Thursday, November 25, 2010

மந்திர புன்னகை - முக்கால்வாசி கிணறு












ண்மையிலேயே வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ள இன்டிரஸ்டிங் சப்ஜெக்ட். கதிர் என்னும் ஆர்க்கிடெக்ட். சிறுவயதில் தன் தாயின் தவறால் டில்யூஷனில் வாழ்பவர். நேரடியாகவும், தடாலடியாகவும் ஒளிவு மறைவின்றி வாழும் இவர் மேல் காதல் கொள்கிறார் கதாநாயகி. இவரது டில்யூசனால் இவர்களது காதலில் பிரச்சினை ஏற்பட, பின்னர் அந்த காதலே அவரது குறையை போக்க எப்படி உதவுகிறது என்பதுதான் கதை. படத்தில் பிளாஷ்பேக், டிவிஸ்ட்டுகள் இருப்பதால் இதற்கு மேல் கதையை சொன்னால் படம் பார்க்கும்பொழுது சஸ்பென்ஸ் இருக்காது. 


முக்கால்வாசிக்கும் மேலான நேரம் படம் செல்லும் வேகமே தெரியவில்லை. கதிராக வரும் கதாநாயகனின் கேரக்டரைசேஷனை படிப்படியாக வலுப்படுத்தியும், காட்சிகளுக்கு தம்பி ராமையா, சந்தானத்தின் ரகளைகளால் உரமிட்டும், பார்லர்களில் பல நூறு மணி நேரங்கள் ப்ளீச் செய்யப்பட்ட பளிச் முகத்துடனான மீனாட்சியை காண்பர்கள் மனதுக்கு இதமாக உலவ விட்டும் முதல் பாதி பரபரவென பறக்கிறது. இரண்டாம் பாதியில் கதிரின் தடாலடியான மன நிலைக்கான காரணங்களை சொல்லி சில டிவிஸ்ட்களை தரும் வேளையில் கதை 'அட' போட வைக்கிறது.  அடுத்தடுத்து நாயகனை விடாத நாயகி, பணிந்து கொடுக்காத நாயகன் கடைசியில் வேறு வழியில்லாமல் சுபமான கிளைமேக்ஸ் என முடிவில் மட்டும் கொஞ்சம் சமரசம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.


    ஷட்டர் ஐலண்ட், தி சிக்ஸ்த் சென்ஸ் படங்களில் வருவது போன்ற சஸ்பென்ஸ் உத்தி ஒன்றினை இயக்குனர் இப்படத்தில் கையாண்டுள்ளார். இரண்டாம் பாதியில் அதைப்பற்றி அறிகையில் முதல் பாதியில் சம்மந்தப்பட்ட காட்சி அமைப்புகளை யோசித்து ரசித்தேன். உதாரணத்திற்கு முதல் பாதியில் இரவு உறங்கும் முன் அப்பாவிடம் பணம் எடுத்துக்கொள் என வைத்துவிட்டு படுப்பதும்.. காலையில் கிளம்பி விடும் அப்பா அதை எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டிருப்பதும்!  அதேபோல் பாட்டியிடம் கல்யாண செய்தி சொல்லும்பொழுது அப்பா அங்கே இல்லாமல் திண்ணையில் தனியாய் இருப்பது என குறிப்பிட்ட காட்சிகைளை கவனமாக செய்திருக்கிறார்கள். 




     தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கதாநாயகன், காதலில் நம்பிக்கை இல்லாதவன்.. அவனுக்கே ஒரு பெண் மீது காதல் வருகிறதெனில் அந்த பெண் பாத்திர தேர்வு எவ்வளவு முக்கியமானது? மீனாட்சி தன் முக்கியதுவத்தை உணர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படம் முழுவதும் பளிச்சென பிரஷ்ஷாக இருக்கிறார். இதனால் எனக்கு மீனாட்சியை பார்க்கும்பொழுது ஒரு ஃபீல் குட் உணர்வு எழும்புகிறது. அவரது கிளாமரை மட்டும் நம்பி இருக்காமல் திரையில் கணிசமான ஒதுக்கீடு அவரது நடிப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் பல இடங்களில் ஸ்லிப் ஆகும் லிப் சிங்கிங் வழக்கமான வடக்கத்திய கதாநாயகிகளை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 


    படம் நெடுகிலும் ரசிக்க வைக்கும், ஷார்ப்பான வசனங்கள் கொட்டிக்கிடக்கின்றது.  பல ஊறிப்போன கான்செப்டுகளை போட்டு பட்டென உடைக்கும் பல வசனங்கள் சிரிப்பையும் வரவழைக்கிறது சில அதிர்ச்சியையும் வரவழைக்கிறது. பலமான சிரிப்பலைகளை வரவழைத்து படத்தின் பெரிய பலமாக இருப்பது சந்தானம்தான். டபுள் செஞ்சுரி அடிக்கும் வேளையில் சச்சினுக்கு வாய்ப்பு வழங்காமல் காஜ் ஆடிய தோனி போலல்லாமல் இயக்குனர் இவருக்கு அதிக வாய்ப்பு வழங்கியிருப்பது புத்திசாலித்தனம். அதிலும் சந்தானம் ஜோடி போட்டு காமெடியில் கலக்கியிருக்கிறார். மனைவிக்கு புடவை வாங்கி தருவது, ஊரிலிருந்து வரும் சொந்தங்கள் என கொஞ்சம் லென்த்தியான காமெடி போர்ஷன்கள் ஸ்டராங் சப்ஜெக்ட்டான படத்தை இலகுவாக மனதில் குடியமர்த்துகிறது. ஆனால் சந்தானத்தின் சில தேவையற்ற ஆபாச வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். 


    எதற்கும் அலட்டிக்கொள்ளாத ரோலில் அசால்ட்டாக நமது ஹாஸ்டல் ரூம் மேட் நண்பன் போலவே எளிமையாய் இருக்கிறார் கரு.பழனியப்பன். படம் நெடுகிலும் குடித்துக் கொண்டும், பிற ஹீரோக்கள் தயங்கக்கூடிய வசனங்களை சரளமாக பேசிக்கொண்டும் அசாதாரண ஹீரோ ரோலை சாதாரணமாக செய்து முடித்திருக்கிறார் இவர். அப்பா கேரக்டர்,  தம்பி ராமையா,  மகேஸ்வரி, பிளாஷ் பேக்கில் வரும் சேகர் கேரக்டர், அம்மா கேரக்டர், டீலா நோ டீலா ரிஷி  இவர்களது நடிப்பு நன்றாக இருக்கிறது. கதையின் முக்கியமான டாக்டர் கேரக்டர், கதாநாயகியின் அண்ணன் ஆகியோர் இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாம். கண்டிப்பாய் டாக்டர் கேரக்டரை கொஞ்சம் ஹெல்த்தியாய் கம்பீரமாய் வடிவமைத்திருக்கலாம்.


    "அன்பில்லாம..." பாடல் வேகமான பீட்டுகளினாலும் படத்தின் கதைக்கருவுடன் சம்பந்தப்பட்ட தீம் பாடல் என்பதனாலும் படத்தில் தனித்து மனதில் நிற்கிறது.  "தட்ட தட தட" அழகான காதல் மெலோடி. பாடலின் பின்னணியில் ஏற்படும் ஸ்லோமோஷன் அதிர்வு ஒளிப்பதிவு நல்ல ஐடியா.  "தண்ணி போட வாப்பா..." பாடலும் நல்ல டியூன் ஆனாலும் அதில் இன்னும் கொஞ்சம் நடன அமைப்புகளை அமைத்திருந்தால் பாடல் அட்டகாசமான குத்து பாடலாய் இருந்திருக்கும். அப்புறம் மேகமோ என்னவோ ஒரு பாடல் வருகிறது. அது இழுக்கிறது.


    ரொம்பவும் திடமான கதாபாத்திரமாக ஹீரோவை காட்டிவிட்டு கிளைமேக்சில் நாலு லைன் கதாநாயகி பேசிவிடுவதால் திடீரென மாறிவிடுவது மட்டும் ரொம்பவும் இடிக்கிறது. என்னைப்போன்ற சாதாரண பெருவாரியான ரசிகர்களுக்கு இத்தகைய ஹேப்பி எண்டிங் இல்லாவிட்டால் நைட் சோறு எறங்காதுதான். ஆனால் ஆரம்பம் முதலே மிரட்டி வந்த இப்படத்தில் வேறு ஏதாவது மிரட்டலான கிளைமேக்ஸ் எதிர்பார்த்தேன். 


   முதல் பாதி அதிரடியாகவும், இரண்டாம் பாதியில் பாதி நேரம் நல்ல டிவிஸ்ட்களுடனும் என்று முக்கால்வாசி கிணறினை பிரமாதமாக தாண்டியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் செய்து கொள்ளப்பட்டுள்ள கமர்ஷியல் காம்ப்ரமைஸ் மட்டும் படத்தின் தீம் உடன் ஒட்டவில்லை. எனினும் மொத்தத்தில் எடுத்துக்கொண்டுள்ள வித்தியாசமான களத்திற்காகவும்,  சுவாரஸ்யமாக கதை சொல்வதினாலும், கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் மந்திர புன்னகை!


___________


பதிவர்களுக்கென ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல்முறை. படத்தின் களத்தைப்போலவே இத்தகைய புதுமையான யோசனையை நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்!! பதிவர்களை பதிவிலும் தொலைபேசியிலும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்த பதிவர் உண்மைத்தமிழன் அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!!!