Tuesday, February 22, 2011

வலைமனை ஜீபூம்பா 2 - கவனியுங்கள் உள்ளுக்குள் ஒலிக்கும் குரலை

எப்பொழுதும் எல்லோருக்கும் ஓயாமல் உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திலோ, சில வருடங்களிலோ, அடுத்த வாரத்திலோ அல்லது நாளையோ நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை, உங்களது வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் குரல் அது.

இதை இன்னர் மோனோலாக் (Inner Monologue)  என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக நினைவு மனத்திற்கு அதிக வேலையில்லாத வேளைகளில் இந்த உள் மன குரல் ஒலிக்கத்துவங்கும்.

சாப்பிட அள்ளும் முதல் கவளம் உணவினை நினைவு மனதுடன் உணர்ந்து ருசித்து சாப்பிடுவோம். அடுத்தடுத்த கவளங்களில் அனேகமாய் ருசியில் கவனம் செல்லாது. அது நாம் ருசிக்கும் ஒரு புதிய வகை உணவாக இருந்தாலொழிய. ஒரு ரோபோட் போல் சாப்பிட்டுக்கொண்டே வேறு எதையோ சிந்தித்துக்கொண்டிருப்போம்.

பழகிய வழிகளில் வாகனங்களை ஓட்டும்போது, பழகிய வேலைகளை தன்னிச்சையாக செய்யும்பொழுது என்பன போன்ற நினைவு மனதிற்கு வேலையில்லாத இத்தகைய ரோபோட் தருணங்களில்தான் இந்த உள் மன குரல் ஓட ஆரம்பிக்கும்.

அது என்ன சொல்கிறது என கொஞ்சம் கவனிக்க துவங்குங்கள். ஒரே ஒரு வாரம். தீவிரமாக கண்காணித்து குறித்துக்கொண்டோமானால் நாம் இவையெல்லாம் சிந்திக்கிறோமா என்கிற ரீதியில் ஆச்சரியமான முடிவுகள் வெளிப்படும்.

"வேறு நல்ல வேலையே கிடைக்க மாட்டேங்குதே.. தேடாத இடமில்லை.. இப்படிதான் போகும் போல வாழ்க்கை" "அடுத்த மாசம் பெரிய செலவு இருக்கே எப்படி சமாளிக்கிறது தெரியலையே" "வர வர நம்மகிட்ட அவர் பேசறதே இல்லையே.. பிரிஞ்சுடுவோமோ.."  "ஏற்கனவே நாப்பது வயசாச்சு.. இனியும் லைஃப்ல எப்பதான் செட்டில் ஆகறது தெரியலையே" போன்றவை சில சாம்பிள்கள்தான். இவைகளில் ஏதேனுமோ.. அல்லது இதைவிட எதிர்மறையான சிந்தனைகளோ உங்கள் மனதில் ஓடக்கூடும்.

நினைவில் கொள்ளுங்கள். உங்களது முழுமுதற் எதிரி இந்த எதிர்மறையான உள் மன குரல்தான்.  பல்வேறு ஆராய்ச்சிகளின்படியும், பல அறிஞர்கள், சாதனையாளர்களின் அனுபவப்படியும் ஆழ்மனதின் வியக்க வைக்கும் அற்புத சக்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அதன்படி உங்கள் நினைவு மனதில் எதை தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் அப்படியே கிரகித்து உங்கள் வாழ்க்கையில் உங்கள் கண்ணெதிரே நிஜ உலகில் நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.

சரி இனியும் ஒன்றும் தாமதம் ஆகிவிடவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் அருந்திக்கொண்டிருக்கும் விஷம் போன்ற இந்த எதிர்மறை உள் மன குரலுக்கு மாற்று மருந்து கொடுக்க வேண்டும். கொடுத்து விடலாம் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று.

நீங்கள் என்ன வகையான விஷம் குடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என தெரிந்தால்தான் அதற்குண்டான மாற்று மருந்தினை அருந்த முடியும். ஆகவே இந்த இணைப்பில் இருக்கும் சாம்பிள் எண்ணங்களில் எதுவெல்லாம் ஏற்கனவே உங்கள் உள் மன குரலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என குறித்துக் கொள்ளுங்கள். இது வெறும் சாம்பிள்தான். ஆனால் இதையொத்த இதை விட வேறுபட்ட பல எதிர்மறை குரல்கள் உங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.அடுத்த வாரம் ஜீபூம்பா வெளிவரும் வரை ஒரு நோட் போட்டு தனியாக உங்களது மேலும் பல உள் மன குரல்களை அடையாளம் கண்டு குறித்து வையுங்கள். மறந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளுக்குள் ஒலிப்பவைகளை கண்டுபிடிக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்கள் எதிரிகளை நீங்கள் ஒழித்து விட முடியும்.  எளிதாக ஜெயித்துவிட முடியும்.


விரைவில் சந்திப்போம்.


Monday, February 21, 2011

வலைமனை நூலகம் - கிளியோபாட்ரா - முகில்நூல் அனுபவம் - கிளியோபாட்ரா -  முகில்


மொத்தம் எழுநூறு கழுதைகள், அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி 'தொழுவம்' இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.எகிப்துக்கும் ரோமுக்கும் ஒரு அருமையான சரித்திர பயண அனுபவத்தை தருகிறது கிளியோபாட்ரா நூல். உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் என அறிமுகப்படுத்தப்படும் இந்த புத்தகம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஓர் அரசியை, அழகியை அவள் ஆளுமையை குறித்து அறியத்தரும் அருமையான அனுபவம். 

மொத்தம் அறுபது பேர், சீஸர் கொலை சதியில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. சீஸரின் உடம்பில் மொத்தம் இருபத்து மூன்று இடங்களில் காயங்கள். அதில் இரண்டாவதாக நெஞ்சில் விழுந்த கத்திக்குத்துதான் மிகவும் ஆழமானது. அதிலிருந்துதான் அதிக ரத்தம் வெளியேறியிருக்கிறது. அதனால்தான் அவர் இறந்தார். இது இறந்துபோன சீஸரின் உடலை ஆராய்ந்து பார்த்த அவரது மருத்துவர் அண்டிஸ்டியஸின் அறிக்கை. உலகின் முதல் போஸ்ட்-மார்ட்டம் அறிக்கை இதுதான்.
அழகையே தன் ஆயுதமாக கொண்டும், அதனுடன் கம்பீரம், நாகரிகம், நளினம், அலங்காரம், பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்து தன் அறிவாற்றலால் அந்த ஆயுதத்தை பிரயோகித்து நண்பர்களை உருவாக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் செய்த சரித்திரம் கண்ட வியக்க வைக்கும் ஆளுமை கிளியோபாட்ரா.

சீஸர், அகில்லெஸ், போம்பே, புரூட்டஸ், ஆண்டனி, தால்மிக்கள் என கிளியோபாட்ராவை சுற்றி நடைபெற்றிருக்கும் வரலாறு சம்பவங்கள் அனைத்தும் சுவையாக சொல்லப்பட்டிருப்பதால் படிப்பதற்கு விறுவிறுவென தாள்கள் நகர்கிறது.


'இரண்டு மாபெரும் தளபதிகள், தம் ராஜ்ஜியத்தை மறந்து, தம் மனைவியை, மக்களை மறந்து, தான் யார் என்பதையே மறந்து, வீரம், விவேகம் எல்லாம் மறந்து, தம் கடமைகளைத் துறந்து காதலியே கதி என்று கிளியோபாட்ராவிடம் சரணடைந்து கிடந்தார்கள் என்றால் அவள் சாதாரணமானவளாக இருக்கவே முடியாது, எப்படிப்பட்ட பேரழகியா இருக்க வேண்டும்' என்ற விவாதம் இன்றுவரை உயிரோடு இருக்கிறது. 'ஓர் ஆணை வீழ்த்த பேரழகியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை' - இப்படிப்பட்ட எதிர் விவாதமும் மரிக்கவில்லை.போர் முறைகள், கடல் போர்கள், படையெடுப்பு, அந்தப்புரம், ரோமின் செனட் சபை, எகிப்திய வீதிகள், நைல் நதியில் சுற்றுலா செல்லும் படகு என எந்த காட்சிகள் விவரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாமே நேரில் நிற்பதை போன்ற உணர்வினை வார்த்தைகளால் தோற்றுவிக்க வல்ல எழுத்துக்கள். வர்ணணைகள். இத்தகைய சிறப்பான எழுத்துக்கும், கோர்வையாக தந்திருக்கும் தகவலுக்காக மேற்கொண்ட ஆராய்சிக்களுக்காகவும் ஆசிரியர் முகிலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 சில பதங்களை * குறியிட்டு கீழே தனியாக விளக்கி இருக்கும் யுத்தி மிக அழகு. அதில் ஒன்றுதான் இந்த 'யூ டூ புரூட்டஸ்.'


'You too, Brutus?' இது தன்னுடைய ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதி புகழ்பெற்ற வசனம். புரூட்டஸும் தன்னைக் கத்தியால் குத்துவதைக் கண்ட சீஸர், அதிர்ச்சியுடன் 'என் மகனே. நீயுமா?' என்ற அர்த்தத்தில் சொல்வதாக எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர். பண்டைய சரித்திர ஆசிரியர்களான Plutarch, Suetonius இருவரும் சீஸர் இறப்பதற்கு முன் எதுவும் சொல்லவில்லை என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

அட்டை படம் மட்டும் ஏனோ சிம்பிளாக இருக்கிறது. விலையை 70 முதல் 80 ரூபாய்க்குள்ளாக வைத்திருக்கலாம். மற்றபடி கிளியோபாட்ரா - படிக்க. ரசிக்க, அறிந்து கொள்ள சுவையான வரலாற்று புத்தகம்.

___________________________

கிளியோபாட்ரா
ஆசிரியர் : முகில்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 90
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-582-0.html


சிகப்பு எழுத்துக்கள் புத்ககத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 

Wednesday, February 16, 2011

ஜீபூம்பா - 1புத்தகங்களில் படித்த, சுயமுன்னேற்ற பயிற்சி பட்டறைகளில் கற்ற, பார்த்த, உணர்ந்த, செயல்படுத்தி ரசித்த, அனுபவங்களை, நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்ல விரும்புகிறேன். இது எங்கேயோ யாரோ ஒருவருக்கு பயன்படும் ஆனாலும் மகிழ்ச்சி கொள்வேன். 
ஒரு கதையுடன் ஆரம்பிப்போம்.

முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.

 இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.

  முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென "பூமியின் ஆழத்தில் புதைத்துவிடலாம் சார்"  என மூஞ்சியில் பல்ப் எரிய சொன்னது.

முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும் கடைசி பெஞ்சு கடவுள்கள், வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு வைச்சுடுங்க என்றனர்.

இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார். ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார். அந்த  சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து புன்னகைத்தார் பிரம்மா.


***

ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக்கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது. 

ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.

சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே,  கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது.  இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா...  உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும்   நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.

*பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக்கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.

என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்.

மீண்டும் சந்திப்போம்

__________________________________________________________________________

Story of Brahma - Extracted from 'Mind Power' by Christian H Godefroy
Video - Visualization tool associated with the book 'The Secret' by Rhonda Byrne
Reference -  'The power of Subconscious Mind' by Dr.Joseph Murphy

__________________________________________________________________________

 Valaimanai Jeeboombaa - Motivational series by Sukumar SwaminathanFriday, February 11, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 11 02 11


கண்ணா லட்டு தின்ன ஆசையா?


புத்தக கண்காட்சி நடைபெற்ற வாரத்தில் இடையே வைரஸ் காய்ச்சலில் படுத்து விட்டதால் பல புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. நடப்பவை யாவும் நன்மைக்கே என்பதை போல நேற்று கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி கிளியரன்ஸ் புத்தக விற்பனை கண்காட்சிக்கு போயிருந்தேன். 'டேமேஜ் புக்ஸ்' என சீல் இடப்பட்டுள்ள புத்தகங்களை குறைந்த விலையில் விற்கிறார்கள். எனக்கு அலிபாபா குகைக்குள் நுழைந்து புதையலை பார்த்தது போல் இருந்தது. பல நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகங்களை எல்லாம் நினைத்து பார்க்க முடியாத விலை குறைவில் வாங்கினேன். மொத்தத்தில் ரூ.1,200 மதிப்புள்ள புத்தகங்களை வெறும் ரூ.240க்கே வாங்க முடிந்தது. சில புத்தகங்கள் புத்தம் புதியதாக இருக்கிறது. ஆனால் எதையும் டேமேஜ் என சொல்லிவிட முடியாத அளவில் நன்றாகத்தான் இருக்கிறது.   ரூ.90, ரூ.100, ரூ.200  மதிப்புள்ள புத்தகங்கள் எல்லாம் ரூ.10, ரூ.20, ரூ.30 போன்ற விலைகளில் கிடைக்கிறது. புத்தக பிரியர்கள் மிஸ் செய்யவே கூடாத கண்காட்சி. நடக்கும் இடம் டி.நகர் பேருந்து நிலையம் அருகே. சிவா விஷ்ணு ஆலயத்திற்கு நேர் எதிரே. எல்.ஆர்.சுவாமி ஹால், மைலாப்பூர் குளத்திற்கு அருகில்


'க'னா 'ஜெ'னா 'கே'னா


கேப்டனுக்கு இந்த தேர்தல் தலை தீபாவளி போலத்தான்.  புதுமாப்பிள்ளை ரேஞ்சுக்கு "தம்பி.. டீ இன்னும் வரல" என அலட்டலாக இருக்கிறார். ஆனால் 'க'னாவும் வேணாம்.  'ஜெ'னாவும் வேணாம் அதுக்கு பதில் தனியா நின்னு தவிதவிக்கிற 'கே' னாவுக்கு குத்துவோம் என ஒரு லட்சம் மக்களும் ஓட்டு குத்தியது இவரது 'தனி'த்தன்மைக்குதான்.  இனி இவர் இரண்டில் ஒன்றுடன் கூட்டணி சேர்ந்தால் உண்மையில் அது இவருக்கு சாதகமாக அமையுமா இல்லை பாதகமாக அமையுமா என்பது 2011 தேர்தலில் நடக்கப்போகும் பல ஆச்சரியங்களில் ஒன்று.


வேர்ல்டு கப்பு வருது ஓடுங்க ஓடுங்க

வேர்ல்டு கப் வருகிறது. ஆனால் முன்பெல்லாம் உள்ளே எழும் குதூகலமே இப்பொழுது இல்லை. வருடா வருடம் ஏதாவது ஒரு கப்பை வைத்து ஐ.சி.சி கல்லா கட்டுவதும் ஐ.சி.சியை விழுங்கும் ஐ.பி.எல்லின் அட்டகாசமும் கிரிக்கெட் மீதிருந்த மரியாதையை குறைத்துவிட்டன. இதில் இந்தியா தோற்றாலும் அடுத்த ஒரே வாரத்திற்குள் ஐ.பி.எல் வந்துவிடுவதால் தோனியின் கொடும்பாவி எரிப்போ, ஹர்பஜனின் வீடு மீது கல் விழும் சம்பவங்களோ நிகழ வாய்ப்பில்லை. 


 காதில் விழுந்தது

"சார் நாங்க ------- பேங்க்ல இருந்து பேசுறோம்... கிரெடிட் கார்டு ஆஃபர் பண்றோம்..."
  "மேடம்.. நான் ஆபிஸ்ல இருக்கேன் ஈவினிங் 7 மணிக்கு மேல கால் பண்ணுங்க..."
"சாரிங்க சார்.. 6 மணிக்கு பண்ணட்டுமா?"
  "அப்படியா உங்க மொபைல் நம்பர் கொடுங்க மேடம்.. நானே பண்றேன்..."
"இல்லை சார் மொபைல் நம்பர் பர்சனல்... இந்த ஆபிஸ் நம்பருக்கே பண்ணுங்க..."
"இது என்னங்க அநியாயமா இருக்கு... உங்க நம்பர் பர்சனல்னா அப்போ என் மொபைல் நம்பர் மட்டும் பப்ளிக்கா..  National Do Not Disturb Directory ல என் நம்பரை போட்டு வச்சும் எந்த தைரியத்துல போன் பண்றீங்க...?"


எஸ்.எம்.எஸ்

காதலி : "உங்களுக்கு தாடி வைச்சா நல்லா இருக்கும்"
காதலன் : "கழட்டி விட போறேன்னு நேரடியா சொல்லு"


மனைவி : "பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை அங்க போய் என்னன்னு பார்க்க கூடாதா?"
கணவன் : "நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"


Tags : Valaimanai, Valamanai Blog, Valaimanai Blogspot, Sukumar Swaminathan, Sukumarswamin, Feelings, Day-to-day events, Diary, Arasiyal, Captain vijakanth, World CUp 2011 ICC, IPL SEason 4, Forward SMS Joke

Tuesday, February 8, 2011

இந்தியர்கள் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?
ந்த கம்பெனிக்காரர்களோ, 'இது மிக நவீன தொழில்நுட்பம். இந்தியர்களால் கற்றுக்கொள்ள முடியாது' என்றார்கள். 'இதன் செலவும் மிக அதிகம். முதலில்,இந்தியாவில் தடுப்பு மருந்து எல்லாம் எதற்கு? உங்கள் நாட்டில்தான் ஜனத்தொகை இப்போதே அளவுக்கு மீறி இருக்கிறதே? அதில் சில ஆயிரம் பேர் செத்தால்தான் என்ன நஷ்டம்?'

நாற்காலியை உதைத்துக்கொண்டு எழுந்தார்: 'எண்ணி இரண்டே வருஷம். நானே இந்த வாக்ஸினைத் தயாரித்துக் காட்டுகிறேன் பார். இந்தியாவில், இந்தியர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகமே பார்க்கத்தான் போகிறது!'

தன்னந்தனி மனிதர் அவர்; அவருக்கோ, தடுப்பு ஊசிகள், மருந்துகள் பற்றி எதுவுமே தெரியாது. பேட்டரி, எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் புழங்கிக்கொண்டிருந்தவர் அவர். அந்த மனிதரால், ஹெபடைடிஸ் - பி தடுப்பு மருந்தின் விலை 750 லிருந்து வெறும் 50 ரூபாயாகக் குறைந்தது!

வரப்ரசாத் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஒரு சக்தி வாய்ந்த பன்னாட்டு கம்பெனியைப் புறமுதுகு காட்ட வைத்தார். உலக மார்க்கெட்டில் காமாலைத் தடுப்பு மருந்தின் விலையைச் சரிய வைத்தார்.
திருப்புமுனை - நூல் அனுபவம்


'இது சாதித்துக்காட்டிய 11 இந்திய நிறுவனங்களின் சாகசக் கதை.' என்கிற அறிமுகத்துடன் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருப்புமுனை புத்தகம் நான் சமீபத்தில் படித்த, முன்னேற, வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் ஹை-ரேட்டிங்கில் பரிந்துரை செய்யும் அருமையான புத்தகம்.

ஜெய்ப்பூரில் தைனிக் பாஸ்கர் தொடங்கிய அன்று 1,72,347 பிரதிகள் விற்றது. முதலில் திட்டமிட்டதோ நம்பர் 2 இடம்தான்; ஆனால் பாஸ்கர் அதிரடியாக நம்பர் 1 இடத்தையே பிடித்துவிட்டது!

பல வடக்கிந்திய மாநிலங்களில் ஆரம்பித்த ஒரே நாளில் மற்ற பாரம்பரிய பத்திரிக்கை ஜாம்பவான்களை நிலைகுலைய வைத்த தைனிக் பாஸ்கர் செய்தித்தாளின் துள்ளல் கதையுடன் துவங்கும் புத்தகம், மொத்தம் இதே போன்ற வெவ்வேறான 11 பிரமிக்க வைக்கும் கதைகளை கூறி நம்மை நமது சிந்தனைகளை முழுவதுமாக மாற்றி மனதிற்கு உரம் ஏற்றுகிறது.


பல நிறுவனங்களிடம் ஒரு பயம் உண்டு. புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தினால், ஏற்கனவே மார்க்கெட்டில் நன்றாக விற்றுக்கொண்டிருக்கும் நம் பழைய தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்... திடீரென்று ஒரு நாள் வெளியிலிருந்து ஒருவர் நுழைவார். புத்தம் புதிதாக எதையோ கொண்டு வந்து, மொத்த மார்க்கெட்டையும் அள்ளிக்கொண்டு போய்விடுவார்.


எப்படி ஒரு ஐடியா, ஒரு கனவு, ஒரு குறிக்கோள் 'முடியாது' என உலகம் நினைத்து வந்த விஷயங்களை சுக்குநூறாக உடைக்கிறது என்பதை பல புத்தங்களில் படித்திருப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் தனித்தன்மை என்னவெனில் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் எங்கோ அமெரிக்க ஆய்வு கூடத்திலோ, ஆஸ்திரேலிய நிறுவனத்திலோ நடந்தவை அல்ல. திருச்சியில், சென்னையில், சூரத்தில் என நமது மண்ணில் நமக்கு வெகு அருகாமையில் நடந்தவைகளாகும்.மாபெரும் ராட்சசர்களைப் பண பலம், படை பலத்தால் வெல்ல முடியாது. ஆனால் ஐடியாக்களால் அடித்து வீழ்த்தவிட முடியும்! 


பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒளி தருவதில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அரவிந்த் கண் மருத்துவமனை, மாபெரும் சந்தையில் 'சிக்'கென புகுந்து பெரும் நிறுவனங்களை தடுமாற வைத்த கவின் கேர், விவசாயகளிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஐடிசி ஐபிடி, இந்தியர்கள் உள்ளதை செய்வார்கள் புதியதாக உருவாக்க மாட்டார்கள் என்கிற கருத்தை உடைத்த பாஷ் இந்தியா, கடமை தவறாத காவல் அதிகாரிகளை திரையிலேயே பார்த்திருந்த நமக்கு நிஜத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார் என சொல்லும் திருச்சி காவல் துறை திரிபாதி, ஃபைனான்ஸ் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய சோழா வாகன பைனான்ஸ், பற்பல சவால்களை எதிர்கொண்டு மெல்லிய கேஸ் உள்ளே வாட்சை உருவாக்கிய டைட்டன் எட்ஜ், தடுப்பு மருந்துகளில் உலகத்தையே தும்மல் போட வைத்த சாந்தா பயோடெக், பிளாக் நோய் தாக்கி நிலைகுலைந்த சூரத் நகராட்சியை முன்மாதிரியாக மாற்றிய ராவ், இன்வெர்ட்டர் துறையில் கலக்கிய சு-காம் என அனைத்தும் ஒவ்வொரு விதமான புரட்சிக்கதைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறிக்கோள், பாதை, பயணம், சவால், வெற்றி என புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது அறிவு கிடங்கில் உயரும் தகவல்களுடன் மனதில் எழும் தெம்பும் அதிகமாக இருக்கும்.


நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது; அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

புத்தகத்தின் ஆசிரியர் - போரஸ் முன்ஷி. எடுத்துக்கொண்டுள்ள சிறப்பான பணிக்காகவும் படைத்துள்ள அருமையான புத்தகத்திற்காகவும் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.நம்மில் பல பேருக்கு, ஏதோ கெட்டது நேர்ந்துவிட்டது என்பதால் அதிகம் பாதிப்பு கிடையாது. 'இனிமேல் நமக்கு இதுதான் நிரந்தரம்' என்று நினைத்துக்கொண்டு, கெட்டதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமே, அதுதான் நம்மை முடக்கிப்போடுகிறது.


'தமிழில் : ராமன் ராஜா' என அட்டையில் குறிப்பிட்டிருக்காவிட்டால் இது ஒரு மொழி மாற்று புத்தகம் என அறிய வாய்ப்பே இல்லாத அளவிற்கு மொழி ஆளுமை கம்பீரமாக இருக்கிறது. கருத்துக்கள் துல்லியமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளதற்கு ராமன் ராஜா சிறப்பு பாராட்டுதல்களுக்குரியவர்.

புத்தகத்தன் வடிவமைப்பு அழகாக உள்ளது. கிரே நிறத்தில் ஆங்காங்கே கதையை நிறுத்தி ஆய்வு செய்யும் யுத்தி அழகு.


உங்களால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள வேலை, உங்கள் நிறுவனம், தொழில்துறை அல்லது நாடு நகரத்தைக்கூட மாற்ற முடியும். இன்றைக்கு, இப்போது நீங்கள் செய்யும் உத்தியோகத்திலேயே மொத்த உலகத்தையும் மாற்ற முடியும்!

தொழில்முனைவோர், நிறுவன அதிகாரிகள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாது முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஒரு கட்டத்தில் இருக்கிற வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கி விடாலாமா என்கிற அளவிற்கு உற்சாகம் கொடுத்து சிந்திக்க வைத்துவிடும் வல்லமை கொண்டது இது.

சின்ன வேலை, சின்னப்பொறுப்பு என்று எதுவும் கிடையாது. எந்த ஒரு வேலையையும் சரியான கோணத்தில அணுகினாலே போதும்;  நம்மால் மனித நாகரிகத்தையே மாற்ற முடியும்.

இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் அது இந்த புத்தகத்திற்கு குறைவாகவே அமையும் என்பதால், வாங்கி படியுங்கள். ஜொலியுங்கள்! 

----------------------------------------

திருப்புமுனை 
ஆசிரியர் போரஸ் முன்ஷி
தமிழில் ராமன் ராஜா
விலை ரூ.150
வெளியீடு கிழக்கு பதிப்பகம்குறிப்பு : நீல வண்ண எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்.


Monday, February 7, 2011

ஆஹா ஓஹோ யுத்தம் செய்


ஞ்சாதே' ஏற்படுத்திய பிரமிப்பே இன்னும் எனக்கு அடங்கவில்லை. அதற்குள்ளாக 'யுத்தம் செய்'. சமூகத்தில் ரகசியமாக நடக்கும் குற்றங்கள். இதனால் பாதிக்கப்படும் சாதாரண பெண்கள். இவ்வாறாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறிப்பாக இளம்பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிதும் ஆபாசம் கலக்காமல் 'அஞ்சாதே'விற்கு அடுத்து சொல்லப்பட்டிருக்கும் கதை 'யுத்தம் செய்'. அவ்வகையில் இதைப்போன்ற படங்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிஷ்கினுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.

கதை


இதைப்போன்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் கொண்ட திரில்லர் கதையை சொல்வது மகா பாவம். படம் பார்க்கும் முன்னர் என்னதான் கதையை படிக்காமல் நான் தவிர்த்தாலும் படித்த விமர்சனங்களில் வந்த மற்ற ஒன்றிரண்டு வரிகளாலேயே சில முடிச்சுக்கள் படம் பார்க்கும்பொழுது புரிபட்டு போனதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸோ படம் பார்க்க செல்பவர்கள் தயவு செய்து எங்கும் கதையை படிக்க வேண்டாம்.நடிப்பு

  முதன்முறையாக அமைதியான ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரத்தில் சேரன் தான் ஏற்ற பாத்திரத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். அந்த இடைவேளைக்கு முன்னர் வரும் சண்டையிலும் சரி அதற்கு முன்பாக மெதுவாக வீட்டை விட்டு கிளம்பி நடப்பதிலும் சரி நாம் தமிழ் திரையில் முன்னெப்போதும் பார்த்திராத காவல் அதிகாரியாக அமைதியாக சேரன் அசத்துகிறார்.  பஞ்ச் பேசி நாட்டைக் கெடுக்காத, கலர் கலராக வலம் வந்து கண்ணைக்கெடுக்காத ஹீரோ தேடுபவர்களுக்கு சேரன் நல்ல விடை.

  ஒய்.ஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல். முதன்முதலில் காவல் நிலையத்தில் குறுகி செய்தறியாது குடும்பத்துடன் நிற்கும் காட்சியில் வாவ்.. லவ்லி சார். அவரது மனைவியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது ஆளுமை முக்கியமானது.

  இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து உடனான சேரனின் முதல் விசாரணை காட்சியில் இசக்கியாக நடிதது இருப்பவரது பெர்ஃபார்மென்ஸ் அபாரம். வெறுப்பு, பயம், கோபத்தை அட்டகாசமாக பாடி லாங்குவேஜில் காட்டி அசத்துகிறார் மனிதர்.


  ஜுதாஸாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றுமொரு ஹைலைட்.  முதல் காட்சியில் தூக்கத்திலிருந்து எழும்பி வருவது முதற்கொண்டு கடைசியில் மூச்சிறைத்துக்கொண்டே பேசுவது வரை வரும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார். 


  தீபா ஷா நாட் பேட். மாணிக்க விநாயகம் அருமையான பெர்பார்மன்ஸ். செல்வா இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. இன்னும் பல பல பெயர் தெரியாதவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்திருப்பதால் படம் பளிச்சிடுகிறது.இசை


இசை அருமை என ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டால் அது ரொம்பவும் கம்மி.
அட்டகாசமான பின்னணி இசை பாஸ். சி.டி.யில் Box Theme என வரும் இசை, படத்தில் டென்ஷனை ஏற்றுகிறது. Chaos Theme மெல்லிய சோகம் இழையோட புதிர் உணர்வினை மனதுக்குள் விளைவிக்கிறது. Hope Theme இசை வரும் காட்சி படத்தில் நெகிழ்ச்சியை ஊற்றுகிறது. 'கன்னித்தீவு பெண்ணா' பாடல் மட்டும் அதன் மூதாதையர்களான 'வாலமீனு' ('ல' வா இல்லை 'ள' வா பாஸ்?) மற்றும் 'கத்தாழ கண்ணால' அளவிற்கு ஜொலிக்காது என நினைக்கிறேன்.


நெகிழ்ச்சி

  கிளைமேக்ஸ் ரொம்பவும் நெகிழ்ச்சியானது, சேரனின் தங்கையை சுஜா என ஒய்.ஜியும், அவரது மனைவியும் அழைத்து கத்தியை உடனடியாக கீழே போடுவது மிஷ்கினின் டிரேட்மார்க் சென்டிமென்ட் பஞ்ச்.

  'அஞ்சாதே'வில் கடத்தப்பட்டு பின் காரில் இருந்து லுங்கியுடன் இறக்கி விடப்படும் இளம்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நரேன் ஓடிச்செல்வாரே அந்த ஃபீல் இந்த படத்தின் கிளைமேக்சில் வருகிறது.

  படத்தின் இசை டாப் டக்கர். பிண்ணனி இசை சரியான இடங்களில் மிகச்சரியாக செட் ஆகியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  "கொஞ்சம் அறிவை வச்சுகிட்டு நீங்களே இவ்வளவு பண்ண முடியும்னா நிறைய அறிவை வச்சுகிட்டு நாங்க எவ்வளோ பண்ண முடியும்" என ஜெயப்பிரகாஷ் சொல்லும் இடம் உட்பட வசனமும் படத்தில் டாப்.


விஷுவல்ஸ்


  காட்சியமைப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. இன்ஸ்பெக்டரை சேரன் விசாரிக்கையில் சட்டென ஒய்.ஜி புகார் அளிக்க வரும் காட்சியை பிளாஷ்பேக்கில் மாற்றி டக்கென டீ கொண்டு வரும் நிகழ்காலத்துக்கு திரும்பி வருவது லவ்லி விஷுவல்.


  அந்த சிறுமி ஜன்னலோரம் நின்று பழைய காட்சியை நினைவுபடுத்தி சட்டென ஆமா சார் இன்னொருத்தர் ஆட்டோவில் இருந்தார் என சொல்வதும் அருமை.


  அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனை இருளில் காண்பித்து கரண்ட் கட் ஆகி சட்டென பகல் பொழுதிற்கு மாறுவது அருமை.


  கடைசியில் அந்த சிறுவன் விமான நிலைய எஸ்கலேட்டரில் ஏறி விடியலை நோக்கி செல்வது போன்ற காட்சியமைப்பில் இத்தனை சஸ்பென்ஸ், இத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து நெகிழ்ச்சியான தீர்வை சொல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் மனதிற்கு இதமாய் அமைந்துள்ளது.


 கதையின் முக்கிய முடிச்சான பீப் ஷோ நிகழ்வுகளை மற்ற எந்த சாதாரண கமர்ஷியல் தமிழ் சினிமாவை விடவும் டீசன்டாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.நெருடல்

  என்னதான் பெண்ணுக்காக பழி வாங்கினாலும் குடும்பத்தினர் அனைவரும் புரஃபஷனல் கில்லர் போல் கருப்பு உடையணிவது கொஞ்சம் இடிக்கிறது.

  முதல் பாதியில் ஏகப்பட்ட பெயர்கள், ஏகப்பட்ட முடிச்சுக்கள், விசாரணைகள் என கொஞ்சம் கவனம் தப்பிவிட்டாலும் குழப்பிவிடக்கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது. 

  அவ்வளவு நாள் தேடிய ங்கை கிடைக்க வாய்ப்பு வருகிறது என்றாலும் உயர் அதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக எதுவும் செய்யாமல் சேரன் வீட்டில் போய் அமைதியாய் உட்காருவது இடிக்கிறது.

ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும் தரப்பட்டுள்ள நல்ல படைப்பிற்காகவும் இதற்கு மேல் இங்கு எதையும் பட்டியிலிட விரும்பவில்லை.


__________________________

ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு என டார்ச்சர் செய்யும் தமிழ் சினிமாவில் கொடுத்த காசிற்கு எரிச்சல் படாமல் ஆத்ம திருப்தியுடன் ரசிகன் வெளியில் வரும் படங்களில் யுத்தம் செய் முக்கிய இடம் பிடிக்கும்.