குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். போனா போகுதுன்னு நம்ம பிளாக்கை படிக்க வருபவர்களை பெர்சனல் விஷயங்களை சொல்லி இம்சிக்க கூடாது என நீண்ட நாட்களாய் ஒரு கொள்கை வைத்திருந்தேன். ஆனால் ஞாயிறுகளில் அதிகம் பேர் படிக்கமாட்டாங்களாமே.. அதனால அதிக சேதாராம் இருக்காது என்கிற நம்பிக்கையோடு.... வாழ்வை ரசிப்பதை தொடர்கிறேன்.
சினிமா
இணையம் தந்த அருட்பெரும் கொடைகளில் ஒன்று, பிற மொழியில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வழிசெய்வது. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தை இந்த விமர்சனம் படித்து ஒரு சனிக்கிழமை இரவு விடிய விடிய இரண்டு முறை பார்த்தேன். மனதை கனமாகவும் லேசாகவும் ஆக்கக்கூடிய திரைப்படம். உணர்வுபூர்வமாக செல்லும் கதை நிறையவே என்னை பாதித்தது. பாதித்தது என்பதை விட முடிவில் இனம்புரியாத உற்காகம் கொடுத்தது என்று கூட சொல்லலாம். வசனங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு அருமையாக இருக்கும். ரசித்து ரசித்து நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் இதுதான். ஆண்டி டூப்ரென்ஸ் என்கிற கதாநாயகன் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் தருணம். வாழ்க்கையின் பெரும் வரம் சுதந்திரம் என்பதையும் அந்த சுதந்திரம் தரும் ஆனந்தத்தையும் அந்த காட்சியில் நாம் உணர முடியும். மிஸ் பண்ணக்கூடாத படம்!
பயணம்
பொறுமையாய் வயல் வெளிகள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் பச்சை வாசனை காற்றை சுவாசித்தபடி பைக்கில் நெடுந்தூரம் செல்வது வெகு ரசனையான பயண அனுபவம். உயிர் நண்பன் கிருஷ்ணாவின் திருமணத்திற்காக கடைசி நிமிடம் வரை பேனர் டிசைன், வாழ்த்து அட்டை தயாரிப்பு என நேரம் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் நான்கு நண்பர்கள், இரண்டு பைக்குகளில் கிளம்பினோம். சென்னையிலிருந்து ஆரணி. நான்கு மணி நேர பயணம். வேகம் காட்டாமல் ஆட்டம் போடாமல் நிதானமாய் சாலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் வழியில் கிடைத்தவற்றை சுவைத்தும் என நினைவில் நிற்கும் பயணம்.
வரைகலை
மற்ற மாதங்களில் எப்படி சோர்வுற்று இருந்தாலும் மார்கழியில் அம்மாவிற்கு இருபது வயது குறைந்துவிடுவது சிறுவயது முதலே எனக்கு ஆச்சரியமான விஷயம். கலர் பொடிகள் வாங்கி வைத்து கலக்கி, பேப்பரில் அன்றைய கோலத்தை வரைந்து பார்த்து, தெருவில் வண்ணச் சேர்க்கையுடன் அவர் இறங்கி கோலமிடும் போது, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார். அவ்வப்போது பல கோணங்களில் மாறி மாறி நின்று பார்த்து கோலம் சரியாக வருகிறதா என செக் செய்து கொள்வார். சிறு வயதில் ஆர்வத்தில் கெஞ்சி கெஞ்சி கேட்டு கோலப்பொடி வாங்கி வண்ணம் சேர்க்க தெரியாமல் கடும் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏராளமாய் உண்டு.
அம்மா தரையில் கோலம் போடுவதும் இன்று கணிணியில் நான் தொழில் நிமித்தமாய் டிசைனிங் செய்வதும் என இரண்டுமே ஒன்று என்றாலும் ரசனையான ஈடுபாடு என வரும்போது இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாய் இருப்பதாகவே நினைக்கிறேன்.
"என்னடா ஏதோ கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன். சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.
அப்படி கடந்த மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த மாடு மாதிரி ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்!