Friday, October 29, 2010

ஃபீலிங்ஸ் - 29 - 10 - 10








■  வலைச்சரத்தில் நான்


இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன். வாரம் ஒரு பதிவர் தங்களுக்கு தெரிந்த பல பதிவுகளை அறிமுகப்படுத்தும் சாராம்சத்தை கொண்டது இந்த தளம். பாருங்க... படியுங்க.. என்சாய் பண்ணுங்க...







■  கடுப்பேற்றிய புத்தகம்



 சமீபத்தில் ஆசையாய் ஒரு தமிழ் புத்தகம் வாங்கினேன். குறிப்பிட்ட தியானம் சம்பந்தப்பட்டது. முக்கால்வாசி புத்தகம் வரை மற்ற பாசிட்டிவ் புத்தகங்கள் போல மாவு அரைக்கப்பட்டிருக்கிறது. அதை அப்படியே வைத்துவிட்டேன். அந்த டாபிக் போட்டா அதை பத்தி சொல்லுங்கப்பா... அதை விட்டுட்டு.. எனக்கு வந்த கடுப்புக்கு.... இதே சினிமாவா இருந்தா கிழி கிழின்னு கிழிச்சு பதிவு போட்டிருப்பேன். புத்தகமா போயிடுச்சு... நெகடிவ்வா பதிவு போட மனசு வரமாட்டேங்குது.
கடைசியில இதுக்கு நாமளே இந்த டாபிக்ல எழுதிடாலாமேங்கிற அளவிற்கு தோன்ற வைச்சிடுச்சி அந்த புத்தகம்.. 


ஒருவேளை இதுதான் தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் அப்படிங்கிறதோ...?



 டிவிட்டர்


நானும் டிவிட்டர்ல இருக்கேன்னுதான் பேரு..  என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒண்ணும் புரியலை... ஆனா பிளாக், பேஸ்புக் போல இதுவும் கொஞ்சம் தொப்பையை வளர்த்து விட போகுதுன்னு மட்டும் புரியுது. சமீபத்தில் நான் டிவிட்டிய சில உங்கள் பார்வைக்கு.



  வாரா வாரம் நடிகர்களுக்கு ஏதேதோ விருதுகள் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவங்க இம்சையெல்லாம் தாங்கும் ரசிகர்களுக்கு ஏதும் தரமாட்டாங்களாமா?

 மதராசப்பட்டிணம் படத்தை ஹிந்தியில் எடுத்தால் எப்படி இருக்குமென்றான் நண்பான். அடப்பாவி... அதை எடுத்ததே அங்கிருந்துதான்டா என்றேன்

✔ 2 நாட்களாய் ரஜினி, ஷங்கர் கொடுத்த பாடல் விளம்பரங்கள் மொக்கை ரகம். அந்த விதத்தில் ரஹ்மான் ரொம்ப நல்லவர். சொல்றது காதுலயே விழலை #எந்திரன்

✔ கலைஞர்தான் எவ்வளவு பெருந்தன்மையானவர்! கலைஞர் 86ம் ஆண்டு நூலகம் என வைக்காமல் அண்ணா நூற்றாண்டு நூலகம் என தன் பெயரைகூட விட்டுக்கொடுத்துள்ளார்.

✔  நம்ம லலித் மோடிக்கிட்ட CWG கேம்ஸை ஒப்படைச்சிருந்தா அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும்

டிவிட்டரில் என்னை தொடர : ✔ 



■  இந்த வார கார்ட்டூன்




காமன்வெல்த்துல நம்ம ஊழல் பெருமக்கள் அடிச்ச தங்கத்தையும் சேர்த்து கவுண்ட் பண்ணா.. பதக்க பட்டியல்ல நாமதான் மொத இடம் பிடிப்போம்.  அவனவன் கஷ்டப்பட்டு உசுரக்கொடுத்து விளையாடி தங்கம் ஜெயிக்கிறான்.. இந்த மாதிரி ஊழல் ஆளுங்க நோகாமா நோண்பு கும்பிடறாங்க... 
ஆனா சும்மா சொல்லக்கூடாது விளையாட்டு வீரர்களை விட ரொம்ப நல்லா விளையாடுறீங்கடா...

Sunday, October 24, 2010

எவ்ரிடே இஸ் சண்டே - 1



குறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவின் வழி வாழ்வை ரசிக்கலாம் என்றிருக்கிறேன்.
____


மீப காலத்தில் ரொம்பவும் உற்சாகத்தை வரவழைக்கும் பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஹோசானாதான். பாடல்களை காட்சிப்படுத்துவதில் கௌதம் மேனனின் ரசனையே தனி. அதிலும் இந்த பாடலில் பாடலின் தன்மைக்கேற்ப லொக்கேஷ்ன், உடை எல்லாம் இதமாக செட் ஆகியிருக்கும். சில பாடல்களில் சில வரிகள், சில இடங்கள் நம்மை வெகுவாக கவர்ந்துவிடும். இந்த பாடலில் "என் மீது அன்பு கொள்ள என்னோடு சேர்ந்தது செல்ல.." என வரும் இடங்களில் வரும் பாடல் குரலும், எழும் மெல்லிய இசையும் சில வினாடிகள் என்னை எங்கோ ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்கிறது.




இதே படத்தில் வரும் கண்ணுக்குள் பாடலில் "உன் நண்பனில்லை.. " என்ற இடத்திலும், மன்னிப்பாயா பாடலில் வரும் திருக்குறள் இசையிலும் மனது அங்கேயே நின்று கொண்டு சுலபத்தில் மீண்டு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது. 


யங்குகிறாள் ஒரு மாது பாடல். பின்னிரவுகளில் பயங்கர வேலைப் பளுவுடன் கணிணியில் உட்கார்ந்திருக்கும் வேளைகளில் இந்த பாடலை ஒரு முறை ஓடவிட்டு கண்ணை மூடி கேட்டால் மனதுக்கு அவ்வளவு இதமாய் இருக்கும். நல்ல ஓய்வெடுத்த உணர்வுடன் மீண்டும் வேலையை தொடர்வேன். அதிலும் பாடலின் நடுவே வரும் "அன்பே அன்பே... அன்பே அன்பே... அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா" என்ற வரிகளில் சுசீலா அம்மா உருகி ஓடியிருப்பார். எங்கோ பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் ஆளில்லாத ஒரு கிரகத்தின் மேல் வானத்தில் நம்மை மிதக்க வைக்கும் வல்லமை படைத்தவை இந்த வரிகளுக்கான குரலும் ராகமும். 


மொழி புரியாத சில பாடல்களும் இனம் புரியாத சந்தோஷத்தை கொடுக்கும்.  லஹே ரகோ முன்னாபாய் பாடல்கள் அவ்விதம். சென்னை திரு.வி.க பூங்காவில் நான் வாக்கிங் செல்லும்பொழுது காதில் ஹெட்போனில் இப்பட பாடல்கள் கசியும் பொழுது என் நடை வேகம் திடீரென அதிகரிப்பதை ரொம்ப நாள் கழித்துதான் உணர்ந்தேன்.


அதிலும் 'ஆனே சார் ஆனே' என வரும் பாடல் பயங்கரமான உற்சாக குறுகுறுப்பை உள்ளுக்குள் விதைத்துவிடும். வசூல்ராஜா படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தீர்களென்றால் பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். படமும் பிடிக்கும்.


ஞாயிறு கிழமைகளில் அம்மா சுடும் மட்டன் வடைக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. வறுத்துக்கொண்டிருக்கும்போதே சூடாக எடுத்து ஊதி ஊதி சாப்பிடும் சுகம் இருக்கிறதே. அட அட அட... கண்ணை மூடி சாப்பிடும் வேளையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிட்டார்போல் இருக்கும். 









ந்தானம். தமிழ் நகைச்சுவை திரை உலகில் தவிர்க்க முடியாத சொல் ஆகி வருகிறார். இவரது கண்டேன் காதலை பட நகைச்சுவை அட்டகாசம். இந்த படம் முழுவதிலும் இவரது எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்பவும் ரசிக்க வைக்கும். தமன்னா பரத்தை கட்டிப்பிடித்து சென்றவுடன் செடியை பிய்த்துக் கொண்டிருப்பாரே... வாவ்..  









ண்பர்கள். வாழ்க்கையின் வரம். சிலர் நமது வாழ்க்கை மாறுதல்களில் பெரும் பங்கு வகிப்பார்கள். சில நண்பர்கள் தற்செயலாக உதிர்க்கும் சொற்கள் அவர்களுக்கே தெரியாமல் நம்மில் வெகு ஆழத்தில் நிலைத்து பல வருடங்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


2007ல் ஒரு முறை பழைய நிறுவனத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நானும் செந்தில் கே.பி என்கிற அந்த நண்பனும் கலந்துகொண்டோம். நிறுவனத்தைப் பற்றி பிரஷ் ஏதுமின்றி வெறும் விரல்களை வைத்தே வரைய வேண்டும். சக போட்டியாளர்களில் ஒருவர் தேசிய ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர் என கிசு கிசு பரவியது. அவரை கை காட்டி நான் செந்திலிடம் சொன்னேன்,


"செந்தில்.. அவர் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்டாம்.. நாமெல்லாம் தாக்குபிடிப்போமா...?"


   "ஹேய்.. ஏன்டா சுக்கு பயப்படுற.. நாம இன்டர்நேஷனல் ஆர்டிஸ்ட்டுடா.." 


என நண்பன் சர்வசாதாரணமாய் சொன்ன அந்த வார்த்தைகள் அடிக்கடி என் நினைவிற்கு வரும். 


அந்த போட்டியில் வரிசைப்படுத்தாமல் சிறந்த 5 ஓவியங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் முதலில் அறிவித்தது. எங்கள் பெயரைத்தான்.




அடுத்த ஞாயிறு சந்திப்போம். 

Friday, October 8, 2010

என் திறன் உணரவைத்த எந்திரன்









எந்திரனை நேற்று மூன்றாம் முறையாய் பார்த்தபோது, முதல் இரண்டு முறையை விட பாசிட்டிவ்வாக தோன்றியது. 


ஏ.ஆர்.ரஹ்மான்


போரா, சிட்டியிடமிருந்து நியூரல் ஸ்கீமாவை டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பிக்கும் டெரர் மியூசிக், சிட்டி 2.0 வின் அரக்க குணத்திற்கு எக்ஸலென்ட் மேட்ச். வில்லன் சிட்டியின் சேட்டைகள மிரட்டலாக உணர வைப்பதில் ரஹ்மான் இந்த ஒரே இசையை வைத்தே பல இடங்களில் மிரட்டியிருக்கிறார்.


ஐஸ்வர்யாவை மண்டபத்திலிருந்து கடத்தி வரும் வழியில் ரேபோ போலீசாருடன் சண்டையிடும்பொழுது 2.0 என ஒரு தீம் மியூசிக் வருகிறது. கொஞ்சம் காமிக்கல் உணர்வினை இந்த இசை தருவதால் பயமுறுத்த ஆரம்பிக்கும் வில்லத்தனத்தின் வீரியம் குறைகிறது. 


படத்திற்கான பாடல்களையே மாற்றி மாற்றி பின்னணி இசையாக வடிவமைப்பது ரஹ்மானின் ஸ்டைல். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இது படத்தில் வரும் பாடலின் மெட்டு என நாம் உணரவே முடியாதபடி அமைப்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 
உதாரணத்திற்கு சிவாஜியில் ரஜினி சொத்தை இழந்து, ஷ்ரேயா இனி தேடி வராதீங்க என சொல்லிய பின் கையேந்தி பவனுக்கு செல்லும் வழியில் சோகமாக ஒரு 'ஆஆ....' இசை வரும். கூர்ந்து கவனித்தால் அது பல்லேலக்கா பாட்டில் வரும் காவிரி ஆறும் வரி மெட்டில் அமைந்திருக்கும்.


இதே போன்று இந்த படத்தில் முதல் பாதி சிட்டி ரோபோவிற்கான  பின்னணி இசை இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டில் இருந்து மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெயினில் ஐஸை காப்பாற்ற தண்டவாளத்தில் ஸ்கேட் பண்ணும்பொழுதும், சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் காப்பாற்ற வரும்பொழுதும், நெருப்பில் காப்பாற்றும் காட்சிகளிலும் வரும் இசை 'பீட்'கள் இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டுக்கள். இந்த சூழ்நிலைகளுக்கு அது மிக கம்பீரமாக  பொருந்தியிருக்கிறது.


அதேபோல், சிட்டி ரேபோவுக்கு உணர்ச்சிகள் வரும் வேளையில் ரஹ்மான் ஒரு இசை கொடுத்திருக்கிறார் பாருங்கள். இந்த இசையால் மிகவும் வினோதமான ஒரு உணர்வு வருகிறது.


படத்தின் மெயின் வில்லன் சிட்டி 2.0விற்கு ஒரு இசை என்றால் சாஃப்ட் வில்லன் போராவிற்கு இன்னொரு வகையான இசை. கருத்தரங்கில் சிட்டி அறிமுகத்தின்போது போரா அறிமுக காட்சியிலும், ஏ.ஐ.ஆர்.டி அப்ரூவலில் ரஜினியை நிராகரிக்கும்பொழுதும் வரக்கூடிய இசைகள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.


புதிது புதிதாய் இசை அனுபவத்தை நமக்கு தந்துவிட்டு இந்த மனிதரால் கொஞ்சம் கூட கண்ணில் கர்வம் இல்லாமல் எப்படித்தான் அப்புராணியாய் புன்னகைக்க முடிகிறதோ தெரியவில்லை.


ரத்னவேலு


சில இடங்களில் டூப், மாஸ்க், ஸ்டண்ட் என வேறு ஆட்களை பயன்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஒரே சீன்களில் வரும் வேறு விதமான ரஜினிக்களுக்கேற்ப மண்டை குழம்பாமல் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைக்கிறார். பின்னால் அமைக்கக்கூடிய சி.ஜி.க்களுக்கேற்ப முன்னாலேயே, காட்சியை பதிவு செய்யும்பொழுதே வெளிவரக்கூடிய முழு சீனையும் கற்பனை பண்ணி ஸ்ப்பா... எப்படியும் பெண்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் முழுப்படத்தையும் பார்க்கும் பொழுது இவை எதுவுமே நமக்கு தெரிவதில்லை. அதுதான் ஒளிப்பதிவாளரின் வெற்றி. ஆனாலும் ஈசியாய் நொல்லை சொல்லிவிட்டு போய்விடுகிறோம்.


பெருங்குடி குப்பை கிடங்கில் பார்ட் பார்ட்டாக கிடக்கும் ரேபோவை காரில் போரா ஏற்றிச்செல்லும் காட்சியில் கேமரா ஆங்கிள் சூப்பர். படமே தலை கீழாய் திரும்ப போகிறது என்பதற்கேற்ப காட்சியமைப்பு அது.


ராணுவத்தில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்யும் ஆங்கிளும், கிளிமஞ்சாரோவில் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு படம் பிடித்துள்ள சில ஷாட்களும் சூப்பர்.
ஐஸ்வர்யாவை பார்க்க பிடிக்காதவர்களுக்கு (?!) பின்ணணியில் ஆங்காங்கே மச்சு பிச்சுவின் எழிலையும் காண்பிக்கிறார். 




ஐஸ்வர்யா


இரும்பிலே ஒரு இருதயம் பாடலில், தங்க வண்ணத்தில் பாடல் பாதியில் மாறும் இடத்தில்  "யூ வான் டு..." என ஆரம்பிக்கும் ஆங்கில வரிகளை பாடிக்கொண்டே ஒரு கருப்பு டிரஸ்ஸில் ஐஸ் ஆட ஆரம்பிப்பார் பாருங்கள்.. அட அட அட.. செய்யும் வேலையை ரசித்து செய்திருக்கிறார் ஐஸ். வெகு நளினமான நடனங்கள். குறிப்பாக இந்த பாடலிலும் கிளிமஞ்சாரோ பாடலிலும்.


நடிப்பு.. ஐஸ் அதிலும் கலக்குகிறார். சிட்டியிடம் காதலை நிராகரிக்கும்பொழுது கொடுக்கும் விளக்க உரை, கொசுவை பிடித்து வந்து முத்தம் கேட்கும்போது 'சிட்டி..' என அலுத்துக்கொள்வதும், பிளாக் ஷீப் காட்சியில் ரஜினி வெறுப்பேற்றும்போது தவிப்பை மறைத்து புன்னகைக்க முயற்சிப்பதும் என ஐஸ் ஐஸ்தான்.




ஷங்கர்


கனவு படத்தையும் எடுக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இரண்டையும் பாலன்ஸ் செய்து பெடல் அடித்து வண்டி ஒட்டியிருக்கிறார் ஷங்கர்.


ஷங்கரின் கனவிற்காக ரஜினியும், ரஜினியின் இமேஜிற்காக ஷங்கரும் பரஸ்பரம் தியாகங்கள் செய்திருக்கிறார்கள என்பதே நிஜம்.


படம் பார்த்த என் நண்பர் ஒருவர்,
"ஷங்கரின் பத்து வருஷ கனவிற்கு ஏற்றார்போல படம் இல்லை" என்றார்.


நான் அவரிடம் சொன்னது இதுதான்,
 "இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."


ஜேம்ஸ் கேமரூனின் கனவான அவதார் என்னை எந்த அளவிற்கு பிரமிக்க வைத்ததோ அதே அளவிற்கு ஷங்கரின் கனவான எந்திரனும் பிரமிக்க வைக்கிறான்.  


இரண்டு வருடங்களில் இவ்வளவு வேகமாய் உழைத்து படத்தை கொண்டு வருவது எனில் எவ்வளவு நட்டு கழண்டிருக்கும் என உணர முடிகிறது.


கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை என ஏதேதோ சரியில்லைக்களை பட்டியிலிட்டு சொல்லலாம். ஆனால்... தமிழ், தெலுங்கு பிராதானம். டப் செய்யப்பட்டு ஹிந்தி, ஜப்பானிஸ் மொழிகள் போனஸ். சப் டைட்டிலில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கொசுறு. இதுதான் படத்திற்கான மார்கெட். இதை வைத்துக்கொண்டு இப்பேற்பட்ட தொழில்நுட்ப தரமான படத்தை இன்றைய காலகட்டத்தில் கொடுத்தமைக்கு ஷங்கரை பாராட்டியே ஆகவேண்டும்.




ரஜினி


பொசஸிவ்னெஸ்ஸில் சிட்டியால் கடுப்புறும்  விஞ்ஞானி, வசீகரன் தன்னை உடைக்கும் பொழுது உயிர் வாழ கெஞ்சும் சிட்டி, மே மே... என மிரட்டும் ரேபோ 2.0 என ரஜினியின் ஆதிக்கம் படம் முழுவதிலும் இருக்கிறது. ஆனால் அவரது நடிப்பிற்காக பாராட்டுவதை விட அவரது உழைப்பிற்காக பாராட்டுவதே பொருத்தமாக இருக்கும். 


60 வயசு. ரிட்டையர் ஆகி ஓய்வெடுக்க உடல் கெஞ்சும் தருவாயில், கதை கேட்கும்பொழுதே கதி கலங்க செய்யும் புராஜக்டை கையில் எடுத்து அதை அனுபவித்து நடித்துக்கொடுத்திருக்கும் ரஜினி சிறந்த மாபெரும் உழைப்பாளி. 


ஆனால் அவர் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறாரே? 
 சும்மா உட்கார்ந்து ஓப்பி அடித்து கோடி கோடி கணக்கில் பணம் சுருட்டும் அரசியல், ஊழல்வாதிகள் இருக்கும் நாட்டில் உழைத்து பணம் சம்பாதிக்கும் ரஜினி எவ்வளவ்வோ மேல்.


அதுக்காக அவர் சும்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடி வசனம் பேசறதுக்கு கோடி கணக்கில் பணமா..?
 இது சும்மா வேலைதான் என்றால் இதே வேலையை நீங்களே நானோ செய்ய முடியாது. என்னால் செய்ய முடியும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என சொல்கிறீர்களா.. வாய்ப்பை யாரும் தேடி வந்து கொடுக்க மாட்டார்கள். தேடி தேடி அடிபட்டு மிதிபட்டுதான் ரஜினி இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் சும்மா ஆகிவிடவில்லை சூப்பர் ஸ்டார். 


டிரெயின் சண்டை காட்சி, ரோபோ பாடல் காட்சிகளில் மாஸ்க் போட்டு வேறு யாரோ பொர்பார்ம் செய்ய, புகழ் மட்டும் இவருக்கா?
 அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டோ அல்லது வேறு முகம் போல வடிவமைத்து போட்டுக்கொண்டு பெர்பார்ம் செய்தாலோ அவர்களுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. இந்த முகத்தை இத்தனை வருட உழைப்பில் மக்கள் மனதில் நிறுத்தியது தான் ரஜினியின் பெர்பார்மன்ஸ். மாஸ்க் போட்டு உழைத்திருக்கும் கலைஞர்களை மட்டம் தட்டவில்லை. அவர்களுக்கான பாராட்டு  கண்டிப்பாய் உண்டு. ஆனால் அவர்களது முகத்தை, அவர்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் அவர்கள்தான் மக்கள் மனதில் நிறுத்த வேண்டும்.


எந்திரன் 


ஏ.ஆர், ஐஸ், ரத்னம், ஷங்கர், ரஜினி என அவரவர் தனித்தன்மையான கூட்டு உழைப்புகளால் உருவாகி இருக்கும் எந்திரனை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பு மட்டுமே ஏற்படுகிறது. 


சினிமா என்பதும் ஒரு தொழில்தான். இதே போன்றதொரு புதிய சிந்தனையை, புதிய தொழில்நுட்பம் நாடும் தேடலை சிறப்பான உழைப்பை நமது வேலையில், நமது தொழிலில் நாம் முயற்சித்து பார்க்கிறோமா என்பதை மட்டுமே நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 


நமது சமகால தமிழர்கள் வட இந்தியாவை, உலகை, பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இதேப்போன்ற பிரமிப்பை நமது தொழிற்சர்ந்த சாதனைகளால் நாமும் நிகழ்த்த முடியும் என்கிற பாசிட்டிவ் உணர்வினை எனக்கு தந்த எந்திரனுக்கு நன்றி!

Friday, October 1, 2010

எந்திரன் பார்த்து என்னத்த கிழிச்சோம் - வலைமனை விமர்சனம்





காலை 8 மணி காட்சி. உட்லண்ட்ஸ் திரையரங்கில் எந்திரன். நண்பர்களுடன் 7.30க்கே சென்று விட்டேன். ரசிகர்கள் கொண்டாட்டம் அவ்வளவாய் இல்லை. பார்க்கிங்கில் ஒரு சுமோவில் எந்திரன் பாடல்களை சத்தமாய் வைத்துக்கொண்டு நாலைந்து பேர் ஆடிக்கொண்டிருந்ததை தவிர. 




ரஜினி பேனருக்கு இருவர் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தனர். படத்தின் காஸ்ட்லி பட்ஜெட்டுக்கு ஏற்ப ரசிகர்கள் 'ஆரோக்யா' பால் ஊற்றிக்கொண்டிருந்தது, படத்திற்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.


ஸ்கிரீன் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள். என்ன இருந்தாலும் போலீஸ் பந்தோபஸ்துடன் படம் பார்ப்பது தனி மரியாதைதான். சன் பிக்சர்ஸ் டைட்டிலுட்ன் படம் ஆரம்பித்தது. 7.55க்கே படத்தை போட்டுவிட்டார்கள். கடைசியில் பல வருடங்களாய் காத்திருந்த எந்திரனை பார்த்தே விட்டேன்.





மெதுமெதுவாய் படம் ஆரம்பிக்கிறது. ரோபோவை அசெம்பிள் செய்யும் விஞ்ஞானி ரஜினி சர்வசாதாரணமாய் இன்ட்ரொட்யூஸ் செய்யப்படுகிறார். ஒரு ரசிகனாய் இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் பின்னர் தான் தெரிகிறது மற்ற ரஜினி படங்களில் ஒரே ஒருமுறை வரும் இன்ட்ரொடக்ஷன் காட்சியின் விறுவிறுப்பு , இப்படத்தில் அடிக்கடி வந்து பட்டையை கிளப்புகிறது. சிட்டி ரேபோ உருவாவது, வில்லன் ரோபோ அவதாரம், கிளைமேக்ஸ் கிராஃபிக்ஸ் கலக்கல் எல்லாம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.


படத்தில் பல இடங்களில் வசனம் பளிச்சிடுகிறது.  பாடல் காட்சிகளில் கிளிமாஞ்சாரோ டான்ஸ் சூப்பர், சிட்டி தீம் மியூசிக்கில் நடனம் அட்டகாசம், அரிமா அரிமா பாடலும் நைஸ் மற்றதெல்லாம் நாட் பேட்.




 முதல் பாதி எந்திரன் அட்டகாசமாய் பறக்கிறது. சிட்டி ரோபோ செய்யும் சாகசங்களும் காமெடிகளும் அமர்க்களம். சென்டிமென்ட் காட்சிகளும் படத்தில் உண்டு. உணர்ச்சிகளை அறியாத எந்திரன் தீவிபத்தில் பெண்ணை காப்பாற்றும் காட்சியும், உணர்ச்சியூட்டிய பின்னர் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சியும் மனதில் நிற்கின்றன. 


முதல் பாதி முடிந்து கொஞ்ச நேரம் படம் ஸ்லோவாக செல்கிறது. ஆனால் அக்குறையை போக்க வில்லன் அவதாரம் எடுக்கும் ரோபோ கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்ட ஆரம்பித்து கிளைமேக்சில் கலக்கி எடுக்கிறது.


முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இரண்டும் வேறு வேறு ரகம். முதல் பாதியில் டிரெயின் சண்டையில் சிட்டி ரோபோ சாகசங்கள் ரசிகர்கள் கூச்சலை அதிகரித்தபடியே இருக்கிறது. இரண்டாம் பாதியில் கடைசி அரை மணி நேர கிராபிக்ஸ் கலக்கல் இருக்கிறதே.. அதைப்பார்த்தால்தான் புரியும். என்னதான் ஆங்கில படங்களில் நாம் இதேப்போல் பார்த்திருந்தாலும், இங்கு சற்று புதுமையாக அதுவும் நம் தமிழ் மொழியில் செய்திருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும். 




ரஜினி! பெரிய இமேஜ் வட்டத்தை வைத்துக்கொண்டு இது மாதிரியான புது மாதிரி கதையை ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். சிட்டி ரோபோ, விஞ்ஞானி, வில்லன் ரேபோ என ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை காட்டுகிறார். விஞ்ஞானி கேரக்டரை கொஞ்சம் சொங்கி மாதிரியும், சிட்டியில் படு சுட்டியாகவும், வில்லன் ரேபோ 2.0 வில் பழைய கால வில்லன் ரஜினி போலவும் கலக்கியிருக்கிறார்.


ஐஸ்வர்யா ஐஸ்வர்யாதான். அவரை சுற்றி கதை வருவதால் கொஞ்சம் வெயிட்டான ரோல்தான். வெகு சொற்ப இடங்களில் வயது தெரிவதை தவிர்த்து படம் முழுவதும் வெகு அழகாக இருக்கிறார் என்பதை நான் சொல்ல வேண்டும் என்பதில்லை. நடனங்களில் அவரது நளினம் அபாரம்.



நான் பார்த்த திரையரங்கில் சவுண்ட் சிஸ்டம் சுமார்தான்.  ஆனால் ரஹ்மான் கண்டிப்பாய் கலக்கி இருக்கிறார் என்பது மட்டும் ஆங்காங்கே புரிந்தது. 


சந்தானம், கருணாஸ் பாத்திரங்கள் கடைசிவரை குழப்ப நிலைதான். ரஜினியை அங்கங்கே துண்டு துண்டாக பார்ப்பது கொஞ்சம் என்னவோ போல் இருக்கிறது. உணர்ச்சிகளை போர்டில் எழுதி வைத்து பாடம் எடுத்தால் ரோபோ ரஜினி புரிந்து கொள்கிறது. அது எப்படி சாத்யம் என யோசித்தாலும், சுஜாதாவின் கதை என்பதால் அவர் சொன்னா சரியாய்தான் இருக்கும் என மனதை தேற்றிக்கொண்டு மேலே பார்த்தேன். 


இதுபோன்ற சிற்சில குறைகள் படம் பார்க்கும் போது தோன்றினாலும், ரஜினியின் அட்டகாசத்தாலும், ஷங்கரின் திறமையான காட்சியமைப்பினாலும், சன் பிக்சர்ஸின் கோடிக்கணக்கான கிராபிக்ஸ் காட்சிகளினாலும் திரையரங்கத்தை விட்டு வெளி வரும்முன் அவற்றை மறந்து போய்விட்டேன்.


இதற்கு மேல் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு சிறப்பான விருந்து யாராலும் வைக்க முடியமா தெரியவில்லை. சுஜாதா இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஷங்கரின் பல வருடக் கனவு நன்றாகவே நனவாகியிருக்கிறது.






அதெல்லாம் சரி பதிவு பெயர்க்காரணம் சொல்லுங்கன்னுதானே கேக்குறீங்க... ரஜினி படத்துக்கு ஃபர்ஸ்ட் ஷோ போறோம்.. பேப்பர் கிழிச்சி எடுத்துட்டு வாடானு இந்த கிஷ்ணா பையன்கிட்ட  சொன்னா பய வெறுங்கையா வந்து நிக்கிறான். அதான் தியேட்டர் பக்கத்துல இருந்த பொட்டிகடையில இன்னிக்கு வந்திருந்த நல்ல தரமான ஆங்கில தினசரி நாலு வாங்கிட்டுப்போய் உள்ளே உட்கார்ந்து கிழி கிழின்னு கிழிச்சி வீசிக்கிட்டே பார்த்தோம். 


தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமா சரித்திரத்திலேயே எந்திரன் என்கிற ரோபோ ஒரு தைரியமான முயற்சி. அந்த முயற்சியில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்!!




Tags : Enthiran Review, blog, blogger, sukumar swaminathan, robot endhiran endiran entiran endhtiran rajnikanth aishwarya rai, a r rahman sun pictures movie review

91 club