு வரவே, அவரிடம் அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். "அதாங்க முக்கியம். அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க " என்றார் அன்பாய் சிரித்து கொண்டே. பதிலுக்கு அவரது ஸ்டால் பிரியாணி சூப்பர் என சொல்லிவிட்டு நகர்ந்தேன். பிறகு மற்ற ஸ்டால்களில் நெத்திலி பிரை, ஜிகர் தண்டா போன்ற ஸ்மால் ஸ்மால் ஐய்டங்களையும் கொஞ்சம் கொரித்தேன்.
பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தால் எப்படி ஆங்கிள் பார்த்தாலும் போட்டோ பிரேமுக்குள் செம கூட்டம். சென்னை சங்கமம் இத்தனை வருடம் நடந்தாலும் இந்த முறை கூட்டம் கொஞ்சம் கூடி இருக்கிறது.நான் போன பொழுது துள்ளவைக்கும் நாட்டுபுற பாடல்கள். நாதஸ்வர, மேள சத்தங்கள் என அமர்க்களமாய் இருந்தது.
தஞ்சை, மதுரையை கண்ணால் பார்த்தே பல தலைமுறைகள் ஆகிவிட்ட என்னை போன்ற சென்னை வாழ் சோழ, பாண்டிய வாரிசுகளுக்கு சென்னை சங்கமம் நல்லதொரு அனுபவம். காரணமான கனிமொழி மேடத்திற்கு பாராட்டுக்கள்.
புத்தாண்டு பிறந்ததும் புத்தக கண்காட்சி, சரியாய் அது முடிந்ததும் அடுத்து சென்னை சங்கமம் என நல்ல பெஸ்டிவல் பீலிங்க் இப்பொழுதெல்லாம் சென்னையில் நிகழ்கிறது.

***

பொங்கல் அன்று கொளத்தூர் கங்கா திரை அரங்கம் வழி சென்ற போது காதில் கேட்டது சிரிக்க வைத்து. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசால் அலைமோதிய கூட்டத்தை கட்டுபடுத்த மைக்கில் அறிவித்தார்கள்
"ஆயிரத்தில் ஒருவன், குட்டி டிக்கட் புல்லு..... தயவு செஞ்சு வீட்டுக்கு போய் வேற வேலையை பாருங்க.. இல்லைனா வேட்டைக்காரன் டிக்கட் இருக்கு வாங்க...!"