Saturday, September 1, 2012

முகமூடி - பிளாக் எழுதுபவர்களுக்கான தண்டனை



முகமூடி குறித்து மிஷ்கின் சில மாதங்கள் முன்பு விகடனுக்காக அளித்த பேட்டியின் வைர வரிகளின் தொகுப்பு :




"முகமூடி என் சின்ன வயசுக் கனவு."

படுக்கும்போது பக்கத்துல சாமி படம் வச்சிக்கிட்டு தூங்குனா இதுபோல கெட்ட கனாலாம் வராதுன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நீங்க வேணா டிரை பண்ணி பாருங்களேன்.



"அம்புலி மாமா பாலமித்ரா முத்து காமிக்ஸ் படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான்."

 எப்படியும் இன்னைக்கு முகமூடி பார்த்திருப்பான்..நாளையில இருந்து வர மாட்டான்... நீங்க நிம்மதியா தூங்கலாம்.



"முகமூடி ஸ்க்ரிப்ட் முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன்."

 ஸ்க்ரிப்ட்டா.. அதெல்லாம் இருக்கா படத்துல.. கடைசி வரைக்கும் கண்ணுல காட்டவே இல்லீங்களே சார்...



"இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம்."

அதை விட நீங்க எடுக்கிறதை பார்க்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..



"கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்க்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்."

(இதை மட்டும் கில்லி விஜய் குரலில் படிக்கனும்) : அதுக்கு பேரு யோசிச்சுப்பார்த்தேன் இல்ல புவி... பேட்மேன் படம் பார்த்தேன்!



"ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை."

அதுக்காக இவ்ளோ சாகசமா சார் வைப்பீங்க படத்துல...? இதய நோய் உள்ளவர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கெல்லாம் டிஸ்க்கிளைமர் போட வேணாமா...? ஆனாலும் ஸ்பைடர்மேன்லாம் உங்க சூப்பர் ஹீரோ மொட்டை மாடியில குரங்கு பல்டி அடிக்கிற சாகசத்தை பார்த்தான்... தானே சிலந்தி  கயிறு விட்டு அதுல தூக்கு மாட்டி செத்தே போவான்..


"நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கிற படம் முகமூடிதான்"

சில பேருடைய சந்தோஷத்தில் பலருடைய துக்கம் இருக்கிறதுன்னு யாரோ அறிஞர் சொன்னது சரியாத்தான் இருக்கு.



"ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது அதுமாதிரியான படம் இல்லை. புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? முகமூடி சோடா மூடின்னு தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க."

ப்ளாக்ல எழுதற எங்க மேல ஏதாச்சும் கோவம் இருந்தா நீங்க பேசி தீர்த்திருக்கலாம். ஆனா இப்படி ஒரு படத்தை எடுத்து எங்களை பார்க்க வச்சது ரொம்ப பெரிய தண்டனை சார்..


"ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை."

ஐ.. இது தெரியுமே. நீங்க மிஷ்கின்!


"எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன்"

ஆனாலும் இவ்ளோ தெளிவு தமிழ்நாடு தாங்காது சார் ...  எதுக்கும் உங்க 3டி கண்ணாடியை கொடுங்க.. அதைப் போட்டு பார்த்தாலாவது தெளிவா தெரியுதா பாக்கேன்...


"இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும்."

அட.. இதை மொதல்லயே சொல்ல வேணாமா.. நான் தியேட்டர்ல வெச்சுல்ல படத்தை பார்த்தேன்.. அதான் எனக்கு புரியலையா??




"சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு."

எதுங்க அந்த நீல சொக்காவா..?  சத்தியமா எங்க அக்கா பையன் ஸ்கூல் பேன்சி டிரஸ் காம்பெடிஷனுக்கு இதே டிரஸ்ஸை வடபழனில வாடகைக்கு எடுத்தேன்.  150 ரூவால்ல முடிஞ்சிருச்சு.





"ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம் சேர்க்கும்"

அது தெரியலை.. பட் பாவமும் பரிதாபமும் ரொம்ப சேர்க்கும்.



"ஜீவா இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார்."

தெரியாம இறங்கிட்டேன்.. யார்னா தூக்கி விடுங்கய்யான்னு கதறியிருப்பாரே..
(பார்க்க மேலே இணைக்கப்பட்டுள்ள படம்!)



"இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கு."

இப்போ போன் பண்ணிப்பாருங்க.. உங்க நம்பர் பார்த்ததும், 'சஸ்கிரைபர் கெனாட் பி ரீச்ட்'னு அவரே குரல் மாத்தி லேடீஸ் வாய்ஸ்ல பேசுவார்!!!!


________

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. கருத்து சுதந்திரம் உள்ள இந்தியத் திருநாட்டில்,  மேல் உள்ள பேட்டியில் கூறப்பட்ட பொருளுக்கான விளம்பரத்தை நம்பி 120 ரூபாய் காசு கொடுத்து பொருளை வாங்கி அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கஸ்டமர் எழுதியது. (120 ரூபாய்க்கு ரசீதும் உள்ளது.)