Friday, December 14, 2012

டால்பி அட்மாஸில் அதிரும் சிவாஜி 3டி





"சிவாஜியை... விடுதலை செய்" என ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலிருந்து வீசப்படும் ஆரஞ்சு பழம் ஒன்று நம் மீது விழுவதில் ஆரம்பிக்கிறது சிவாஜி 3டியின் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸ்! 3டி தொழில்நுட்பத்திலேயே எடுக்கப்பட்டதாக கூறப்படும் பல ஹாலிவுட் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போன்ற அசத்தலான, நம்ப முடியாத தொழில்நுட்பத்தில் 2டி சிவாஜியை 3டி மயமாக்கி இருக்கிறார்கள்!

பாடல் காட்சிகளில் 3டி தொழில்நுட்பத்தின் ஆழத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டையும் உழைப்பையும் காண முடிகிறது. முன்னால் ஆடும் ரஜினி நயன்தாரா தொடங்கி, குரூப் டான்ஸர்கள், பின்னால் தெரியும் ஏரி, கடைசியில்  தெரியும் மலை வரை, லேயர் லேயராக மிகத் துல்லியமான டெப்த் அசத்துகிறது!

ஆங்கில 3டி படங்களில் கூட காண முடியாத கண்களுக்கு அருகே வரக்கூடிய 3டி எலிமென்ட்ஸ் இப்படத்தில் அதிகம். ஷங்கர், தோட்டாதரணி, கே.வி.ஆனந்த் பல்லேலக்கா பாடலில் செல்போனை தூக்கி வீசுகையில் அது சுழன்று சுழனறு நம் மேலே வந்து விழுகிறது!  சண்டைக்காட்சிகளில் பொருட்கள் நம் மேல் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் நமக்கும் பூ தூவுகிறார்கள். கிளைமேக்ஸில் தியேட்டர் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறப்பது உச்சகட்ட திரில்.

(பணத்தை விடுங்க பாஸ்... வாஜி பாடலில் ஷ்ரேயா நீச்சல்குளத்தில் குளிக்க, அவர் குளித்த தண்ணீர் அப்படியே நம் மீதும் தெளிக்கிறதே.. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்! ஹி..ஹி..)


http://en.wikipedia.org/wiki/Dolby_Atmos

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏப்ரல் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டால்பி அட்மோஸ் என்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உலகெங்கும் இதுவரை வெளிவந்திருக்கும் வெகு சொற்ப திரைப்படங்களில் சிவாஜி 3டியும் ஒன்று என்பது இதன் சிறப்புகளுக்கு மணிமகுடம். அதுவும் இவ்வாறான தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படமும் கூட.

http://www.dolby.com/us/en/professional/technology/cinema/dolby-atmos-video.html

படம் முழுவதிலும் டால்பி அட்மோஸ் பட்டையை கிளப்புகிறது. அதிலும் கிளைமேக்சில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும்பொழுதும், சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு பிரமிப்பான ஒலி அனுபவத்தை தந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருக்கும் சீட்டும், கால் வைத்திருக்கும் தரையும் அதிருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போதைக்கு இந்தியாவிலேயே டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் திரையரங்கங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சத்யம்-செரின், மற்றொன்று எஸ்கேப்-ஸ்ட்ரீக்! நான் முதல் நாள் இரவுக்காட்சி எஸ்கேப்பில் பார்த்தேன். நம்ப முடியாத பிரமிப்பூட்டும்  திரை அனுபவம்! முடிந்தவரை டால்பி அட்மோஸில் பார்க்க முயற்சி செய்யுங்கள்!

ஏ.வி.எம் லோகோ கருப்பு வெள்ளையில் கம்பீரமாய் துவங்கும் காலம் முதல் இன்று முப்பரிமாணத்தில் ஒளியும் டால்பி அட்மோஸில் ஒலியும் சேர்ந்து கொண்டு துவங்குவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தான் என்றுமே ஒரு ஜாம்பவான் என்பதை நிருபித்திருக்கிறார்கள் ஏ.வி.எம். 

இத்தகைய சிறப்பான முயற்சியை மேற்கொண்ட ஏ.வி.எம்மிற்கும்,  பிரமிக்க வைக்கும் பணியினை செய்திருக்கும் பிரசாத் லேப் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Sivaji 3d Review Movie Experience Dolby Atmos - Satyam Serene - Escape Streak - AVM Productions - Prasad Lab - Rajni 12 12 12

Wednesday, December 5, 2012

கேபிளின் கதை | நூல் அனுபவம்



கேபிள் சங்கர் என பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண், தனது புனைப்பெயரில் உள்ள 'கேபிள்' கொண்டிருக்கும் அனுபவத்தையும், கேபிள் டி.வி.யின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றையும் ஒருசேர படைத்திருக்கும் 'கேபிளின் கதை' வெகு சுவாரஸ்யமான அறிவூட்டும் அனுபவம்!

படு வேகமான வளர்ச்சிப் பாதையில் போகும் ஒரு தொழிலைச் செய்வது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, பணம், தினமொரு சேனல், அதற்கான முஸ்தீபுகள் என்று தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் ஆப்பரேட்டர்கள். இதுப் போல பல பிரச்சனைகளை சந்திக்கத் தயாராக இருக்கக்கூடிய ஆள்தான் ஆட்டத்தில் இருக்க முடியும் என்ற நிலைமையானது.

கேபிள் டி.வியின் வரலாறு சொல்லப்படும் அதே நேரத்தில் அன்று தனக்கு நேர்ப்பட்ட சொந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சேர்த்து சொல்வது போன்ற யுத்தி அருமையானது. ஆனால் பாதியில் தனது சொந்த அனுபவ கதை நிறுத்தப்படுவது சிறு ஏமாற்றம்.


அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டானா, அப்படிய என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருந்தது.


கேபிள் டி.வி உருவான காலம் முதல் அது தமிழகத்தில் தரவிறங்கி இன்று அரசியலுடன் இரண்டற கலந்துவிட்ட நிலை வரை ஒவ்வொரு இடத்திலும் விலாவாரியாகவும் தொழில்நுட்ப சமாச்சாரங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படியும் சொல்லப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை.


இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளான ஆண்டெனாவில் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக்கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டி.வியை ட்யூன் செய்து படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை.

டிவி வாங்கி, மாடியில் ஒரு ஆண்டனாவை பொருத்திவிட்டால் அன்றைய தேதிக்கு இரண்டு சேனல்கள் கச்சிதமாய், நல்ல துல்லியமான ஒளிபரப்பு கிடைத்துக்கொண்டிருந்த நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாய் கேபிள் டி.வி ஒளிபரப்பு பிரபலமாக, அதுவும் இது நாள் வரையில் தமிழ் இல்லாத மற்ற மொழி சேனல்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நேரத்தில், சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதும், பெரும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து.


நல்ல தாளில், கண்ணை உறுத்தாத அழகான லேஅவுட் வடிவமைப்பில் நாகரத்னா பதிப்பகம் இந்நூலை உள்ளடக்த்திற்கு ஏற்றவாறான தரத்தில் கொடுத்திருப்பது ப்ளஸ்.

இப்புத்தகத்திற்கான முகப்பு அட்டை வடிவமைத்தவன் என்கிற முறையில் எனக்கு இது கூடுதல் சிறப்பான வாசிப்பனுவம்.

ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும் கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பார்க்க வேண்டும்.

கேபிள் டி.வி. பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்கிற சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், கேபிள் டி.வி குறித்த தகவல் சொல்வதில் வரலாற்றில் தனி இடம் பெறப்போகிறது!

கேபிளின் கதை | ஆசிரியர்: கேபிள் சங்கர் | விலை ரூ.100 | நாகரத்னா பதிப்ப வெளியீடு

புத்தகம் வாங்க : இங்கே சுட்டவும் 

நீல நிற சொற்கள், புத்தக மேற்கோள்களாகும்.

Thursday, November 15, 2012

விஜயிஸம் இல்லாத துப்பாக்கி | வலைமனை



"துப்பாக்கி சூப்பரா இருக்கு. விஜய் படம் மாதிரியே இல்ல." என முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இட்டிருந்தேன்.
கேபிள்ஜி, "அதனாலதான் நல்லாயிருக்கு" என ரிப்ளையிட்டிருந்தார்.

உண்மை! விஜய், டைரக்டர்ஸ் ஹீரோவாக தனது கேரியரில் இரண்டாம் இன்னிங்ஸை நிதானமாக துவக்கி வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

என்னதான் காவலன், நண்பன் என துப்பாக்கிக்கு முன்னரே இரண்டு படங்களில் 'விஜயிஸம்' தென்படவில்லை என்றாலும், குருவி, சுறா, எறா, புறா என பெயர் கூட ஞாபகம் இல்லாத தொடர் விஜய் படங்களில் செமத்தியாய் நாம் அடி வாங்கி இருந்ததால் காவலன், நண்பன் முதலிய படங்களின் மூலம் ரிலீஃப் கிடைத்ததே தவிர நாம் ரிக்கவர் ஆகவில்லை.

ஆனால், துப்பாக்கி படம், விஜயிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாய் குணப்படுத்துகிறது. அமைதியாய், அழகாய், ஸ்மார்ட்டாய், க்யூட்டாய் என காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக காலத்தில் நம் வீட்டு சமத்துப் பிள்ளையாக பெயர் பெற்றிருந்த விஜயை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.

இதே படத்தில் 'விளம்பர தளபதி சூர்யா' நடித்திருந்தால், ஓவர் ஸ்மார்ட்னெஸ் சிரிப்புடன், சட்டையை கழற்றி வீசி சிக்ஸ் பேக்குடன் என சூர்யாயிஸத்தை தெணற தெணற அடித்திருப்பார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் விஜய்க்கும் நாம் முதலில் நன்றி சொல்லிக்கொள்வோம்.

எப்பொழுதும் விஜய் படங்களில் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலும் நயாபைசாவிற்கு கூட தேறவில்லை. பாட்டு ஹிட்டடிக்குது படம் மொக்கை வாங்குதே என யோசித்து வேண்டுமென்றே ரிவர்ஸ் டெக்னாலஜியில் பாடல்களை மொக்கையாக இசையமைத்தாற் போலிருக்கிறது.

ஆங்.. அப்புறம் படத்தில் காஜல் இருக்கிறார். எனக்கென்னவோ மாற்றானிலும் சரி, துப்பாக்கியிலும் சரி மஹதீராவிற்கு பிறகு காஜலுக்கு சரியான கேரக்டர் மட்டும் அல்ல சரியான காஸ்ட்யூம் கூட தரப்படவில்லையென்ற குறை இருக்கிறது.

எனர்ஜியான், ஒலிம்பிக், டி.என்.ஏ, விஞ்ஞானம் என பல விஷயங்களை கலக்கியெடுத்து கே.வி.ஆனந்த் மாற்றானிலும், ஜுடோ, பேட்மேன், அயன்மேன், சுத்தியல் என மிஸ்கின் முகமூடியிலும் வரிந்து கட்டிக்கொண்டு மானாவாரியாக கதையை கொத்து போட்டு வெத்து ஆக்கியது போல அல்லாமல் 'ஸ்லீப்பர் செல்ஸ்' என்கிற ஒரேயொரு டாபிக்கை தேசபக்தி கொண்ட கதாநாயகன் மூலம்  சுவாரஸ்யமாகவும் சிம்பிளாகவும் குழப்பாமல் சொல்லி ஜெயித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இனிமேல் விஜய் படங்களிலும் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்து அவரது அடுத்த படத்தை சாமான்ய ரசிகரையும் எதிர்பார்க்கச் செய்ய வைத்த வகையில் துப்பாக்கி மாபெரும் வெற்றி பெறுகிறது!

வெல்கம் பேக் விஜய்! வி ஆர் வெயிட்டிங்!

Saturday, September 1, 2012

முகமூடி - பிளாக் எழுதுபவர்களுக்கான தண்டனை



முகமூடி குறித்து மிஷ்கின் சில மாதங்கள் முன்பு விகடனுக்காக அளித்த பேட்டியின் வைர வரிகளின் தொகுப்பு :




"முகமூடி என் சின்ன வயசுக் கனவு."

படுக்கும்போது பக்கத்துல சாமி படம் வச்சிக்கிட்டு தூங்குனா இதுபோல கெட்ட கனாலாம் வராதுன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நீங்க வேணா டிரை பண்ணி பாருங்களேன்.



"அம்புலி மாமா பாலமித்ரா முத்து காமிக்ஸ் படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான்."

 எப்படியும் இன்னைக்கு முகமூடி பார்த்திருப்பான்..நாளையில இருந்து வர மாட்டான்... நீங்க நிம்மதியா தூங்கலாம்.



"முகமூடி ஸ்க்ரிப்ட் முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன்."

 ஸ்க்ரிப்ட்டா.. அதெல்லாம் இருக்கா படத்துல.. கடைசி வரைக்கும் கண்ணுல காட்டவே இல்லீங்களே சார்...



"இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம்."

அதை விட நீங்க எடுக்கிறதை பார்க்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..



"கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்க்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்."

(இதை மட்டும் கில்லி விஜய் குரலில் படிக்கனும்) : அதுக்கு பேரு யோசிச்சுப்பார்த்தேன் இல்ல புவி... பேட்மேன் படம் பார்த்தேன்!



"ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக்கை மாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை."

அதுக்காக இவ்ளோ சாகசமா சார் வைப்பீங்க படத்துல...? இதய நோய் உள்ளவர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கெல்லாம் டிஸ்க்கிளைமர் போட வேணாமா...? ஆனாலும் ஸ்பைடர்மேன்லாம் உங்க சூப்பர் ஹீரோ மொட்டை மாடியில குரங்கு பல்டி அடிக்கிற சாகசத்தை பார்த்தான்... தானே சிலந்தி  கயிறு விட்டு அதுல தூக்கு மாட்டி செத்தே போவான்..


"நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கிற படம் முகமூடிதான்"

சில பேருடைய சந்தோஷத்தில் பலருடைய துக்கம் இருக்கிறதுன்னு யாரோ அறிஞர் சொன்னது சரியாத்தான் இருக்கு.



"ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது அதுமாதிரியான படம் இல்லை. புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? முகமூடி சோடா மூடின்னு தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க."

ப்ளாக்ல எழுதற எங்க மேல ஏதாச்சும் கோவம் இருந்தா நீங்க பேசி தீர்த்திருக்கலாம். ஆனா இப்படி ஒரு படத்தை எடுத்து எங்களை பார்க்க வச்சது ரொம்ப பெரிய தண்டனை சார்..


"ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை."

ஐ.. இது தெரியுமே. நீங்க மிஷ்கின்!


"எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன்"

ஆனாலும் இவ்ளோ தெளிவு தமிழ்நாடு தாங்காது சார் ...  எதுக்கும் உங்க 3டி கண்ணாடியை கொடுங்க.. அதைப் போட்டு பார்த்தாலாவது தெளிவா தெரியுதா பாக்கேன்...


"இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும்."

அட.. இதை மொதல்லயே சொல்ல வேணாமா.. நான் தியேட்டர்ல வெச்சுல்ல படத்தை பார்த்தேன்.. அதான் எனக்கு புரியலையா??




"சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு."

எதுங்க அந்த நீல சொக்காவா..?  சத்தியமா எங்க அக்கா பையன் ஸ்கூல் பேன்சி டிரஸ் காம்பெடிஷனுக்கு இதே டிரஸ்ஸை வடபழனில வாடகைக்கு எடுத்தேன்.  150 ரூவால்ல முடிஞ்சிருச்சு.





"ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம் சேர்க்கும்"

அது தெரியலை.. பட் பாவமும் பரிதாபமும் ரொம்ப சேர்க்கும்.



"ஜீவா இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார்."

தெரியாம இறங்கிட்டேன்.. யார்னா தூக்கி விடுங்கய்யான்னு கதறியிருப்பாரே..
(பார்க்க மேலே இணைக்கப்பட்டுள்ள படம்!)



"இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கு."

இப்போ போன் பண்ணிப்பாருங்க.. உங்க நம்பர் பார்த்ததும், 'சஸ்கிரைபர் கெனாட் பி ரீச்ட்'னு அவரே குரல் மாத்தி லேடீஸ் வாய்ஸ்ல பேசுவார்!!!!


________

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. கருத்து சுதந்திரம் உள்ள இந்தியத் திருநாட்டில்,  மேல் உள்ள பேட்டியில் கூறப்பட்ட பொருளுக்கான விளம்பரத்தை நம்பி 120 ரூபாய் காசு கொடுத்து பொருளை வாங்கி அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கஸ்டமர் எழுதியது. (120 ரூபாய்க்கு ரசீதும் உள்ளது.)  


Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு | வலைமனை




பணிகள் காரணமாக பாதியில்தான் செல்ல முடிந்தது ஒரு குறையாக இருந்தாலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சென்றது நிறைவாக இருந்தது.  இப்படி ஒரு நிகழ்வை திட்டமிட்டு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் அறிந்த வரையில் இதன் பின்னணியில் இயங்கிய மூத்த பதிவர்கள் சென்னைப்பித்தன் ஐயா, இராமனுசம் ஐயா, பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், மின்னல் வரிகள் பால கணேஷ், திடங்கொண்டு போராடு சீனு, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன் குமார் மற்றும் அனைவருக்கும் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) இத்தகைய சிறப்பான முயற்சிக்கு பாராட்டுகள்.

இந்நிகழ்வில் பதிவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், பலா பட்டறை ஷங்கர், பட்டாம்பூச்சி சூர்யா, மணிஜி, எல்.கே. மணி ஆயிரத்தில் ஒருவன், பதிப்பாளர் குகன், அதி பிரதாபன், சங்கவி, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், மோகன் குமார், திசைகாட்டி ரோஸ்விக் ஆகியோரை சந்தித்து பேச முடிந்தது மகிழ்வாய் இருந்தது.

நான் சென்ற பொழுது கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வந்திருந்தார். சுரேகா சிறப்பாக தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். மயிலன் என்பவரது கிரியேட்டிவ்வான கவிதைக்கு அரங்கம் அதிர்ந்தது.

கட்டக்கடைசியாய் கேபிள்ஜி தனது எண்டர் கவிதையை வாசித்தார். கவியரங்க இறுதியில் தேநீருடன் போண்டா வழங்க ஆரம்பித்தனர். சும்மா சொல்லக்கூடாது போண்டா வாசனை சுர்ரென தூக்கியது. ஒரு கட்டத்தில் சுரேகா போண்டாவிடமிருந்து எங்கள் கவனத்தை மீட்டெடுக்க அறிக்கை விடும் அளவிற்கு சென்று விட்டது.

சரியாய் அப்பொழுது பேச எழுந்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், "போண்டா கிடைச்சவங்க சாப்பிடலாம் தப்பில்லை... சில பேரு கையில வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என தனது இன்டெலிஜன்ட் ஹுமர் முத்திரையுடன் பேச்சை துவக்கினார்.  இருபது முதல் முப்பது நிமிடம் அவர் பதிவுகள், பதிவர்கள், பதிவுலகம் குறித்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும்  பதிவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பொருள் பொதிந்ததாக இருந்தது.

விழாவில் வெளியிடப்பட்ட பெண் பதிவர் சசிகலா சங்கர் அவரது தென்றலின் கனவு புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது சிறப்பு. அவருக்கும் வாழ்த்துக்கள்.

பின்னர் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற, அரட்டை கச்சேரிகளில் பங்கெடுத்துவிட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களை பிலாசபி பிரபா மூலம் அறிந்து அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.  நிச்சயம் சிறப்பானதொரு நிகழ்வு. மென்மேலும் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....!

Thursday, May 31, 2012

ஒரிஜினல் சென்னை சூப்பர் கிங்

















































































வாழ்த்துக்கள் விஸ்வநாதன் ஆனந்த்...!!!
மீள்பதிவு : THURSDAY, MAY 20, 2010

Thursday, April 12, 2012

என் விகடனில் வலைமனை




இந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வலைமனை குறித்த அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகளுடன், எனது ட்வீட்ஸும் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. 


ரெண்டு பக்கம் விகடனில், அதுவும் பிறந்த ஊர், படித்த கல்லூரியின் அடையாளங்களுடன்.  தீபாவளி ராக்கெட்டின் திரியைக்கொளுத்தினாற் போல் மனது பறந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆஸ்கார்களை வாங்கி கொண்டு ஏ.ஆர் எல்லாம் எப்படித்தான் கம்மென்று இருந்தாரோ... மேன் மக்கள் மேன்மக்களே...!



விதையில் ஒளிந்திருக்கும் செடியை தண்ணீரும், ஒளியும் மேலெழ செய்வது போல ஊக்கம் தந்து வலைமனையை உயிர்ப்போடு வைத்திருக்கும் இணையம் மற்றும் இணையம் சாராத அனைத்து நண்பர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் பதிவர்களை ஊக்கப்படுத்தும் விகடன் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  




Wednesday, April 11, 2012

நாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வலைமனை போட்டூன்ஸ்


அனைத்து கற்பனையே .. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல..  (படங்கள் | நன்றி : பி.சி.சி. ஐ)










Thursday, April 5, 2012

ஐ.பி.எல் கொசுவர்த்தி | வலைமனை



2009ல் வலைமனையில் பதிவெழுத ஆரம்பித்த வேளையில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி போஸ்ட் செய்து நானே படித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன். இப்படியாய் பதிவுலக வாழ்க்கை நிம்மதியாய் போய்கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் நான் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸை போட, அது வரை ஹிட் மீட்டரில் சிங்கிள் டிஜிட் மட்டுமே பழகியிருந்த எனக்கு நூறு, ஆயிரங்கள் முதல்முறையாக பரிச்சயம் ஆனது. பின்னர் ஐ.பி.எல் சீசன்களில் அடிக்கடி போட்டோ கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தேன். மெயில்களில் போட்டோ கமெண்ட்ஸ் சுற்றி வருவது குறித்து பழக்கப்பட்ட நண்பர்கள் கூறும்பொழுதெல்லாம் உற்சாகமாக இருக்கும். இப்பொழுதும் கூட சில சமயம் பேஸ்புக்கில் ஏதோ ஒரு சங்கத்தில் நூற்றுக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் வலைமனை போட்டோ கமெண்ட்டை பார்க்கும் பொழுது எனக்கே செம காமெடியாக இருக்கிறது. 

ம் ம்.. இதான் சிம்பிளான கொசுவர்த்தி பிளாஷ்பேக்.. இப்போ கடந்த வருடங்களில் நான் பதிவிட்ட ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்களில் சிலவற்றை கொசுவர்த்தி சுற்றி காட்டப்போகிறேன். விரைவில் நடப்பு ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸையும் எதிர்பார்க்கலாம். இணைய நண்பர்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் என்றென்றும் எனது நன்றிகள்.































































































91 club