Monday, April 25, 2011

காஷ்மீர் - பா.ராகவன்






கார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.

உண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா? உணர்வதில்லையா? ஏன்?



நினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.

ஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.


ஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.

காஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.


கி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது.  காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.

காஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.

காஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அறிந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்
.
• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.

• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.

• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.

பா.ராவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள் வாக்கிய மாயங்கள் இந்த புத்தகத்தில் அதிகமாக இல்லாமல் அளவோடு அதே சமயம் கூர்மையாக விளையாட விடப்பட்டிருக்கிறது.

காஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.

ஆதி படையெடுப்புகள்,  மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து
"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.


இந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்
வடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு,  இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.

புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் முடியும் வாக்கியத்தையே இந்த புத்தகத்தின் பரிந்துரைக்கான வாக்கியமாக தர விரும்புகிறேன். அது -

காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள இது ஒரு தருணம்.
முயற்சி செய்யலாம்.


________________________________________________________________


காஷ்மீர் 
அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 140
சுட்டி : 
https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
_____________________________________________




பழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________


_____________________________________________

Puthaga vimarsanam - nool anubavam - valaimanai noolagam 
Kashmir - pa.ragavan - book review - valaimanai - sukumar swaminathan 
Kizaku padipagam - Kizaku publications 

Thursday, April 7, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11


லகக்கோப்பை வாங்கிய கையில் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஐ.பி.எல் சீசன் 4. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு புதிய அணிகள், எல்லா அணிகளிலும் வீரர்கள் மாற்றம் என கடந்த முறைகளை விட சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.



மொத்தம் பத்து அணிகள் இருப்பதால் இம்முறை செமி பைனல்ஸ் கிடையாது. மாறாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய குவாலிஃபயர், எலிமினேட்டர் முறைகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

பத்து அணிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிஃபயர் 1ல் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி, வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தேர்வாகும்.

அடுத்து எலிமினேட்டர் போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி தோற்கும் அணி வெளியேற்றப்படும். அடுத்து குவாலிஃபயர் 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் குவாலிஃபயர் 2ல் மோதி, அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஃ1ல் வென்ற அணியுடன் பைனல்ஸில் மோதும்.

இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பைனஸ்ஸ் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதலில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் ஜெயித்தாலும் மறுபடி குவாலிஃபயரில் வென்றால்தான் உண்டு.

வழக்கமான அரையிறுதி சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களுக்குள் சென்றால் போதும் என்றிருந்த நிலை மாறி தற்பொழுது முதல் 2 இடங்களுக்குள் செல்ல கடும போட்டி இருக்கும். எது எப்படியோ இவர்கள் நம் பொன்னான நேரத்தை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோற்காமல் இருக்க முடியும்.

Blog note on IPL Season 4 - Qulaifier 1, Qualifier 2, Eliminator, Finals | Valaiamani Blogspot 


ரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அய்யப்ப மாதவனின் 'தானாய் நிரம்பும் கிணற்றடி நூல் விமர்சனக் கூட்டம் இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்:



Ayyappa Madhavan's 'Thaanai nirambum kinatradi' Sirukathai nool vimarsana koottam | Aganazigai

ண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.



இதற்காக சமீபத்தில் முதலாளிக்கு விருதும் கிடைத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் முதலாளி!  முதலாளியை தொடர்பு கொள்ள : [email protected]


Mudalai | Dreams Alive | Working for a Noble Cause

மீபத்தில் நான் டிவிட்டியவை சில :

செய்தி : அழகிரிக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் - அண்ணன் அழகிரிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும்? 



கையில் தாமரை பூவுடன் பாஜக வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்ததை பார்த்தேன். அதுக்கு டப்பர்வேர் டப்பா எடுத்துட்டு போனாலாவது ரெண்டு விக்கும்

செய்தி : சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் # இது ஏப்ரல் ஃபூல் நியூஸாதான் இருக்கும். எப்பவும் அங்க அடிதடிதான நடக்கும்?

தான் அடித்தால் வேட்பாளர் மஹாராஜா ஆகிவிடுவார் என மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிக்கும் கேப்டன் மேல் இந்திய இறையாண்மை சட்டம் பாயாதா?


தங்கள் கட்சி மீட்டிங்கிற்கு 4 கேமராக்களை அனுப்பினால் கேப்டன் மீட்டிங்கிற்கு 40 கேமராக்களை அனுப்புகின்றனர் ஆளுங்கட்சியினர். 


ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடிக்கிறார் விஜயகாந்த் -திருமா # இருந்த 50 பேரை 1000ம்னு சொல்றீங்களே திட்டுறீங்களா பாராட்டுறீங்களா?

இறுதி போட்டியினை பிரதிபா பாட்டீல், ராஜபக்ஷே பார்க்கின்றனர் # ஒண்ணு 'சைலண்ட்' பொம்மை இன்னொன்னு 'சைனா' பொம்மை

என் கணவருக்கு மக்களிடத்தில் நடிக்கத் தெரியாது என போன வாரம்தான் சொன்னார் அண்ணியார் # அடிக்கத் தான் தெரியும் என சொல்லவே இல்லையேம்மா..

கூகுளில் பூனம் பாண்டேவின் எந்த ஸ்டில்லை தேடிப் பார்த்தாலும் ஏற்கனவே இந்தியா கோப்பையை 90% ஜெயித்துவிட்டதாக தெரிகிறது.



Valaimanai Blogspot | Feelings | Mixted Blog Notes By Sukumar Swaminathan


Monday, April 4, 2011

தொலையும் சொர்க்கம் - சென்னை திரு.வி.க பூங்கா








கையில்இருந்த சொர்க்கம் நழுவிப் போனாற் போல் இருக்கிறது திரு.வி.க பூங்காவை மூடியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுமார் 8 ஏக்கர் அளவிலான இந்த பூங்காவில் பாதியை எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். கையில் புத்தககத்துடன் உள்ளே நுழைந்தால் அந்த இயற்கை சூழலில் கிடைக்கும் வாசிப்பனுவமே தனி. கணிணி எனக்களித்து அருள் புரிய ஆரம்பித்த தொப்பை சதவிகிதத்தை கணிசமாக குறைத்த பெருமை இந்த பூங்காவிற்கு உண்டு.




காதில் பாட்டுடன் வியர்க்க விறுவிறுக்க இங்கு நடக்கும் மனிதர்களை கண்டாலே ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடும்.  வளைந்து செல்லும் வட்ட பாதையில் அடிக்கடி பார்க்கும் ஜாக்கிங் முகங்கள், மரங்களின் அடியில் விழுதாய் மடியில் விழுந்து கிடக்கும் காதலர்கள், ஐந்து ரூபாய்க்கு அட்டகாசமான டீ கொடுக்கும் அந்த நண்பர், சுண்டல் வேணுமாய்யா என ஏக்கத்துடன் கேட்கும் அந்த 70 வயதை தாண்டிய பாட்டி, குறுகுறுப்புடன் நடக்கும் பள்ளி கூட சிறுமிகள், அவர்களை பின்தொடர்ந்து சில சமயம் சுள்ளான்கள், அம்மாக்களின் கண்காணிப்பில் விளையாடி மகிழும் சுட்டி பாப்பாக்கள், ஷட்டில் விளையாடி களைத்து மகிழும் அங்கிள்கள், சிட்டியில் செட்டிலாகி போன சோழ சேர பாண்டிய வாரிசுகளுக்கு ஊரை நினைவூட்டும் சென்னை சங்கமம் என அனைத்து காட்சிகளும் இங்கு ஒரே நாளில் நினைவுக்குறிப்புகளாய் நின்று போய் விட்டது.





இனி சில வருடங்கள் கழித்து இங்கே ரயில் நிலையம் வந்து விடும். அது போக மிச்ச இடத்தில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தாலும், அது இனிப்பை எடுத்துக்கொண்ட கரும்புச் சக்கையாகவே வெளிவரும். எத்தனை மரங்கள்.. எத்தனை செடிகள்.. நகரத்தில் வேறு எங்கு போவது இவ்வளவு பெரிய பூங்காவிற்கு..? வாய்ப்பே இல்லை...!!

 பைக்குகளும் கார்களும் தவணைகளில் சுலபமாக கிடைப்பதினால் சென்னை நெடுஞ்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இந்த ரயில் திட்டத்திற்காக இந்த தியாகத்தை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.


ஆனாலும் இந்த திட்டத்திற்காக செலவிடப்படும் தொகையை விட.. இந்த பூங்கா கொடுத்திருக்கும் விலை பல மடங்கு அதிகமானது. அது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. புத்துணர்ச்சி, ஆரோக்யம், விளையாட்டு,  காதல், அமைதி என பலரது தேடல்களுக்கான விடைகள் கிடைக்கப்பெறும் மனம் சம்பந்தப்பட்டது.



இனி சில வருடங்களில் காட்சிகள் மாறும். இங்கு டி.நகர் போல, பாரிஸ் முனை போல எக்மோர் போல மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். சில நூறு பேரின் தேவைகளை தினம் தீர்த்து வைத்த இந்த பூங்கா பல ஆயிரம் பேரின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் அவசியமான ரயில் நிலையமாக அப்போது மாறியிருக்கும்.

அன்றைய நாட்களில் ஒருநாள் கையில் புத்தகத்துடன் நான் பயணிக்கும் அந்த ரயிலில், பக்கத்தில் அமர்ந்து மாட்டும் அப்பாவி சிறுவனிடம் "அப்போ எல்லாம் இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா ??" என்று மட்டும் நான் போரடிக்காமல் இருக்க வேண்டும்.

_______________________________________________

Image Courtesy : magneos.com   ramyamohan.sulekha.com  acjnewsline.org    thehindu.com

Sunday, April 3, 2011

உலக கோப்பை வெற்றி - விட்டுவிட விரும்பாத தருணம்





இதோ இந்தியா உலகக்கோப்பையினை இரண்டாம் முறையாய் வென்றே விட்டது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத இத்தருணத்தை ஒரு டைரிக்குறிப்பின் அளவிற்கேனும் பதிவு செய்து வைத்து விட மனம் ஆசைப்படுவதால் கொண்டாட்டங்கள் முடித்த உடனேயே இந்த பதிவை எழுத உட்கார்ந்துவிட்டேன். ஏனெனில் இந்த நிமிடங்கள் அபூர்வமானவை. உற்சாகமூட்டுபவை. பெருமைப்பட வைப்பவை. இதை அப்படியே விட்டு விட மனதில்லை.

Sachin Tendulkar and Gautam Gambhir walk with the trophy

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோனி சொல்லியிருந்தார். இந்த உலகக்கோப்பையை சச்சினுக்காக பெற்றுத்தருவோம் என்று. அதே போல் இன்று சச்சின் கையில் கோப்பையை பார்க்க மகிழ்சசியாக இருக்கிறது. அனைவரும் அவரை தலையின் மேல் தூக்கி வைத்து வலம் வருவது சிலிர்ப்பாக இருக்கிறது.


பங்களாதேஷ் உடனான முதல் போட்டி ஆரம்பித்த அன்று எனது ஃபேஸ்புக் புரஃபைல் புகைப்படத்தை இவ்வாறாக மாற்றினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது இம்முறை தோனி மீது. ஐபிஎல் வென்றதும், சாம்பியன்ஸ் லீக் வென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதல் சுற்றுகள் முடிந்த உடன், இருந்த நம்பிக்கைக்கு எல்லாம் அடுத்தடுத்து சோதனையாக அணிகள் வரிந்து கட்டி வரத்துவங்கின. முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த காலிறுதி போட்டி அதிகபட்சமாக இதயத்துடிப்பை எகிறச்செய்தது. கடைசி ஓவர்களில் யுவராஜும் ரெய்னாவும் தில்லாக விளையாடி வென்றது மறக்க முடியாத அனுபவம். பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டேன். என்றைக்கு ஆஸ்திரேலியாவை கோப்பை பெற முடியாமல் தோற்கடித்து அனுப்பினார்களோ அன்றே நாம் முழு வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

அடுத்து பாகிஸ்தான் அரையிறுதியில். அந்த ஆட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அளவிற்கு படபடப்பை எகிறச்செய்யும் டைட் மேட்சாக இல்லையென்றாலும் மோதும் அணிகளுக்கான மதிப்பு மற்றும் பகை நாடுகள் என்ற பொதுவான பதம் காரணமாக இந்தியா ஜெயிக்கும் வரை படபடப்பாகவே இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாக் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்ரிடி பேச்சு உண்மையான ஸ்போர்ட்மேன் ஷிப்பை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக இலங்கை. இங்கிலாந்தை விக்கெட் லாஸ் இன்றி அவர்கள் அடித்த விதம் கண்டு பயந்து போயிருந்தேன். ஆனால் இன்று தோனியும் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிவிட்டனர்.

கோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது.

சிறப்பான இரவு. மகிழ்வாக தூங்கப்போகிறேன். தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

The champions celebrate with the World Cup trophy

91 club