Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, June 3, 2016

இறைவி - புரிந்ததும் புரியாததும்



"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...?"

"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற.."

"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. படம் நல்லா இருந்தா தங்கு தங்குன்னு குதிப்பீங்க.. மொக்கையா இருந்தா அமைதியா இருப்பீங்க.. இப்ப வந்து பத்து நிமிஷமா வாயே திறக்கலையே அதான் கேட்டேன்."

"ஹே.. சே... சே.. அப்படி சொல்றியா,,, படம் மொக்கைலாம் இல்ல.. நல்ல கதையுள்ள படமே வர்றது இல்லன்னு சொல்றாங்கல்ல.. அதுக்கு நல்ல துவக்கமா.. பேய், காமெடி டெம்ப்ளேட் படங்களில் இருந்து மாறுதலா ஹெவியா ஒரு நல்ல டிராமா மூவியா இறைவியை எடுத்துக்கலாம்.."

"அப்போ ரொம்ப நல்லா இருக்கா,,"

"அதுக்குன்னு அப்படியும் சொல்லிட முடியாது... அங்கங்க கொஞ்சம் ஸ்லோ, வயலன்ஸ்ன்னு சில மைனஸ்களும் இருக்கு.."

"அப்போ ஆவரேஜா.. ஒருவாட்டி பார்க்கலாம் வகை படமா.."

"நோ.. நோ..  இந்த படத்தை விமர்சனம்லாம் பண்ண மனசு வரலை... இது ஒரு அனுபவம்.. நல்ல பவர்புல் காஸ்டிங், ஸ்டிராங்கான கதை, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பார்க்கிற மனநிலை இருந்தா நல்ல ரசனையான புராடக்ட் இந்த படம். பொதுவா நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாமா மோசம்னும் சொல்ல முடியாத வகை படங்களுக்கு வேணா ஆவரேஜ், ஒன் டைம் வாட்ச்னு அடிச்சிவிடலாம்... ஆனா இந்த படத்தை கூட்டத்தோட கூட்டமா அப்படி சொல்ல முடியாது."

"வேற எப்படி சொல்லலாம்..?"

"அதான் புரியாம பத்து நிமிஷமா யோசிட்டு இருக்கேன்!"

"அடப்பாவமே...  அப்போ கதையையாச்சும் சொல்லுங்க எனக்காச்சும் புரியுதா பார்ப்போம்.."

"அதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரும்மா.."

"யாரு..??"

"கார்த்திக் சுப்புராஜ்"

"அதாரு.,..??"

"படத்தோட டைரக்டர்"

"உங்கக்கிட்ட எப்போ சொன்னாரு... உங்க பேஸ்புக் பிரண்டாக்கும்.."

"இதென்னடா சோதனை..  பொதுவா பிரஸ் நோட்ல சொல்லியிருக்காரும்மா.."

"யாரோ எவரோ பிரஸ்ல சொன்னதுலாம் ஞாபகம் இருக்கு.. படம் முடிஞ்சு நான் என்னென்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்.. அதுல எத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாருங்க.. இத்தனைக்கும் காலையில கழுதை மாதிரி கத்தி கத்தி அனுப்பினேன்... அஞ்சு பொருள் சொன்னா.. அதுல நாலு பொருள் காணும்.. "

"ஐயாம் வெரி சாரிம்மா.. இறைவி பார்த்தா ஒரு வாரமாச்சும் மனசு பாதிக்கும்னு சொன்னாங்க.. அதான் படம் தந்த பாதிப்புல மறந்துட்டேன் போல..."

"யாரு சொன்னாங்க.."

"அவங்களே மேக்கிங்-வெப் சீரிஸ்ல சொல்லிக்கிட்டாங்க..."

"ஏங்க படுத்துறீங்க..  எல்லா படமும் பார்க்க மாட்டேன்.. இது சயின்ஸ் பிக்ஷன் படம் சூர்யா நடிச்சது.. இது ஜிகர்தண்டா எடுத்தவரு படம்.. இது அப்படியாக்கும.. ஆணை பூனைன்னு ஒவ்வொரு படத்துக்கும் என்னத்தையாவது சொல்லிட்டு போக வேண்டியது.. சினிமான்னா எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சொல்ற பொருள் வாங்கிட்டு வர மட்டும் மறந்து போயிடுது இல்ல... சொல்றதை காதுல வாங்குறதில்லை.. என்ன பார்த்தா எப்படித்தான் தெரியுதோ.. ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல.."

"அய்யோ.. இப்ப புரிஞ்சிடுச்சு.... இறைவிலயும் இதைத்தான்..."

"அடிங்ங்ங்ங்ங்....."

Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.

Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html


Thursday, November 15, 2012

விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை



"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.

உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.

ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.

இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.

எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.

ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.

எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம்  சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!

வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!

Friday, January 13, 2012

நண்பன் இஸ் வெல்





காதல்,  கதையின் மையக்கருவாக இல்லாத படங்கள் தமிழில் குறைவு. அதிலும் ஃபீல் குட் வகை படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து காட்சி ஊடகங்களில் நேரத்தை அதிகம் செலவிடும் காலகட்டத்தில் ஒரு சினிமா, அதுவும் ஒரு தமிழ் சினிமாவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஒரு குற்றத்தை கிரியேட்டிவ்வாக புதிய முறையில் செய்யலாம் என்பதையே நாம் கற்க முடியும்.

ஒரு ஹீரோ, ரெண்டு ஹீரோயின், வில்லன் அப்புறம் கிளைமாக்ஸ் இடையிடையே பாடல்கள் என்கிற உருப்படாத திரை இலக்கணத்தை மீறி தமிழில் படங்கள் வருவது அரிது. அதிலும் அப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹிட் ஆவது அதனினும் அரிது.

இவ்வாறான நிலையில் வெற்று இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ஒரு படத்தை கொடுக்க முதன்முறையாக ஷங்கரும், மாஸ் ஹீரோவான விஜய்யும் முன்வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.

தற்போதைய கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்தும் அது மாணவர்களின் பால் உண்டாக்கும் தாக்கத்தையும், இதற்கான மாற்று வழிகளையும் மையமாக வைத்து இன்னபிற பொழுபோக்கு சமாச்சாரங்களை சேர்த்துக்கொண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ்,  கெட்ட ஹிட் ஆகி பட்டையை கிளப்பிய படம். இன்று சீனாவில் கூட பல கல்லூரிகள் 3 இடியட்ஸ் படத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன என்றால் அக்கதையின் வலு குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

அப்படியாகப்பட்ட டபுள் ஸ்டராங் கருத்துள்ள, படு சுவாரஸ்யமான நடையில் செல்லும் மெகா ஹிட்டான படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்ததற்கே ஷங்கர் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ்  பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.

தமிழக மக்கள் தொகையில் 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் சொற்ப சதவிகதத்திலேயே இருப்பார்கள் என்பதால், ஷங்கர் எடுப்பதன் மூலமும், விஜய் நடிப்பதன் மூலமும் படத்தின் அற்புதமான கருத்துக்கள் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு போய் சேரப் போகிறது குறித்து மகிழ்ச்சியே.

ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் அமீர் - விஜய், சத்யராஜ் -  இரானி, மாதவன் - ஸ்ரீகாந்த் என ஒப்பீட்டு பார்வை இல்லாமல் பார்க்க முடிந்தால் நண்பனை ரசிக்கலாம்.  3 இடியட்ஸ் பார்க்காதவர்களுக்கு அந்தப் பிரச்சினை கூட இல்லை. இந்த படம் சுவையாகவும், நல்ல பல விஷயங்களை அறியத்தரும் புத்தகமாகவும் இருக்கும். இடையிடையே இலியான இடுப்பை ரசித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

முதல் நாள் காட்சி -  சென்னை ஏ.ஜி.எஸ் திரையரங்கம்.




■  காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக சமயங்களில் விஜய்யை இவ்வளவு க்யூட்டாக அமைதியாக பார்த்ததாக ஞாபகம். அப்பாடா....  ஷங்கர் யாருடனாவது இணைந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு சம்மந்தப்பட்ட நடிகரை வைத்து பிரமிப்பினை படத்தில் காட்டுவார்.   பல வருடங்கள் கழித்து அமைதியாக வரும் விஜய்யை பார்த்து நண்பனிலும் அதே பிரமிப்பு நமக்கு ஏற்படுகிறது.

ஒரு ஸ்டூடன்ட்டாக மட்டும் விஜய் கொஞ்சம் இடறுகிறார். டொக்கோமா விளம்பரத்தில் கூட செம யூத்தாக இருந்தாரே...? எது எப்படியோ... விஜய் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் எஸ்.எம்.எஸ் ஜோக்குகளே அழிந்து விடும் ஆபத்தும் உள்ளது.

■  இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல படத்தில் வெறித்தனமாக விளாசி இருப்பவர் சத்யன் ஒருவர் மட்டுமே. படத்தை தூக்கி நிறுத்துகிறார். சத்யராஜும் தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  மாணவ தோற்றத்திற்கு மூவரில் சூப்பராக ஃபிட் ஆகிறவர் ஜீவா மட்டுமே. அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர்.  ஸ்ரீகாந்திற்கு இது டூ ஆர் டை மேட்ச் மாதிரி. திரையுலகில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் இந்த படத்தையே நம்பி உள்ளதால், கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் சொதப்பாமல் இயன்ற அளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  நடிப்புக்கு ஆள் எடுங்கன்னா, இடுப்புக்கு ஆள் எடுத்த வகையில் இலியானாவும் இருக்கிறார். பாவம் நெஞ்செலும்புகள் தெரிகிறது.  சிவாஜியில் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஷங்கர் ஹீரோயினை மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது அக்காவாக வந்த அனுஹ்யாவே அவரை விட எனக்கு அழகாகத்தான் தெரிந்தார். சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் லூஸ்ல விடுங்க.

உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) எந்திரன் படத்திற்கு பின்னர் ஷங்கர் ஒரு ரீமேக் படம் செய்திருக்கிறார்.  அதுவும் கொஞ்சம் கூட மாற்றாமல் அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்புகள்.  தன்னை பாதித்த ஒரு பாசிட்டிவ், ஃபீல் குட் படத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என தனது அத்தனை இமேஜுகளையும் மறந்து விட்டு நண்பன் தந்திருக்கும் இயக்குனர் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!






Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai

Thursday, October 27, 2011

வேலாயுதம் - ஏழாம் அறிவு - டிரா மேட்ச்




அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றுதான் இல்லை. மற்றபடி  உணர்வுப்பூர்வமாக இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மோதிய இரண்டு பெரிய படங்கள் ஏழாம் அறிவும் வேலாயுதமும்.


சூர்யாவை விட விஜய்க்கு அதிகம் இருக்கும் மாஸ் ஃபேக்டர், ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேனர், எம்.ராஜா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்த நிலையில் விஜய் ஆண்டனி சிக்சர்கள் அடித்திருந்தது என வேலாயுதத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியிருந்தது.


அதே நிலையில், நல்ல விளம்பரங்கள், கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்ட ஹைப்,  போதி தர்மன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஹாலிவுட் பட கதைகள் போன்ற தோற்றத்தை விளைவித்த டிரைலர்,  நிறைய தியேட்டர்களை பிடித்தது, முன்கூட்டியே புக்கிங் ஆரம்பித்தது, ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தது என வேலாயுதத்தை விட ஒருபடி ஏழாம் அறிவுக்கே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

25ம் தேதி இரவு கமலாவில் ஏழாம் அறிவு பார்த்தேன். சொல்லப்பட்டிருக்கும் செய்திக்காக சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் இது என்பது என் கருத்து. 

பாடல்களை திரையில் பார்க்க விரும்பிய ஒரே காரணத்திற்காக 26ம் தேதி தீபாவளியன்று காலை பி.வி.ஆரில் வேலாயுதம் பார்த்தேன்.  இதுவரை எந்த விஜய் படத்துக்கும் முதல்நாள் போனதில்லை.

விஜய் படம் பார்க்கிறோம் என மனதை தயார் செய்து கொண்டு உட்கார்ந்தால், ஆச்சரியப்படும் விதமாக முதல் பாதி முழுவதும் கலக்கலான காமெடியுடன் செம ஜாலியாக சென்றது வேலாயுதம்.  இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் அதிகமான ஆக்ஷன் மசாலாவினால் நெடி ஏறுகிறது.

கொடுக்கும் காசுக்கு மேலாகவே விஜய் ஆண்டனியும், சந்தானமும் திருப்திப்படுத்தி விடுகிறார்கள்.  முதல் பாதியின் கிராமத்து எபிசோடினை சொல்லிய விதம் செம அட்டகாசம்.  சென்னைக்கு வந்ததும் சந்தானமும் சேர்ந்துவிடுவதால் படம் இன்னும் வேகத்தில் பறக்கிறது. சுபாவின் வசனம் கண்டிப்பாக படத்திற்கு பெரிய பலம்.

மற்றுமொரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் கண்ணில் பூச்சி பறக்க விடாமல் எதேச்சையாக விஜய் சூப்பர் ஹீரோவாக உருமாறும் விதம் நிம்மதியான விஷயம். கிராமத்தில் அடிக்கும் லூட்டிகள், சந்தானத்துடன் அன்டர் பிளே, ஹன்சிகாவுடன் திணறுவது என கில்லிக்கு பிறகு விஜய்யின் காமெடி பசிக்கு வேலாயுதம் நல்ல தீனி போட்டிருக்கிறது.

படத்தில் விஜய், சந்தானத்திற்கு அடுத்து இயக்குனர் நம்பிய விஷயம் ஹன்சிகாவின் இடுப்பு.  அம்மணியை மாப்பிள்ளை, எங்கேயும் காதலை விட அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். மாமா மாமா என அவர் சுற்றி வருவது செம க்யூட். அவர் முன் ஜெனிலியா ஏதோ சுமாரான பிகர் போல் இருக்கிறார்.

எனக்கு வெகுவாக பிடித்திருந்த 'ரத்தத்தின் ரத்தமே..', 'சில்லாக்ஸ்', 'மொளச்சு மூணு..' பாடல்கள் சிறப்பாக திரையில் வந்திருக்கிறது.

இன்றைய அ.தி.மு.க. கட்சிக்கூட்டங்களில் "நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...." பாட்டு கட்டாயம் ஒலிப்பது போல் எதிர்காலத்தில் விஜய் கட்சிக்கூட்டங்களில் இந்த 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் அவசியம் அலறும். அதிலும் அந்த ஓ..ஓஹோ என வரும் ராகம் செம சூப்பர். எனக்கு பெர்சனலாக இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஆகவே மக்களே.. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு ஒருமுறை பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதனால் என்னைப்பொறுத்த வரை வேலாயுதமும் ஏழாம் அறிவுடன் டிரா ரிசல்ட் ஆகிறது.


பின்குறிப்பு : சத்தியமா நான் விஜய் ஃபேன் அல்ல என்பதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்ற :
http://valaimanai.blogspot.com/2011/10/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/08/blog-post.html
http://valaimanai.blogspot.com/2011/02/blog-post_23.html
http://valaimanai.blogspot.com/2010/12/blog-post_20.html




Velayudham Velayutham velayudam velayutam vijay ilaya thalabadhi vijay jaym m raja oscar ravichandran velayaudam vimarsanam blogger blog review valaipadhivu vimarsanam
velayaudam reivew by tamil blogger sukumar swaminathan

Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை





திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாரும் அனுப்பவேண்டாம் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்றிய கதைகளை நான் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிறைய கோபங்களும், சோகங்களும் கிடைக்கும்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'நான்' என தாமே சொல்வதாய் அமைத்திருக்கும் உத்தியால் நூல் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்கும் வாசகருக்குமான அன்னியோன்யம் இதனால்  அதிகரிக்கிறது.

இந்திய முதலாளிகள் சம்பளம் கொடுக்கும்போது இந்திய ரூபாயில் கணக்குச் சொல்லி "இந்த மாதிரி சம்பளம் எல்லாம் உனக்கு இந்தியாவில் கிடைக்குமா?" என நக்கலடித்தே கொடுப்பார்கள். நம்ம ஊர் அடிமைகளும் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடும். ஆனால் பெரும்பாலோருக்கு பிடிக்காமல் பிரச்சினையும் செய்துவிடுவார்கள். முதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு சென்று வாழ்க்கையை தொலைத்தவர்களது கதைகளும், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளும் புத்தகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிறைவாசம், மனித விற்பனை, வேலைகளில் துன்புறுதல் என பல உணர்ச்சிபூர்வமான கதைகள். சில நெகிழ வைக்கின்றன. சில அதிர வைக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சென்று வேலைபார்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்கார நாடுகளுக்கு செல்வதே எனப்புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் பங்களாதேஷ், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் நாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையும்  சீரியஸாகவும், சுவையாகவும் சொல்லிய விதம். புத்தகம் முடிந்த உடன், சட்டென்று முடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொரு பாகத்தை இணைத்திருக்கலாமோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிரியர் கே.ஆர்.பி செந்திலின் வெற்றி.

இந்த புத்தகம் என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. காரணம் இதன் முகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திருந்தேன். சிறப்பான தரத்தில் படைத்திருக்கும 'ழ' பதிப்பகத்தாருக்கும் இது போன்ற வீரியமிக்க எழுத்தை தந்திருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிரியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : ழ பதிப்பகம்
விலை ரூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் : பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

Tuesday, October 11, 2011

வர்ணம் - பார்க்க வேண்டிய படம்




ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பதிவர்களும் அழைக்கப்பட்ட மற்றுமொரு சிறப்புக் காட்சி.  பெரிய ஹீரோக்கள் இல்லாத.. ஏன், சிறிய ஹீரோக்களே கூட இல்லாத,  ஓப்பனிங் இல்லாத ஒரு லோ பட்ஜெட் படம். புதுமுக இயக்குனர்.

ஏதோ சுமாராய் இருந்தால் போதும் என மனதை தயார்படுத்திக்கொண்டு படம் பார்க்கத் துவங்கினால் அட்டகாசமான சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக்கொண்டு சில பல திருப்பங்களோடு போரடிக்காமல் முதல் பாதியையும் படு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதியையும் கொடுத்து அசர வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.ராஜு.

அழகான காட்சிகளை சொல்லும் ஓவியங்களின் மேல் தெளிக்கும் வண்ணங்களை காண்பித்து ரம்மியமான டைட்டிலுடன் துவங்குகிறது படம்.  எடுத்துக்கொள்ளப்பட்ட கதைக்களனும் அதுதான். இயற்கையில் சமமாக படைக்கப்பட்ட மனித குலத்தின் மேல் தெளிக்கப்படும் 'வர்ணம்'  குறித்தது தான் கதைக்கருவும். இரட்டைக்குவளை முறை, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அடக்குமுறை, அவர்களை அவமானப்படுத்துதல் முதலிய தீண்டாமை கொடுமைகளை காதல், மோதல், மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

இயல்பான திருவிழா காட்சிகளை கொண்ட பாடல், முனியின் கதை சொல்லும் பாடல் ஆகியன சிறப்பாக வந்திருக்கின்றன.   பின்னணி இசையும் குறிப்பிடும்படியாய் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.  தங்கமாக நடித்திருக்கும் அந்த இளம்பெண், மோனிகா, நந்தா, கதை சொல்லும் இளைஞன், சம்பத் என பாத்திரங்கள் அனைவரது நடிப்பும் அருமையாக இருக்கிறது.

மோனிகாவை முனி பிடித்து விட அனைவரும் பயத்தில் உறையும்பொழுது, மணி மட்டும் அதன் பின்னணி அறிந்தவனாய் முறைத்துப்பார்ப்பது, தங்கத்துடன் பேசிவிட்டு வரும் செல்லத்தை துரத்தி துரத்தி விசாரிப்பது, அருவியில் படுத்தபடி கதை சொல்வது என பல காட்சிகள் கவிதையாய் ரசிக்க வைக்கிறது.

நன்றாக படித்த பணக்கார வீட்டு கதநாயகி லூசு பெண் போல விறைப்பாய் சுற்றும் கதாநாயகன் மேல் விழுந்து விழுந்து லவ் பண்ணும் உருப்படாத சினிமாக்களை எடுத்து வைத்துக்கொண்டு 'திருட்டு சி.டில பார்க்காதீங்க... தியேட்டர்ல வந்து படம் பாருங்க...'  என மைக்கை கடிக்கும் மனசாட்சியே இல்லாத இயக்கு'நார்'கள் மலிந்து வரும் காலத்தில், அரிதாய் அவ்வப்போது பூக்கும் குறிஞ்சிப் பூக்களில் ஒருவராய் பூத்திருக்கிறார் எஸ்.எம்.ராஜு.

வர்ணம் - சிறப்பான படைப்பு -  பார்க்க வேண்டிய படம்!

Varnam varnamm varnam movie review valaimanai vimarsanam
monica monika nandha s.m.raju 
review by sukumar swaminathan valaimanai


Monday, October 10, 2011

சதுரங்கம் - பிளாக்கர்ஸ் ஷோ





பதிவர் அண்ணன் உண்மைத்தமிழன் மீண்டும் ஒரு பதிவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு அழைத்திருந்தார்.  கடந்த முறை கரு.பழனியப்பன் அவரது மந்திரப்புன்னகை. இம்முறை சதுரங்கம்.

முதல் பாதியில் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் தாமதமாக நான் சென்றதால் முழுமையான திரை விமர்சனம் எழுத முடியவில்லை.  படம் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. ஆனாலும் பார்ப்பதற்கு புத்தம் புதிய காப்பியாக இருந்தது. எல்லாம் டிஜிட்டல் மாயம்.

நேர்மையான பத்திரிக்கை ரிப்போர்ட்டரால் பாதிக்கப்படும் ஒருவர் அவரது காதலியை கடத்தி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறார். கடைசியில் எப்படி அந்த ரிப்போர்ட்டர் தனது காதலியை மீட்டார் என்பதே சதுரங்கம்.

அழுத முகத்துடன் இருக்கும் சோனியாவையும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.  கரு.பழனியப்பனின் வழக்கமான படங்கள் போலவே வசனங்கள் ஷார்ப். ஸ்ரீகாந்த்திற்கு பதில் மந்திரப்புன்னகை போல் அவரே நடித்திருக்கலாமோ என்று யோசித்தேன்.
மிதமான வேகத்தில் போரடிக்காமல் செல்லும் படத்திற்கு கிளைமேக்ஸ் பெரிய டிரா பேக்.

பாதி படமே பார்த்ததால் இதற்கு மேல் விமர்சித்தால் அது தர்மமாகாது.

படம் முடிந்து இயக்குனர் கரு.பழனியப்பனுடன் எங்களது அரட்டை  சுவாரஸ்யமாக இருந்தது. ஜாக்கி அவரது படங்கள் குறித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் புன்னகையுடன் பழனியப்பன் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு இயக்குனராக தான் யோசித்த கிளைமேக்ஸை எடுக்க முடியாமல் போனதன் சிரமத்தை அவர் விவரித்த போது படத்தின் சொதப்பல் கிளைமேக்ஸுக்கான காரணம் புரிந்தது.


பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த சிறப்பு காட்சிக்கு பல பதிவர்கள், பேஸ்புக் நண்பர்கள் யாவரும் வந்திருந்தனர். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், கே.ஆர்.பி.செந்தில், காவேரி கணேஷ், மயில்ராவணன், மணிஜி, பட்டர்பிளை சூர்யா, அதிஷா, யுவகிருஷ்ணா, தேனம்மை லஷ்மணன் மேடம் அதில் சிலர்.
_____


இதே போல் இன்று மாலை அண்ணன் உண்மைத்தமிழன் மாலை 6 மணிக்கு வர்ணம் சிறப்பு காட்சிக்கு அழைத்திருக்கிறார்.   ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு உள்ளே இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்படுகிறது. ஆகவே வர இயலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

விவரங்களுக்கு : http://truetamilans.blogspot.com/2011/10/blog-post_08.html


Sathurangam sadhurangam sadurangam sonia agarwal srikanth karu palaniappan valaiamanai movie review


Wednesday, August 31, 2011

மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்




தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம்.  கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.

தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

 எவ்வளவு கெட்டவனாக ஹீரோவை காண்பித்தாலும் கடைசியில் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் நல்லவன்தான் என ஒரே சீனில் மாறும் சாதாரண சினிமாவாக அமையாத கிளைமேக்ஸ் தமிழுக்கு புதுசு.


த்ரிஷா, ஆன்ட்ரியாயை விட அஞ்சலி அழகாக தெரிகிறார். லட்சுமி ராய்க்கு பதில் வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.  அழகான ஒளிப்பதிவு, அடுத்தடுத்து நகரும் விறுவிறுப்பான காட்சிகள், ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை என போரடிக்காமல் செல்கிறது மங்காத்தா.


பல இடங்களில் அஜித்தின் புதிய தோற்றம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் இப்படி எல்லாம் நடிக்க/பேச சம்மதித்தார் என தோன்றும் அளவிற்கு இருக்கும் சில இடங்களை தவிர்த்திருக்கலாம்.  இரண்டாம் பாதியில் சேஸிங் காட்சிகள் நீளமாக இருக்கிறது.

பின்னணி இசை அட்டகாசம். அதற்கு உழைத்தது போல் பாடல்களுக்கு உழைக்கவில்லையோ யுவன் என தோன்றுகிறது.  அனுபவ இயக்குனர்கள், அஜித்திற்கு ஹிட் படங்களை தருவதில்லை எனும் கூற்றை தைரியமான படைப்பை சிறப்பாக கொடுத்து உடைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

ஏகன், அசல் மூலம் சோர்ந்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த மங்காத்தா. மற்றவர்களுக்கு போரடித்து போன வழக்கமான மாஸ் ஹீரோ சப்ஜெட்டுகளிலிருந்து ஒரு மாற்று அனுபவமாக அமையும்.

Mangatha Mankatha Movie reivew vimarsanam valaimanai sukumar swaminathan blog review
Thala 50 Ajith Ajithkumar venkat prabhu Mankathaa



Friday, May 6, 2011

சீனா விலகும் திரை - பல்லவி ஐயர் | வலைமனை









இடப்புறம் இருந்துகொண்டு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானை நமக்கு நன்கு தெரியும். எப்பொழுதும் அதையே பார்த்திருப்போம். ஆனால் கழுத்தை நேர் எதிரே திருப்பி இந்தப் பக்கம் இருக்கும் சீனாவை நாம் அந்த அளவு கண்டுகொள்வதே இல்லை.

நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் மெழுகில் வார்த்த சீன பொம்மைகளிலிருந்து ஆயிரங்களில் கிடைக்கும் எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் வரை சீன பொருட்கள் இல்லாமல் நாம் இல்லை என்றாகிவிட்ட இன்றைய நிலையில் சீனாவை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.


இந்தியாவில் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது; சீனாவில் இல்லை. இருந்தும் சாலைகள், மின்சாரம், சாக்கடை, தண்ணீர், ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கூடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டது.


சீனாவின் பலம், பலவீனம், மக்கள் மனப்பான்மை, சர்வாதிகார அரசு, தொழில் முறை, பாரம்பரியம், வரலாறு என புத்தக ஜன்னலின் வழியே திரையை விலக்கி பல்லவி ஐயர், சீனாவின் அப்பட்டமான காட்சிகளை காண்பிக்கும்பொழுது, தலை முதற்கொண்டு வால் வரை அமைதியாய் இருக்கும் இந்த டிராகன் மிருகத்தின் சுய உருவத்தை பார்ட் பை பார்ட் அறிய முடிகிறது.


இணையம் என்கிற முரட்டு செய்தித் தொடர்புக் குதிரையை அடக்கிச் சவாரி செய்ய அரசாங்கம் ஏராளமாகச் செலவழித்தது... கூகிளில் போய் ஃபலன் காங் என்று தேடினாலோ, அல்லது சும்மா 'சீனா மனித உரிமைகள்' என்று அடித்தாலோ உடனே உங்கள் இணையத் தொடர்பு அறுந்து விடும்!


சீனாவிற்கு கிளம்புகையில் ஃபிளைட்டில் உட்கார்ந்து இதெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது என ஒரு பாஸ்ட் பார்வர்ட் டிரைலர் காட்டுவதாகட்டும், முடிவுரையில் முதலில் வேலை பார்த்த கல்லூரிக்கு சென்று நினைவுகளை அசை போடுவதாகட்டும் பல்லவி, ஒரு ஃபீல் குட் சினிமாவிற்குண்டான அம்சங்களுடன் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.


சீனாவிலிருந்து வந்திருந்த ஒரு வர்த்தகக் குழுவினரை தாஜ் மகாலைப் பார்க்க அழைத்துப் போயிருந்தேன். டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். வெகு நேரம் வரை அமைதியாக பஸ் ஜன்னலுக்கு வெளியே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், லியோனிங் மாகாணத்திலிருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொழில் முனைவர் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டார். 'மேடம், நாம் நெடுஞ்சாலையில் போகப் போகிறோம் என்று சொன்னீர்களே, அந்த நெடுஞ்சாலை எப்போது வரும்?' நாசமாப் போச்சு, அதே நெடுஞ்சாலையில்தானே இரண்டு மணி நேரமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!


நன்றாக கைவரும் நகைச்சுவை உணர்வை அதிகமாக பயன்படுத்தாமலும், எந்த இடத்திலும் ஜோடனைகள் செய்யாமலும் இயற்கையான நடையில் நூல் செல்வது சுகமான வாசிப்பனுவத்தை தருகிறது.

1990-களின் ஆரம்பத்தில் இந்தியாவின் சாலை வசதிகள் சீனாவைவிட உயர்வாக இருந்தன. மொத்த நீளத்திலாகட்டும், ஜனத்தொகை அடிப்படையில் தலைக்கு எவ்வளவு சாலைகள் இருக்கின்றன என்ற விகிதாசாரமாகட்டும் - இந்தியாதான் முன்னே இருந்தது. பதினைந்து வருடத்தில் நிலைமை தலைகீழ். இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தன்னுடைய குண்டுகுழிகளிலேயே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, சீனா சீறப் புறப்பட்டு மேலே போய்விட்டது.

எந்த கருத்தானாலும் அங்கு ஆசிரியர், சீன-இந்திய ஒப்பீட்டு பார்வையை செய்ய தவறவில்லை. இதன் மூலம் டைட்டிலில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் திரையையும் விலக்கி காண்பிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நாம் தவற விடும் வளர்ச்சியை சீனா எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பது உட்பட நமது ஜனநாயகத்தை அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பது வரை பல்வேறு கட்டங்களில் செய்யப்படும் இந்த ஒப்பீடு உண்மையிலேயே மிகுந்த கருத்தாக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


முன்னூற்றி சொச்சம் உள்ள ஒரு குண்டு புத்தகம். ஒரே அமர்வில் நாம் படிக்கக்கூடிய அளவு நேரமிருந்தால் பரவாயில்லை. ஆனால் நாளொரு முறை வாரமொருமுறை படிப்பதாயின் அந்த புத்தகம் அடுத்தடுத்து நாம் கூப்பிடுவது அவசியம். இந்த புத்தகம் அவ்வாறு என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. திருப்புமுனையிலேயே என்னை அசத்திய ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்திலும் அசத்துகிறார்.


'....இந்தியா, டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு பிரச்னை பற்றி நாலு பேர் நாலு அபிப்பிராயத்தைத் தெரிவிப்பது சர்வ சாதாரணம். அதற்காக அவர்களுக்குள் சண்டை என்று அர்த்தமல்ல. வேறு எவ்வளவோ விஷயங்களில் அவர்கள் கருத்து ஒத்துப்போகவும் செய்யலாமே.'

'தெரியும்' என்று தலையை உலுக்கினாள் ஷாவோ.'ஆனால் சீனாவில் வழக்கமே வேறு. இங்கே எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்!


கல்லூரி ஆசிரியராக துவக்க நாட்கள், ஷாவோலின் மடம், தொழில்துறையில் முன்னேறிய பணக்கார கிராமம், வணிக வளாக நகரம், ஆசிரியர் வாழ்ந்த பாரம்பரிய குப்பம் ஹுடாங், திபெத் லாசாவிற்கு விடப்பட்ட முதல் ரயில் பயணம், சந்தித்த பல்வேறு வகையான மக்கள், அவர்களுடனான அனுபவங்கள் என துடிப்புள்ள துணிச்சல் மிக்க நிருபரின் பல்வேறு நிலை வாழ்க்கை குறிப்புகள் வழியே சீனாவை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமான விஷயம், புரிந்து கொள்ள எளிதாகவும் இருக்கிறது.


கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் பசை போட்டு ஒட்டிக்கொண்டு இருப்பதை நியாயப்படுத்துவதற்காக மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும். இந்திய அரசியல்வாதிகளுக்கோ, ஓட்டு வாங்கியதுடன் பொறுபபு முடிந்துவிடுகிறது; அடுத்த ஐந்து வருடம் பதவியில் தொடர்வதற்கு, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவேண்டிய கட்டாயம் கிடையாது.

சர்வாதிகார ஆட்சி செய்யும் சீனாவிலேயே இவ்வளவு வளர்ச்சியை எட்ட முடியும் என்றால் ஜனநாயகம் செழிக்கும் இந்தியாவில் நாம் எவ்வளவு வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டும்? ஏன் எட்டவில்லை? ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு வெறும் கோஷங்கள் மட்டுமேதான் எழுப்ப முடியுமா?  சீனாவிடமிருந்து இந்தியாவும், இந்தியாவிடமிருந்து சீனாவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னென்ன..? 


ஏராளமான பதில்கள் சொல்கிறது சீனா விலகும் திரை!

சிவப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________________________________



சீனா - விலகும் திரை
ஆசிரியர் : பல்லவி ஐயர்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 200
சுட்டி : 
https://www.nhm.in/shop/978-81-8493-164-8.html



_____________________________________________________


வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 
 


China vilagum thirai - Kizaku publication - Pallavi Iyer
Smokes and fires
valaimanai blog book review by Sukumar Swaminathan, Chennai

Tuesday, April 19, 2011

மாமனார் ரஜினியின் பெயரைக் கெடுக்கும் மாப்பிள்ளை






ரஜினியின் மாப்பிள்ளை படத்தை எவ்வளவு படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தியிருக்கிறார்கள். ரஜினி படத்தின் ரீமேக் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் இடத்தில் தனுஷ் என நினைத்தவாறே பார்க்கும்பொழுது எரிச்சலாக வருகிறது.

படத்தில் மனிஷாவிற்கு மாமியார் ரோல். ஆனால் பாட்டி போல் இருக்கிறார். இதனால் ஆண்ட்டி போல் மட்டுமே இருக்கும் ஹன்சிகா அழகாக தெரிகிறார்.  ஹாஃப் ஆஃப் ஹன்சிகாவாக தனுஷ். ஆடுகிறார், பாடுகிறார், பஞ்ச், சேட்டைகள் என ஒரு ஹீரோ என்னவெல்லாம் செய்து தமிழ் மக்களை டார்ச்சர் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் தாமதமாக செல்ல நேரிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் முதல் பாதியில் விவேக் அளவுக்கதிகமாக இருக்கிறார். வடிவேலுவின் பிரசாரம் கேப்டனுக்கு எவ்வளவு டார்ச்சாராக இருந்திருக்குமோ நமக்கு அவ்வளவு டார்ச்சராக இருக்கிறது விவேக்கின் அலட்டல் காமெடி.  படிக்காதவன், உத்தமபுத்திரன் படங்களில் தொய்ந்து செல்லும் முதல் பாதியை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திய விவேக் இதில் முதல் பாதியை மொக்கையாக்குவதில் முன்னிலை வகிக்கிறார்.

இந்த படத்திலேயே அதிகமாக சிரமப்பட்டிருப்பது மனிஷாவிற்கும் கதாநாயகி ஹன்சிகாவிற்கும் டப்பிங் கொடுத்திருப்பவர்கள்தான். இரண்டு பேரும் இஷ்டத்திற்கு வாய் அசைக்கிறார்கள். அஷ்ட கோணலாகும் உதடுகளுக்கு டப்பிங் கொடுத்திருப்போர் கதிகலங்கி போயிருக்க வேண்டும். ஆங்கில டப்பிங் படங்களே தேவலாம். கொஞ்சமாவது லிப் சிங் ஆகும்.

ஒரு சில இடங்களில் தனுஷ் பீடி குடிக்கிறார். அப்பொழுதெல்லாம் நமக்கு 'ஒரு' என்பதில் ஆரம்பித்து 'ஆச்சரியக்குறி'யில் முடியும் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலாதது.

படத்தில் மற்றுமொரு பி.பி. ஏற்றும் விஷயம், என்னோட ராசி நல்ல ராசி பாடல் ரீமேக். பற்றிக்கொண்டு வருகிறது. ஒரிஜனல் பாடலில் உள்ள துள்ளல், அழகு எல்லாவற்றையுமே சிதைத்திருக்கிறார்கள்.

மாப்பிள்ளை என்று பெயர் வைக்காமலோ, ரஜினி படத்தின் ரீ மேக்காக இல்லாமலோ இருந்திருந்தால், இந்த படம் குறித்து இவ்வளவு டென்சன் ஆக வேண்டிய அவசியமே இல்லை. இதுவும் ஒரு மொக்கை என ஒதுக்கி விடலாம். ஆனால்..! எனக்கு பரத் நடித்த ஆறுமுகம் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இப்படியே ரஜினி படங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் இன்னும் தாவாங்கட்டையில் தாடி வைத்துக்கொண்டு "ஹே மாணிக் பாட்ஷாடா" என தனுஷ் சொல்லப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அது மட்டும் நடந்துவிட்டால் பிறகு ரஜினி பிரியாணி போடுகிறேன் என சொல்லியதை கூட மறந்து ரசிகனாக தொடரும் பல லட்சம் பேர் சட்டையை கிழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்து அலையும் சாத்தியக்கூறுகள் உள்ளது.


வேணாம் மாப்பிள்ளை இதோட விட்ருங்க... வலிக்குது.. அழுதுறுவேன்...........

Monday, March 14, 2011

எதுவுமே தெரியாமல் ஜெயிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்





நூல் அனுபவம் - ஏ.ஆர்.ரஹ்மான் - என்.சொக்கன்


'நான் இந்த விருதை வாங்கும்போது அதை நேரில் பார்ப்பதற்கு என்னை வாழ்த்துவதற்கு என் அம்மா இங்கே வந்திருக்கிறார். அதைத்தான் நான் பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன்'


கையில் ஆஸ்கார் விருதினை பெற்றுக்கொண்டு தாயையும் தாய்மொழியையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெருமைப்படுத்திய் அந்த கணத்தை பார்த்து புல்லரித்து போய் உட்கார்ந்து இருந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை அடைவதற்கு அவர் கடந்து வந்த சோதனைகளை என்.சொக்கன் எழுதி வெளிவந்திருக்கும் 'ஏ.ஆர்.ரஹ்மான்' புத்தகத்தில் படித்தபொழுது ரொம்பவும் ஆச்சர்யமாகவும் இன்ஸ்பயரிங் ஆகவும் இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட, கற்றுக்கொண்டிருந்த இசையை வைத்து இரவில் பணியும் காலை பள்ளியும் என   சோதனைகளை அவர் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற உழைத்ததும், அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தி வழிநடத்திய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ரஹ்மானின் இசைக்கு பின்னால் ஒரு தாயின் கனவு இருக்கிறது என்பதை அறியும்பொழுது ரஹ்மான் மேல் இருக்கும் மரியாதை இன்னும் பல படிகள் உயர்ந்துவிட்டது.




'அப்பாவோட தொழிலை நீ தொடர்ந்து செய்யணும் திலீப், பெரிய இசையமைப்பாளரா, திறமைசாலியா பெயர் வாங்கணும். அதுதான் என்னோட ஆசை. உங்க அப்பா இப்போ உயிரோட இருந்திருந்தா, அவரும் இதையேதான் சொல்லியிருப்பார்.'


அப்பாவின் இசைக் கருவிகள், மற்ற சாதனங்களோடு திலீப்பும் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களுக்குப் பயணம் செல்ல ஆரம்பித்தான். அங்கே உள்ள இசை அமைப்பாளர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், இசை நடத்துனர்களையெல்லாம் சந்தித்து அவர்களிடம் பணிவாகப் பேசுவான். 'எனக்கு இந்தக் கருவிகளை நன்றாக வாசிக்கத் தெரியும். தயவு செய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்பான்.


தனது குடும்பத்தின் வறுமை நிலையை விரட்டி அடிக்க ரஹ்மான் கருவிகளை இசைக்கும் பணியிலும் அதில் காட்டிய நேர்த்தியினால் பின்னர் படிப்படியாக உயர்ந்து விளம்பரங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் என்பது போன்ற பலர் அறியாத தகவல்களை அறியத்தந்து ஆச்சரியப்படுத்துகிறது இந்த புத்தகம்.


தயக்கத்தோடு வேலையைத் தொடங்கிய திலீப்புக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை அதிகரித்தது. தன்னுடைய சிந்தசைஸரிலேயே மொத்த விளம்பர இசையையும் உருவாக்கிப் பதிவு செய்துவிட்டார்.


..சச்சின் டெண்டுல்கரும் கபில் தேவும் வந்து 'பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று புன்முறுவல் செய்வார்களே, அந்த விளம்பரம் ஞாபகமிருக்கிறதா? அது திலீப் கைவண்ணம்தான்.


ரஹ்மானின் இசைப்பயணத்தில் அவரது உயரம் ஏதோ ஒரே நாளில் அதிர்ஷ்டத்தில் முளைத்துவிடவில்லை. செய்யும் எதிலும் அவரது புதுமை, ஈடுபாடு, தனித்திறமை ஆகியவைதான் அவரை இன்னும் இன்னும் உயர்த்திக்கொண்டே போகிறது. விளம்பரங்களில் அவர் காட்டிய புதுமைதான் அவருக்கு ரோஜா பட வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.


.. தளபதி ரிலீஸுக்குப் பிறகு, மணிரத்னமும் இளையரஜாவும் பிரிந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பரபரப்பாக வெளியிட்ட பத்திரிக்கைகள், 'இளையராஜாவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?' என்று கேள்வி எழுப்பின. 'இனிமேல் மணிரத்னத்தின் படங்களில் பாடல்களின் தரம் குறைந்துவிடும்' என்று ரசிகர்களும் வெளிப்படையாகவே பேசினார்கள்.


இதனால் திலீப் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முதல் படத்திலேயே அவர் இளையராஜாவுடன் நேரடியாக ஒப்பிடப்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.


முதல் படத்திற்கு ஒப்புக்கொண்ட நிலை, அவர் செயல்பட்ட விதம், நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவை. நூலாசிரியர் என்.சொக்கன் புத்தகத்திற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது நூலில் கிடைக்கும் பல குறிப்புகளிலிருந்து தெரிகிறது.


அன்றைக்கு, திலீப்பினுடைய முதல் பாடலை இசையமைக்க வாத்தியக் கலைஞர்கள் யாரும் வரவில்லை. ஆகவே, அவர்களுடைய துணை இல்லாமல், அந்தப் பாடலுக்குத் தேவையான எல்லா இசைத்துணுக்குகளையும் கீபோர்ட், சிந்தசைஸர், கணினி உதவியுடன் அவரே வாசித்து உருவாக்கத் தொடங்கினார். 


அந்த முதல் படத்திலேயே அதற்குமுன் தமிழில் வந்த எல்லாப் பாடல்களையும் 'பழைய இசை'யாகத் தோன்றச் செய்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு, ஒவ்வோர் இசையமைப்பாளரும் இதே மாதிரியான நவீன ஒலியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.


புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம், ரஹ்மானின் இசை பயணத்தில் ஆங்காங்கே அவர் கொடுத்த ஹிட்ஸ்களை குறிப்பிட்டு சில பாடல் சார்ந்த ஆச்சரியங்களையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு இந்த சங்கதியை படித்த பின்னர் இந்த பாடலை இன்னுமொரு முறை கேட்டு ஆச்சரியப்பட்டு போனேன்.


'ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல' என்கிற சோகப் பாடலை ஷாகுல் ஹமீது பாட, வேறு எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க கோரஸ் குரல்களை மட்டும் பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். ஆனால், அந்தப் பாட்டைக் கேட்கிறவர்களுக்கு எதுவும் உறுத்தலாகத் தெரியாது.


இந்த புத்தகத்தினை ஒரு பயாக்கிராபி புத்தகமாக லேபிளுடுவது தவறு. இது ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக அமைந்திருக்கிறது. ஆசிரியரின் நடையாளுமை அப்படியான எண்ணத்தை வலுவாக தோற்றுவிக்கிறது. ரஹ்மானின் பல்வேறு காலகட்டங்களிலும் அவரது எதிர்நீச்சல், முக்கியமாக தொழிலில், கலையில் அவரது மனப்பான்மை ஆகியன முன்னேற விரும்பும் யாரும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள்.

ரஹ்மானின் ஒரு சிறப்பான மனப்பான்மை இனோவேஷன். வந்தே மாதரம் ஆல்பம் பிறந்ததும் அவரது இந்த தொடர்ச்சியான புதுமை விரும்பும் தாகத்தினால்தான்.



'ஏதாவது புதுசா செய்யணும்ப்பா'

நூறாவது முறையாக ரஹ்மான் அதையே சொன்னார். ஆனால், அந்த 'ஏதாவது' எனன என்பதுதான் அவருக்கும் புரியவில்லை, எதிரில் உட்கார்ந்திருந்த பரத் பாலாவுக்கும புரியல்லை.



எதிலும் எளிதில் திருப்தி அடையாதது, தன்னடக்கம், புதுமை விரும்புதல், ஈடுபாடு, புதிய முயற்சிகள் என்பன போன்ற ரஹ்மானின் சீக்ரெட் பார்முலாக்களை அவரது பல நிலை எண்ண ஓட்டங்களை புத்தகம் வாரி வழங்குகிறது.


'எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோநிலையோடு ஒரு பாடலை உருவாக்க உட்கார்ந்தால், அதே பழைய விஷயங்களைத்தான் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்போம்' என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கொள்கை, 'அதற்குப் பதிலாக, நான் எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொள்கிறேன், அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்து பார்க்கிற முனைப்பு வருகிறது'


ரஹ்மான் சுலபத்தில் திருப்தியடையாத பேர்வழி. தான் உருவாக்கிய இசை ஒரு குறிப்பிட்ட தரத்தை எட்டியதும், 'இது போதும்' என்று வெளியே தள்ளிவிட்டு, அடுத்ததைக் கையில் எடுத்துக்கொள்கிற பழக்கம் அவரிடம் இல்லை.


கையில் ஆஸ்கார் விருதுடன், எல்லா புகழும் இறைவனுக்கே என அமைதியாக சொன்ன ரஹ்மானின் 'டவுன் டூ எர்த்' சிம்பிளிசிட்டியினை வியக்காதவரில்லை. ரஹ்மானின் தன்னடக்கத்திற்கும் திறமைக்கும் அவர் இன்னும் பல உயரங்களை தொடக்கூடியவர், யாரும் கற்பனை செய்ய முடியாத புதிய பரிமாணங்களை இசையில் படைக்க வல்லவர். இத்தகைய தனித்துவமான கலைஞனின் கதையை சிறப்பாக அறியத்தந்தமைக்கும் ஒரு 'ஃபீல் குட்' வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதற்கும் ஆசிரியர் என்.சொக்கன் பாராட்டப்பட வேண்டியவர் ஆகிறார்.

_________________________________________________________________


பழுப்பு நிற எழுத்துக்கள் புத்ககத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________

ஏ.ஆர்.ரஹ்மான்
ஆசிரியர் : என்.சொக்கன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 80
சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-187-7.html
_____________________________________________

_____________________________________________


Monday, February 7, 2011

ஆஹா ஓஹோ யுத்தம் செய்


ஞ்சாதே' ஏற்படுத்திய பிரமிப்பே இன்னும் எனக்கு அடங்கவில்லை. அதற்குள்ளாக 'யுத்தம் செய்'. சமூகத்தில் ரகசியமாக நடக்கும் குற்றங்கள். இதனால் பாதிக்கப்படும் சாதாரண பெண்கள். இவ்வாறாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறிப்பாக இளம்பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிதும் ஆபாசம் கலக்காமல் 'அஞ்சாதே'விற்கு அடுத்து சொல்லப்பட்டிருக்கும் கதை 'யுத்தம் செய்'. அவ்வகையில் இதைப்போன்ற படங்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிஷ்கினுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.









கதை


இதைப்போன்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் கொண்ட திரில்லர் கதையை சொல்வது மகா பாவம். படம் பார்க்கும் முன்னர் என்னதான் கதையை படிக்காமல் நான் தவிர்த்தாலும் படித்த விமர்சனங்களில் வந்த மற்ற ஒன்றிரண்டு வரிகளாலேயே சில முடிச்சுக்கள் படம் பார்க்கும்பொழுது புரிபட்டு போனதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸோ படம் பார்க்க செல்பவர்கள் தயவு செய்து எங்கும் கதையை படிக்க வேண்டாம்.



நடிப்பு

  முதன்முறையாக அமைதியான ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரத்தில் சேரன் தான் ஏற்ற பாத்திரத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். அந்த இடைவேளைக்கு முன்னர் வரும் சண்டையிலும் சரி அதற்கு முன்பாக மெதுவாக வீட்டை விட்டு கிளம்பி நடப்பதிலும் சரி நாம் தமிழ் திரையில் முன்னெப்போதும் பார்த்திராத காவல் அதிகாரியாக அமைதியாக சேரன் அசத்துகிறார்.  பஞ்ச் பேசி நாட்டைக் கெடுக்காத, கலர் கலராக வலம் வந்து கண்ணைக்கெடுக்காத ஹீரோ தேடுபவர்களுக்கு சேரன் நல்ல விடை.

  ஒய்.ஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல். முதன்முதலில் காவல் நிலையத்தில் குறுகி செய்தறியாது குடும்பத்துடன் நிற்கும் காட்சியில் வாவ்.. லவ்லி சார். அவரது மனைவியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது ஆளுமை முக்கியமானது.

  இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து உடனான சேரனின் முதல் விசாரணை காட்சியில் இசக்கியாக நடிதது இருப்பவரது பெர்ஃபார்மென்ஸ் அபாரம். வெறுப்பு, பயம், கோபத்தை அட்டகாசமாக பாடி லாங்குவேஜில் காட்டி அசத்துகிறார் மனிதர்.


  ஜுதாஸாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றுமொரு ஹைலைட்.  முதல் காட்சியில் தூக்கத்திலிருந்து எழும்பி வருவது முதற்கொண்டு கடைசியில் மூச்சிறைத்துக்கொண்டே பேசுவது வரை வரும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார். 


  தீபா ஷா நாட் பேட். மாணிக்க விநாயகம் அருமையான பெர்பார்மன்ஸ். செல்வா இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. இன்னும் பல பல பெயர் தெரியாதவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்திருப்பதால் படம் பளிச்சிடுகிறது.



இசை


இசை அருமை என ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டால் அது ரொம்பவும் கம்மி.
அட்டகாசமான பின்னணி இசை பாஸ். சி.டி.யில் Box Theme என வரும் இசை, படத்தில் டென்ஷனை ஏற்றுகிறது. Chaos Theme மெல்லிய சோகம் இழையோட புதிர் உணர்வினை மனதுக்குள் விளைவிக்கிறது. Hope Theme இசை வரும் காட்சி படத்தில் நெகிழ்ச்சியை ஊற்றுகிறது. 'கன்னித்தீவு பெண்ணா' பாடல் மட்டும் அதன் மூதாதையர்களான 'வாலமீனு' ('ல' வா இல்லை 'ள' வா பாஸ்?) மற்றும் 'கத்தாழ கண்ணால' அளவிற்கு ஜொலிக்காது என நினைக்கிறேன்.


நெகிழ்ச்சி

  கிளைமேக்ஸ் ரொம்பவும் நெகிழ்ச்சியானது, சேரனின் தங்கையை சுஜா என ஒய்.ஜியும், அவரது மனைவியும் அழைத்து கத்தியை உடனடியாக கீழே போடுவது மிஷ்கினின் டிரேட்மார்க் சென்டிமென்ட் பஞ்ச்.

  'அஞ்சாதே'வில் கடத்தப்பட்டு பின் காரில் இருந்து லுங்கியுடன் இறக்கி விடப்படும் இளம்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நரேன் ஓடிச்செல்வாரே அந்த ஃபீல் இந்த படத்தின் கிளைமேக்சில் வருகிறது.

  படத்தின் இசை டாப் டக்கர். பிண்ணனி இசை சரியான இடங்களில் மிகச்சரியாக செட் ஆகியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

  "கொஞ்சம் அறிவை வச்சுகிட்டு நீங்களே இவ்வளவு பண்ண முடியும்னா நிறைய அறிவை வச்சுகிட்டு நாங்க எவ்வளோ பண்ண முடியும்" என ஜெயப்பிரகாஷ் சொல்லும் இடம் உட்பட வசனமும் படத்தில் டாப்.


விஷுவல்ஸ்


  காட்சியமைப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. இன்ஸ்பெக்டரை சேரன் விசாரிக்கையில் சட்டென ஒய்.ஜி புகார் அளிக்க வரும் காட்சியை பிளாஷ்பேக்கில் மாற்றி டக்கென டீ கொண்டு வரும் நிகழ்காலத்துக்கு திரும்பி வருவது லவ்லி விஷுவல்.


  அந்த சிறுமி ஜன்னலோரம் நின்று பழைய காட்சியை நினைவுபடுத்தி சட்டென ஆமா சார் இன்னொருத்தர் ஆட்டோவில் இருந்தார் என சொல்வதும் அருமை.


  அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனை இருளில் காண்பித்து கரண்ட் கட் ஆகி சட்டென பகல் பொழுதிற்கு மாறுவது அருமை.


  கடைசியில் அந்த சிறுவன் விமான நிலைய எஸ்கலேட்டரில் ஏறி விடியலை நோக்கி செல்வது போன்ற காட்சியமைப்பில் இத்தனை சஸ்பென்ஸ், இத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து நெகிழ்ச்சியான தீர்வை சொல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் மனதிற்கு இதமாய் அமைந்துள்ளது.


 கதையின் முக்கிய முடிச்சான பீப் ஷோ நிகழ்வுகளை மற்ற எந்த சாதாரண கமர்ஷியல் தமிழ் சினிமாவை விடவும் டீசன்டாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.



நெருடல்

  என்னதான் பெண்ணுக்காக பழி வாங்கினாலும் குடும்பத்தினர் அனைவரும் புரஃபஷனல் கில்லர் போல் கருப்பு உடையணிவது கொஞ்சம் இடிக்கிறது.

  முதல் பாதியில் ஏகப்பட்ட பெயர்கள், ஏகப்பட்ட முடிச்சுக்கள், விசாரணைகள் என கொஞ்சம் கவனம் தப்பிவிட்டாலும் குழப்பிவிடக்கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது. 

  அவ்வளவு நாள் தேடிய ங்கை கிடைக்க வாய்ப்பு வருகிறது என்றாலும் உயர் அதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக எதுவும் செய்யாமல் சேரன் வீட்டில் போய் அமைதியாய் உட்காருவது இடிக்கிறது.

ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும் தரப்பட்டுள்ள நல்ல படைப்பிற்காகவும் இதற்கு மேல் இங்கு எதையும் பட்டியிலிட விரும்பவில்லை.


__________________________

ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு என டார்ச்சர் செய்யும் தமிழ் சினிமாவில் கொடுத்த காசிற்கு எரிச்சல் படாமல் ஆத்ம திருப்தியுடன் ரசிகன் வெளியில் வரும் படங்களில் யுத்தம் செய் முக்கிய இடம் பிடிக்கும்.



Saturday, December 18, 2010

ஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு




சில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார்.  இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.

அமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.

இதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.

ஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழிலதிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.

இந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.  வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.

வீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

இந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே.! வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை "நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)

முதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் -  அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.

இந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது...