Friday, October 11, 2013

கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு




ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள்,  கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி...  இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.

ஸ்பாய்லர் :  ......................................................
முதன்முறையாக  தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது. 

இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................

நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன்.  90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.

3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம்.  பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா,  புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.

தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.

2 comments:

பினாத்தல் சுரேஷ் said...

எங்கள் ஊரில் அடுத்த வாரம்தான் ரிலீஸ். அப்டேட்டியதற்கு நன்றி ஹை.

Anonymous said...

Sunday 9.50 AM Show @ Escape.

91 club