கட் அடித்துவிட்டு காலை, மேட்னி காட்சிகளை ஜெக ஜாலியாய் வகுப்பினரோடு கொண்டாட விரும்பும் மாணவர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்வார்கள். இனிது இனிது அவர்களுக்கு ரொம்பும் இனிக்கும்.
படம் படு ஃபிரஷ்ஷாக இருக்கிறது. ஒப்பனை, காட்சியமைப்புகள், லொக்கேஷன், வசனம், ஒளிப்பதிவு, இசை, உடைகள் என கண்ணுக்கும் காதிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான படம். ஒளிப்பதிந்து இயக்கியிருக்கும் குகன் அசத்தியிருக்கிறார்.
சித்து (அருண் ஈஸ்வரன்), மது (ரேஷ்மி மேனன்), விமல் (விமல்), அப்பு (பென்னாஸ்), டைசன் (நாராயண்), ஷ்ராவ்ஸ் (சோனியா), ஷங்கர் (சரண் சர்மா) அனைவரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். ஒருவரும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம்.
அதிலும் என்னுடைய ஃபேவரைட், விமல் மற்றும் டைசன். விமல் பல காமெடியில் சரளமாக பின்னுகிறார். (நல்லா வருவீங்க தம்பி). அடுத்து டைசன் ஒருவித இன்னொசன்ட்டாக அவர் நடித்திருப்பது ரொம்பவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
பையா படத்தில் லெப்ட் ஓரமாய் நிற்க வைக்கப்பட்ட சோனியாவிற்கு இதில் நல்ல ரோல். காண்பவர் மனதை பாதிக்கும் அளவிற்கு அவர் அழகு. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எங்கேயோ போய்விடுவார்.
படத்தில் எல்லோரையும் விட ஷ்ராவ்ஸ் என்கிற சோனியாதான் அழகு என்றாலும் கதாநாயகியும் அதிக அலட்டல் இல்லாத அழகாக இருக்கிறார். (லட்டு மாதிரி இருக்காங்க ஆபிசர்). நமது பக்கத்து கல்லூரி பெண் போல் இருக்கிறார் (எவ்வளவு நாள்தான் பக்கத்து வீட்டு பெண் போல என சொல்வது?) அதுவும் புடவை கட்டி வரும் காட்சியில் ஆஹா ஓஹோ என ஆளாளுக்கு அழகு அழகு என புகழும்பொழுது நமக்கும் அவர் அழகாய் தெரியும் விதத்தில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, மேக்கப் என கவனித்து செதுக்கியிருப்பது சிறப்பு.
படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களும் சின்ன ரோல்தானே என்றில்லாமல் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக குண்டு சீனியர், பால்பாண்டி, ஆங்கில டீச்சர், எக்ஜட்ரா எக்ஜட்ரா...
அந்த சீனியர் குண்டு பையன் அறிமுக ரேகிங் காட்சிகளில் ஜுனியர் மாணவனை படுத்துவதும், அவனையே கடைசியில் இன்டெர்வியூவில் இங்கிலீஷ்ல ஏதாவது பேசுடா என பேசவைத்து நீ என் காலேஜ் பையன்டா உன்னை எப்படிடா விட்டுக்கொடுப்பேன் என கண்கலங்குவதும் மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார்.
பால்பாண்டி கேரக்டரை அழ விட்டு கேமரா சுத்தும் காட்சியில் மனிதர் சத்தியமாய் உருக்குகிறார். ஆனால் நடுவில் அவர் முன்னேறுவதை போன்ற காட்சிகளை அமைத்து கடைசி இன்டர்வியூவில் தேர்வாவதை காண்பித்திருந்தால் படத்தின் கதைக்கு (?) வலு சேர்திருக்கும்.
இவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் கொஞ்சம் கூட சொதப்பாமல் நடித்திருப்பது சிறப்பு. ஆனால் என்னதான் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கதை திரைக்கதை ஏதாவது மருந்துக்காவது இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
இனிது இனிது. பாசிட்டிவ்வான படம். அதுக்காக ரொம்பவும் பாசிட்டிவ்வாக சில காட்சிகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
முதல் நாள் கல்லூரி அறிமுக நிகழ்ச்சியில் அடுத்து பாட வேண்டும் என டென்ஷனோடு அமர்ந்திருக்கும் கதாநாயகியின் கையை சட்டென ஹீரோ பிடித்து அவரை கூல் செய்கிறாராம். ஹீரோவின் பாசிட்டிவ் அப்ரோச் சரி தான் பாஸ். ஆனா நிஜத்தில் இதுபோல யாராவது செய்தால் சட்டென அந்த பிகர் காலில் அணிந்திருக்கும் பேட்டாவை கழட்டி பட்டென விளாசியிருக்கும். சரி ஏதோ சினிமாதான் என்றாலும் அதுக்காக இப்படியா. நாங்களும் காலேஜ் எல்லாம் படிச்சிதான வந்திருக்கோம்.
மற்றொரு பாசிட்டிவ் விஷயம் ஹீரோயினியின் அப்பா அம்மா. படத்தில் ஹீரோவும், ஹீரோயினியும் தன்னந்தனியாக கம்பைன் ஸ்டடிஸ் செய்ய விடும் அளவிற்கும், அடிபட்டு வரும் ஹீரோ பட்டாளங்களுக்கு கதநாயகி டெட்டால் போட்டு விடும் அளவிற்கும், ஊடலில் இருக்கும் போது டூ யு மிஸ் ஹெர் என கேட்பதும் என அவர்கள் பயங்கர பாசிட்டிவ். ஷஷப்ப்ப்பா... ஃபிகர்ஸோட அப்பா அம்மா எப்படியெல்லாம் ஒரு மனுசனை படுத்தி எடுப்பாங்கன்னு பட்டு அனுபவிச்ச எவனுக்கும் இந்த சீன் எல்லாம் பார்த்தா பத்திகிட்டு எரியும். சரி அதை விடுங்க. அது நமக்கு தேவையில்லாத விஷயம்.
அப்புறம் ஹீரோயின் பணக்கார வீட்டுப்பெண் வீடு பெரியதாய் இருக்கிறது. ஆனால் ஹீரோ பணக்காரரா இல்லை ஏழையா தெரியவில்லை ஏனென்றால் ஹீரோவின் வீடென்றால் அவர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.
ஹீரோ, ஹீரோயின் அவ்வளவு காலங்கள் பேசிக்கொள்ளவில்லை என்பதற்கான காரணம் சத்தியமாக வலுவானதாக இல்லை. அப்புறம் சீனியர் மாணவர் கதாநாயகியை கட்டாயப்படுத்தி காபி டேவிற்கு கூப்பிட்டு செல்வது எல்லாம் டூ மச்சுங்க.. தமிழ்நாட்டு மாணவிகள் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்...
எனக்கு தெரிந்தவரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்பொழுது மாணவிகளிடம் பேசினாலே ஃபைன் என்கிற அளவிற்கெல்லாம் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வரும் கல்லூரியில் இஷ்டத்திற்கு ஆட்டம் பாட்டம், கன்னா பின்னாவென்று ராகிங், இரவு நேரங்களில் கேம்பஸில் சந்திக்கிறார்கள், மொக்கை இன்டர்வியூக்கள் வைத்து வேலை கொடுக்கிறார்கள் என அவதார் படத்தில் வரும் கற்பனை உலகம் போன்றதொரு ஃபேன்டஸி காலேஜ் போல காட்டப்படுகிறது. ஒருவேளை நிஜமாகவே இது போன்றதொரு கல்லூரி இருக்கிறது என்றால் இப்பவே எங்கிருக்குன்னு சொல்லுங்க, நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் பட்டப்படிப்பு படிக்கலாமுன்னு இருக்கேன்.
படத்தில் பாடல்கள் அதிகம் வருவது போன்றதொரு ஃபீலிங். இரண்டு மூன்று பாடல்கள் நன்றாக இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை.
ரைட்டு.. இதெல்லாம் சின்ன சின்ன சறுக்கல்கள் என்றாலும் கதை எல்லாம் வேணாம் மூன்று மணி நேரம் போர் அடிக்காம இருந்தா போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக திரையரங்கம் போய் பார்க்க வேண்டிய படம் இனிது இனிது.