எப்பொழுதும் எல்லோருக்கும் ஓயாமல் உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திலோ, சில வருடங்களிலோ, அடுத்த வாரத்திலோ அல்லது நாளையோ நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை, உங்களது வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் குரல் அது.
இதை இன்னர் மோனோலாக் (Inner Monologue) என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக நினைவு மனத்திற்கு அதிக வேலையில்லாத வேளைகளில் இந்த உள் மன குரல் ஒலிக்கத்துவங்கும்.
சாப்பிட அள்ளும் முதல் கவளம் உணவினை நினைவு மனதுடன் உணர்ந்து ருசித்து சாப்பிடுவோம். அடுத்தடுத்த கவளங்களில் அனேகமாய் ருசியில் கவனம் செல்லாது. அது நாம் ருசிக்கும் ஒரு புதிய வகை உணவாக இருந்தாலொழிய. ஒரு ரோபோட் போல் சாப்பிட்டுக்கொண்டே வேறு எதையோ சிந்தித்துக்கொண்டிருப்போம்.
பழகிய வழிகளில் வாகனங்களை ஓட்டும்போது, பழகிய வேலைகளை தன்னிச்சையாக செய்யும்பொழுது என்பன போன்ற நினைவு மனதிற்கு வேலையில்லாத இத்தகைய ரோபோட் தருணங்களில்தான் இந்த உள் மன குரல் ஓட ஆரம்பிக்கும்.
அது என்ன சொல்கிறது என கொஞ்சம் கவனிக்க துவங்குங்கள். ஒரே ஒரு வாரம். தீவிரமாக கண்காணித்து குறித்துக்கொண்டோமானால் நாம் இவையெல்லாம் சிந்திக்கிறோமா என்கிற ரீதியில் ஆச்சரியமான முடிவுகள் வெளிப்படும்.
"வேறு நல்ல வேலையே கிடைக்க மாட்டேங்குதே.. தேடாத இடமில்லை.. இப்படிதான் போகும் போல வாழ்க்கை" "அடுத்த மாசம் பெரிய செலவு இருக்கே எப்படி சமாளிக்கிறது தெரியலையே" "வர வர நம்மகிட்ட அவர் பேசறதே இல்லையே.. பிரிஞ்சுடுவோமோ.." "ஏற்கனவே நாப்பது வயசாச்சு.. இனியும் லைஃப்ல எப்பதான் செட்டில் ஆகறது தெரியலையே" போன்றவை சில சாம்பிள்கள்தான். இவைகளில் ஏதேனுமோ.. அல்லது இதைவிட எதிர்மறையான சிந்தனைகளோ உங்கள் மனதில் ஓடக்கூடும்.
நினைவில் கொள்ளுங்கள். உங்களது முழுமுதற் எதிரி இந்த எதிர்மறையான உள் மன குரல்தான். பல்வேறு ஆராய்ச்சிகளின்படியும், பல அறிஞர்கள், சாதனையாளர்களின் அனுபவப்படியும் ஆழ்மனதின் வியக்க வைக்கும் அற்புத சக்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
அதன்படி உங்கள் நினைவு மனதில் எதை தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் அப்படியே கிரகித்து உங்கள் வாழ்க்கையில் உங்கள் கண்ணெதிரே நிஜ உலகில் நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது.
சரி இனியும் ஒன்றும் தாமதம் ஆகிவிடவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் அருந்திக்கொண்டிருக்கும் விஷம் போன்ற இந்த எதிர்மறை உள் மன குரலுக்கு மாற்று மருந்து கொடுக்க வேண்டும். கொடுத்து விடலாம் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று.
நீங்கள் என்ன வகையான விஷம் குடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என தெரிந்தால்தான் அதற்குண்டான மாற்று மருந்தினை அருந்த முடியும். ஆகவே இந்த இணைப்பில் இருக்கும் சாம்பிள் எண்ணங்களில் எதுவெல்லாம் ஏற்கனவே உங்கள் உள் மன குரலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என குறித்துக் கொள்ளுங்கள். இது வெறும் சாம்பிள்தான். ஆனால் இதையொத்த இதை விட வேறுபட்ட பல எதிர்மறை குரல்கள் உங்களுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
அடுத்த வாரம் ஜீபூம்பா வெளிவரும் வரை ஒரு நோட் போட்டு தனியாக உங்களது மேலும் பல உள் மன குரல்களை அடையாளம் கண்டு குறித்து வையுங்கள். மறந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளுக்குள் ஒலிப்பவைகளை கண்டுபிடிக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்கள் எதிரிகளை நீங்கள் ஒழித்து விட முடியும். எளிதாக ஜெயித்துவிட முடியும்.
விரைவில் சந்திப்போம்.