Wednesday, July 2, 2014
வலைமனை | ஃபீலிங்ஸ் 02 07 14
வருடா வருடம் ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என தெரியாமலே செய்யும் காரியத்தை இவ்வருடமும் செய்துவிட்டேன். ஆம் வலைமனை டாட் இன் டொமைன் ரென்யூவல்தான். இப்பொழுதெல்லாம் பேனா வாங்கி முழுக்க எழுதுகிறோமோ இல்லையோ வேலை செய்கிறதா என முதலில் பெயரை எழுதி பார்ப்போம் அல்லவா.. அதைப் போல இந்த போஸ்ட்டை எடுத்துக்கொள்ளவும்.
***
குவாலிட்டியான மியூசிக், கிரியேட்டிவ்வான லிரிக்ஸ் என முதல் பாடலிலேயே அசத்தி விட்டார் கேபிள் சங்கர். இந்த பாடல் குறித்து ஜில்மோர் டாட் காமில் வெளிவந்த எனது கருத்து:
"நம்மை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் இருக்கும் நியாயமான கருத்துக்களை எடுத்துக்கொள்ளும் முன் முதலில் நாம் தாக்கப்படுகிறோம் என்கிற கோப உணர்ச்சி மேலெழுந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நம் தரப்பு நியாயங்களை ஆராய்வதே பொதுவான மனித இயல்பு. ஆனால் சம்பந்தப்பட்டவர் மனம் நோகாமல் அவரே புரிந்து கொள்ளும்படி விமர்சனங்களை முன்வைக்கும் வழிமுறைகள் பல உண்டு என விளக்குகிறது பிரசித்தி பெற்ற மனவளக்கலை பயிற்சியாளர் Dale Carnegie எழுதிய ‘How to win friends and influence people’ என்கிற புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் வாழும் பிரதியாகவே விளங்குகிறவர் நமது கேபிள் சங்கர். தேர்ந்த விமர்சகராகவும், நேற்று அறிமுகமானவரும் நெருங்கிய நண்பராகிவிடும் வகையிலும் இந்த கலை கைவரப் பெற்றவர். தனது முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் முதல் பாடலிலேயே பிராக்டிக்கலாக நம் மீதே இதை செய்தும் காட்டிவிட்டார். நமது மனநிலையை, நம் மீதான விமர்சனங்களை தரமான இசையில், பொருத்தமான வரிகளில் நாமே ‘லைக்’ போடும் வகையில் நமக்கு உணர்த்தி வெற்றி பெறுகிறது இந்தப் பாடல். பொதுமக்கள் மீதான விமர்சனங்களை தாங்கி வந்த தமிழ்த் திரைப்பாடல்கள் கசந்ததே வரலாறு. ஆனால் மீண்டும் மீண்டும் சுவைக்க விரும்பும் ‘இனிப்பு மருந்து’ ஜானரில் புதுவரவாக அசத்துகிறது ‘பாஸு பாஸு’!"
தொடர்புடைய சுட்டி :
தொட்டால் தொடரும் ‘பாஸு பாஸு’ பாடல் – மாஸ் ரியாக்சன்
http://tamil.jillmore.com/thottal-thodarum-bossu-bossu-song/
***
"சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டுறான்யா..." என்பது புகழ்பெற்ற புதுமொழி. சவலான விஷயத்தை செய்வதில் கெட்டிக்காரன் என அர்த்தம் தரும் இந்த வாக்கியத்தின்படி சமீபத்தில் ஒரு இணையதளம் துவங்கியிருக்கிறார்கள். cyclegap.in என்கிற இந்த இணையதளத்தில் பி.டி.எப், E-Pub, Kindle என அனைத்து மின் வகை தமிழ் புத்தகங்களும் தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது. மின் புத்தக உலகின் சவால்களை சந்தித்து சாதிப்பதே நோக்கம் என இவர்களது FAQ பக்கத்தில் பெயருக்கு பொருத்தமான கொள்கை விளக்கமும் தரப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!
http://cyclegap.in/
***
தியானம், யோகாவை காட்டிலும் ஒரு அரை மணி நேரம் பொதிகை சேனல் பார்த்தால் போதும் போல. பரபரப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அனைத்தையும் சட்டென்று குறைத்து பட்டென்று படுத்து தூங்க வைத்துவிடுகிறது.
வாழ்க தூர்தர்ஷன்! வளர்க அப்டேட்டே இல்லாத நின் வெர்ஷன்!
***
சக கலைஞரை ஒருவர் தாக்கி பேசும்பொழுது அதனை கண்டிக்காமல் அதே துறையில் இயங்குபவர்கள் மௌனம் காப்பது மிகுந்த வலி தருகிறது. "வெறும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்கும் நாராயணசாமி ஆக விரும்பவில்லை" என பொன்னார் கூறி பல நாட்களாகியும் இதுவரை சந்தானம், பரோட்டா சூரி, ரோபோ சங்கர் என யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. '15 நாட்களில்..' கலக்கல் காமெடி சீரிஸில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாசாவிற்கே இந்த நிலைமை என நினைக்கும்பொழுது.... சத்திய சோதனை!
***
டவர் பார்க்கில் காற்றுடன் கலந்து பறக்கும் ஸ்கேட்டிங் செல்லும் சின்ன குழந்தைகளை அமர்ந்து பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் அமர்ந்திருந்தபோது அருகே அனைவரும் வாக்கிங் செல்லும் நட்ட நடு நடைபாதையில் மூன்று பெண்கள் கால் மணி நேரமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி கஷ்டப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். இவர்களைப் பற்றிய கவனமே இல்லாமல் இங்கிதம் அற்ற பொது ஜனம் குறுக்கே புகுந்து வாக்கிங் சென்றவாறே இருந்ததால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். பேஸ்புக்கிற்காய் புகைப்படம் எடுப்பவர்களது உணர்வை மதிக்காத சமுதாயம் வாக்கிங் போனால் மட்டும் ஆரோக்கியமானதாகி விடுமா என்ன? அட போங்கப்பா!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தூர்தர்ஷனால் இப்படி ஒரு பயன்பாடு இருக்கிறதா
Post a Comment