Wednesday, July 30, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 30 07 14

விழாவை சிறப்பிக்க வந்தவங்களுக்கெல்லாம் போகும்போது தேங்காய் பை கொடுத்தா அது கல்யாணம். விருது கொடுத்தா அது விஜய் அவார்ட்ஸ் என்பது போல் ஆகிவிட்டது. உதாரணமாக ஷாருக் வந்ததற்காக வழங்கப்பட்டது போல் இருந்த என்டெர்டெயினர் அவர்ட். அவர் பேசும்பொழுதும் இதை லைட்டாக குறிப்பிட்டார். 

ரா.ஒன்னில் ரஜினி. சென்னை எக்ஸ்பிரஸ் படம். வருடா வருடம் விஜய் அவர்ட்ஸ் என சமீப காலமாக வடக்குத்தளபதி ஷாருக்கின் தமிழ்மண் மீதான பாசம் என்னைப் போன்ற இளகிய மனம் கொண்ட ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது. "இங்க வர்ற உணர்வே நல்லா இருக்கு. நீங்க நான் வர்றதுக்காக விருது கூட தர வேணாம். பெரிய கலைஞர்கள் எல்லாம் இருக்கிற இந்த காற்றை சுவாசிச்சாலே போதும்" என்று அவர் சொன்னபொழுது 'அரசியலுக்கு வா தலைவா' என என்னையும் அறியாமல் உரக்க கத்திவிட்டேன். ஆனால் டிவிக்குள் இருந்ததினால் அது அவருக்கு கேட்கவில்லை. யாராவது ஹிந்தி தெரிந்தவர்கள் மக்கள் உணர்வை சொல்லி அவரை அழைத்து வந்தீர்களானால் 2016ல் கேப்டன், அடுத்த சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் செம டஃப் கொடுக்கலாம்.

•••
நேற்று முன்தினம் வில்லிவாக்கம் ரயில்வே கிராஸிங் தாண்டி ஒரு சின்னப் பையன் லிப்ட்டிற்கு கை காட்டினான். 'என் படங்கள் இங்கே இருந்து எடுக்கப்படுகின்றன' என ஆந்திராவை நோக்கி மக்கள் இயக்க கொடியில் விஜய் கை காட்டுவாரே.. அதே படம் பொறிக்கப்பட்ட கர்சீப் கையில். 
திங்கட்கிழமை காலை அதுவுமா நல்ல தீனிதான் என நினைத்து ஏற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தேன்.
"என்னய்யா.. விஜய் ஃபேனா...?"
"ஆமாண்ணா.." என பிரகாசமாகி விஜய்யின் வீர தீர பராக்கிரமங்களை மூச்சு விடாமல் எஸ்.பி.பி போல பாட்டாவே பாடிக்கொண்டு வந்தான். ஐ.சி.எப் சிக்னலுக்கு முன்னர் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டு "தேங்கஸ்ண்ணா" என்றவனிடம்  நான், 
"ஆமா.. உங்களுக்குதான் இளைய தளபதின்னு பட்டம் இருக்குல்ல. ரஜினியோட சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏன்யா எடுத்துக்கிட்டீங்க" என்றேன். 
"அவர்தானண்ணா  பர்ஸ்ட்டு இளைய தளபதியா நடிச்சாரு!" என்று ஒரு குண்டை போட்டான்.
"என்னய்யா சொல்ற.. இது எப்போ நடந்துச்சு" என்றேன் அதிர்ச்சியாய்.
"ஆமாண்ணா.. கோச்சடையான் பாத்தீங்களா.. அதுல இளமையா தளபதியா நடிச்சாருல்ல... அதுக்கு நாங்க ஏதாச்சும் கேட்டோமா??" என்றான் சீரியஸாய். 

இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விஜய் அண்ணாவை யாரும் அடிச்சிக்க முடியாது என நினைத்துக் கொண்டே "நீயெல்லாம் நல்லா வருவய்யா.. நல்லா வருவ.." என சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினேன்.

Wednesday, July 23, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 07 14

வழக்கமாக #சி.எஸ்.கேடா #இந்தியாடா #தோனிடா என்று டேக் போட்ட எங்களை #இஷாந்த்டானு எல்லாம் டேக் போட வச்சிட்டீங்களேடா இங்கிலாந்து பாய்ஸ். இதுக்கும் மேலயா நீங்க கிரிக்கெட் விளையாடனும்? போங்கடா... போய் புள்ள குட்டிங்களை கிரிக்கெட் கோச்சிங்ல சேருங்க.

•••


இது தலைநகர் தில்லியின் லேட்டஸ்ட் புகைப்படம் (!). இப்பொழுதெல்லாம் மழை தண்ணீர் நிற்பதில்லையாம். கொசு கடிப்பது கூட இல்லையாம். மக்கள் அனைவரும் 'முவாங் சுவாங்' என சைனா பாஷையிலே ஜோக் அடித்து சிரித்து இன்புற்ற நிலையில் இருக்கிறார்களாம்.

"துபாய் எங்க இருக்குன்னு கேட்டா ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும்பேன்"கிற மாதிரி தேர்தல் நேரத்தில் சீன எழுத்துக்களை போட்டோஷாப்பில் சரியாய் கூட அழிக்காமல் சீனத்து பஸ் ஸ்டான்ட் போட்டோவை போட்டு,  'மோடியின் குஜராத்தை பாரீர்' என மார்க்கெட்டிங் பண்ண நல்லவங்களுக்காக இந்த பதிவை டெடிகேட் பண்றோம்.

# ஆப் கி பார்.. கொசு கடிக்குது சார்! போட்டோஷாப்லயே கொசுவை எப்படி கொல்றதுன்னும் சொல்லிக்குடுத்தீங்கன்னா...

•••

சூளைமேடு மெயின்ரோடை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் வடகிழக்கு மாணவ மாணவிகளை பார்க்கலாம். சுரீரென மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலையே 'போடா வெண்ணெய்' என சொல்வது போல் இவர்களது நிறம் மட்டும் எத்தனை வருடம் இங்கிருந்தாலும் மாறுவதே இல்லை. படிக்க வரும்பொழுதே ரிசர்வேஷனில்தான் வருவார்கள். அதனால் இவர்களை ஜோடியாகத்தான் பார்க்க முடியும். 

அன்றொருநாள் நெல்சன் மாணிக்கம் சாலையில் பைக்கை ஓரங்கட்டி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அதிசயமாக தனியாக ஒரு வடகிழக்கு பெண்ணை பார்த்தேன். என்னை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார். 

"ஆஹா... இவங்க பாஷை நமக்கு புரியாதே.. அவசரத்திற்கு நமக்கு வாயில இங்கிலீஷ் வேற வராதே.. லிப்ட், கிப்ட் கேட்டா பைக்குல பெட்ரோல் வேற இல்லையே" என மனதில் பல குழப்பங்களுடன் அந்த பெண்ணை எதிர்நோக்க, அவரோ "அண்ணா ... வேர் இஸ் ஸ்கைவாக்..?" என சிம்பிளாக கேட்டார். 'அண்ணா'வில் 'ண'கர உச்சரிப்பு கூட அவ்வளவு சுத்தமாக இருந்தது.

அன்றுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்கு வந்த உடன் முதல் வேலையாக உள்ளூர் பாஷையில் 'அண்ணா' என்கிற வார்த்தையை வடகிழக்கு பெண்களும் கற்று வைத்துக்கொள்கிறார்கள் என்று.


Wednesday, July 16, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 16 07 14


ஒருவழியாக கால்பந்தாட்ட திருவிழா முடிந்துவிட்டது. கிரிக்கெட் மேட்ச் பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு இடையிடையே கமர்ஷியல்ஸ், கீழே பேனர் ஆட்ஸ், பிட்ச்சில் லோகோ என எதுவும் இல்லாமல் பார்க்க லோக்கல் மேட்ச் போல இருந்தது. நமது BCCI இடம் FIFA அமைப்பை இரண்டு மாதம் பாடம் படிக்க சொல்ல வேண்டும். ஐடியா இல்லாத பசங்க!

•••

வழக்கமாக வாக்கிங் போகும் பார்க்கில் சென்ற வாரம் நெத்திலி மீன்கள் சைஸில் ஒரு காதல் ஜோடி. பெண் முன்னே செல்ல பத்தடி தள்ளி பையன் சென்றவாறே பேச... அவர்களை பார்ப்பவர்கள் இருவருக்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கும் வகையில் யாருக்கும் தெரியாமல் லவ் பண்றாங்களாமாம். கொண்டையை மறைக்காத 'பாடி ஸ்டுடா' போல் நாமும் இதேபோல் எவ்வளவு கேனைத்தனமாகவெல்லாம் இருந்திருக்கிறோம் என்று ஹிஸ்டரியை நினைத்து செம சிரிப்பாய் சிரித்துக்கொண்டே வாக்கினேன்.

•••

தமிழில் ஒரு குறிப்பிடும்படியான ஆவணத்தொடர் துவங்கியிருக்கிறது. 'யாதும் ஊரே' என பெயரிடப்பட்டுள்ள இதன் முதல் அத்தியாயம் லண்டனில் உள்ள மியூசியத்தை சுற்றி நகர்கிறது.

தெளிவான, மிதமான, கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு ஆவணப்படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்படும் பொருளுக்கு உரிய பாரம்பரியத்திற்கு இணையான பிரம்மாண்டத்தை கேமரா கோணங்களில் வெளிப்படுத்தும் விதமும், எடிட்டிங், இசை என யாவும் தொழில்நுட்பத்தில் சிறந்த தரத்தில் அமைந்திருக்கிறது. நந்தினி கார்க்கியின் சிறப்பான ஆங்கில சப் டைட்டில்ஸ் பிளஸ் பாயிண்ட்.


வழங்குபவரின் அமைதியான, அதே நேரம் உறுதியான பாவனை, நாம் பழகியறிந்த நண்பரை போன்ற தோரணை இவைகளினால் அவர் சொல்வதை மனம் கவனிக்கவும் கற்கவும் எளிதாக இருக்கிறது. முதல் முறையாக இந்த ஆவணப்படத்தின் மூலம் நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்.

படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகத்தின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து ஒலிஒளி வடிவத்தில் சுவாரஸ்யமாக வழங்கியதை போன்ற அனுபவம். பொருள், காலம், உழைப்பு என பல்வேறு வடிவங்களில் இந்த உன்னதமான கற்பிக்கும் முயற்சியை முன்னெடுத்திற்கும் தவ சஜீதரன் மற்றும் அவரது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

•••

புது நம்பர் வாங்கி சிம்மை போட்டு செல் ஆன் பண்ணா.. நெட்வொர்க்ல வெல்கம் மெசேஜ் வர்றதுக்குள்ள அரக்கோணத்துல அரை கிரவுண்டு வாங்குங்கன்னு மெசேஜ் வருது.. ரியல் எஸ்டேட்காரங்களா.. ஆனாலும் தீயா வேலை செய்யுறீங்கப்பா...!

•••

நிஜமாகவே மாயக்கண்ணாடிகள் சலூனில்தான் இருக்கின்றன. 'பரவாயில்லை.. இப்போ கொஞ்சம் பாலிஷ்தான் ஆயிட்டோம்' என்று சலூன் கண்ணாடியில முகத்தை ரசித்து மேடி மாதிரி ஸ்மைல் எல்லாம் பண்ணிட்டு வந்து வீட்டு கண்ணாடியில பார்த்தால்... வழக்கமான அதே குரங்கு பொம்மைதான் தெரிகிறது.


•••


"ஏம்ப்பா  பார்லிமென்ட்ல தூங்குற.. எழுந்திருப்பா.."

         "ஆர்.டி.ஐ.. உமன் எம்பவர்மென்ட்.."
"உன்னை எழுப்புனது தப்புதான்.. தயவு செஞ்சு தூங்கு ராசா..."

Wednesday, July 9, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 09 07 14

வழக்கமாக வீரர்கள் விளையாடி முடித்ததும் யாரோ அவர்களது உடைகளை  துவைத்து காய வைப்பார்கள். ஆனால் நேற்று நடந்த அரையிறுதியில் ஜெர்மனி அணியினர் செய்தது வித்தியாசமானது. பிரேசில் வீரர்களது உடைகளை  ஜெர்மனி வீரர்களே துவைத்து தொங்க விட்டார்கள். துவைக்கும் போது பிரேசில் வீரர்கள் உடையின்  உள்ளே இருந்தார்கள் என்பதுதான் பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு வருத்தமாம்!

# தட் நானும் மேட்ச் பார்க்கிறேன் என்னையும் ஜீப்ல ஏத்திக்கோங்க மொமன்ட்

***


முதன்முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாய்ப்பு. விடக்கூடாது அல்லவா..? கடந்த வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற நம்ம கேபிள்ஜியின் 'தொட்டால் தொடரும்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பதிவர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது. இரண்டு டிரைலர்கள், இரண்டு பாடல்கள் திரையிடப்பட்ட பிறகு பிரபலங்கள் பேசி முடித்த பின் இசை வெளியிடப்பட்டது. ஏற்கனவே பாஸு பாஸு சிங்கிள் டிராக் மூலம் அசத்தி இருந்தனர். இப்போது டிரைலரை பார்த்த பின்னர் வெற்றிப் படமாக அமையும் என தெரிந்து விட்டது. பாடல்களை பொருத்தவரை வெகு சிறப்பாக வந்திருக்கிறது. 'யாருடா மச்சான் அவ யாருடா' பாடலை மீண்டும் மீண்டும் லூப்பில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அடுத்து 'பெண்ணே பெண்ணே' நல்லதொரு மெலடியாக அமைந்திருக்கிறது. 'ஹே.. எனக்கென இந்த பூமியில் வந்தவனே' என மெஸ்மரைசிங் குரலில் துவங்கும் 'பூப்போல பூப்போல' பாடலும் 'ஜாதகத்தில் யோகம் வந்தது' பாடலும் பீல் குட் உணர்வினை தரும் ரகம். பாடல்களை கேட்கும் போதே படத்தை திரையில் காணும் ஆவல் எழுகிறது. கேபிள் சங்கர் கலக்கப்போகிறார்! வாழ்த்துக்கள்!

***

முதன்முறையாக ஒரு ஆங்கில இசை நாடகம் பார்த்தேன். 'விக்டர் ஹியுகோ' எழுதிய 'லே மிஸரபில்ஸ்' என்கிற புகழ்பெற்ற புத்தகத்தினை தழுவி லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் சென்னையைச் சார்ந்த நடிகர்கள், இசைக் கலைஞர்களை வைத்து  உலகத்தரத்தில் ஒரு பிரமிப்பான அனுபவத்தை தந்திருந்தார்கள் 'தி குக்கூ கம்பெனி'!இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் சென்னையின் சிறப்பான ஆடிட்டோரியங்களில்  ஒன்றான ஹாரிங்டன் சாலையில் உள்ள சார் முத்தா வெங்கட்ட சுப்பராவ்  கான்சர்ட் ஹாலில் நடைபெற்றது. ஒலியமைப்பும் ஒளியமைப்பும் மிகத் தரமானதாக இருந்தது. லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் பாடிக் கொண்டே நடித்த நடிகர்கள் அசத்தி விட்டார்கள். அருமையான அனுபவம்!


இதில் இடம்பெற்ற லுக் டவுன், மாஸ்டர் ஆப் தி ஹவுஸ், லவ்லி லேடிஸ் டிராக்குகளை தேடிப் பிடித்து கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மனதில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கிறது.


***


சமீபத்தில் முன்னேர் பதிப்பகத்திற்காக நான் சில புத்தக அட்டைகள் வடிவமைத்திருந்தேன். கடந்த வாரம் அவைகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்கள். இதுபோல புத்தம் புது புத்தங்களை இலவசமாக மணமணக்க அனுப்பி வைப்பதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் டிசைன் செய்யலாம்.


முன்னேர் பதிப்பக முகப்புத்தக பக்கம் : https://www.facebook.com/munnerpathippagam?fref=ts

***

கோச்சடையான் நான்காவது முறையாக சனிக்கிழமை சென்றிருந்தேன். தலைவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையை இன்னுமொரு முறை சுவைத்துவிடலாம் என்று. 


படம் ஆரம்பித்ததும் பக்கத்தில் இருந்தவர் 3டி கண்ணாடியை அகற்றி அகற்றி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வினோதமாக அவரையே பார்க்க.., "கண்ணாடி எடுத்தா எப்படி தெரியுதுன்னு செக் பண்றேன்" என்றார். "நல்லா பண்ணுங்க.. படத்துலயே மொத்தம் பத்து நிமிஷம்தான்  3டி.. அதையும் இப்படியே பண்ணிடுங்க.." என நினைத்துக் கொண்டேன்.


ஒரு  2டி படத்தை 3டி கண்ணாடி மாட்டி பார்க்க வைக்கும் தொழில்நுட்பம் உலகத்திலேயே இதுதான் முதன்முறை.

Wednesday, July 2, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 02 07 14வருடா வருடம் ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என தெரியாமலே செய்யும் காரியத்தை இவ்வருடமும் செய்துவிட்டேன். ஆம் வலைமனை டாட் இன் டொமைன் ரென்யூவல்தான். இப்பொழுதெல்லாம் பேனா வாங்கி முழுக்க எழுதுகிறோமோ இல்லையோ வேலை செய்கிறதா என முதலில் பெயரை எழுதி பார்ப்போம் அல்லவா.. அதைப் போல இந்த போஸ்ட்டை எடுத்துக்கொள்ளவும். 

***
குவாலிட்டியான மியூசிக், கிரியேட்டிவ்வான லிரிக்ஸ் என முதல் பாடலிலேயே அசத்தி விட்டார் கேபிள் சங்கர். இந்த பாடல் குறித்து ஜில்மோர் டாட் காமில் வெளிவந்த எனது கருத்து:

"நம்மை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் இருக்கும் நியாயமான கருத்துக்களை எடுத்துக்கொள்ளும் முன் முதலில் நாம் தாக்கப்படுகிறோம் என்கிற கோப உணர்ச்சி மேலெழுந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நம் தரப்பு நியாயங்களை ஆராய்வதே பொதுவான மனித இயல்பு. ஆனால் சம்பந்தப்பட்டவர் மனம் நோகாமல் அவரே புரிந்து கொள்ளும்படி விமர்சனங்களை முன்வைக்கும் வழிமுறைகள் பல உண்டு என விளக்குகிறது பிரசித்தி பெற்ற மனவளக்கலை பயிற்சியாளர் Dale Carnegie எழுதிய ‘How to win friends and influence people’ என்கிற புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் வாழும் பிரதியாகவே விளங்குகிறவர் நமது கேபிள் சங்கர். தேர்ந்த விமர்சகராகவும், நேற்று அறிமுகமானவரும் நெருங்கிய நண்பராகிவிடும் வகையிலும் இந்த கலை கைவரப் பெற்றவர். தனது முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் முதல் பாடலிலேயே பிராக்டிக்கலாக நம் மீதே இதை செய்தும் காட்டிவிட்டார். நமது மனநிலையை, நம் மீதான விமர்சனங்களை தரமான இசையில், பொருத்தமான வரிகளில் நாமே ‘லைக்’ போடும் வகையில் நமக்கு உணர்த்தி வெற்றி பெறுகிறது இந்தப் பாடல். பொதுமக்கள் மீதான விமர்சனங்களை தாங்கி வந்த தமிழ்த் திரைப்பாடல்கள் கசந்ததே வரலாறு. ஆனால் மீண்டும் மீண்டும் சுவைக்க விரும்பும் ‘இனிப்பு மருந்து’ ஜானரில் புதுவரவாக அசத்துகிறது  ‘பாஸு பாஸு’!"

தொடர்புடைய சுட்டி :
தொட்டால் தொடரும் ‘பாஸு பாஸு’ பாடல் – மாஸ் ரியாக்சன்
http://tamil.jillmore.com/thottal-thodarum-bossu-bossu-song/

***
"சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டுறான்யா..." என்பது புகழ்பெற்ற புதுமொழி. சவலான விஷயத்தை செய்வதில் கெட்டிக்காரன் என அர்த்தம் தரும் இந்த வாக்கியத்தின்படி சமீபத்தில் ஒரு இணையதளம் துவங்கியிருக்கிறார்கள். cyclegap.in என்கிற இந்த இணையதளத்தில் பி.டி.எப், E-Pub, Kindle என அனைத்து மின் வகை தமிழ் புத்தகங்களும் தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.  மின் புத்தக உலகின் சவால்களை சந்தித்து சாதிப்பதே நோக்கம் என இவர்களது FAQ பக்கத்தில் பெயருக்கு பொருத்தமான கொள்கை விளக்கமும் தரப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!

http://cyclegap.in/

***
தியானம், யோகாவை காட்டிலும் ஒரு அரை மணி நேரம் பொதிகை சேனல் பார்த்தால் போதும் போல. பரபரப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அனைத்தையும் சட்டென்று குறைத்து பட்டென்று படுத்து தூங்க வைத்துவிடுகிறது. 
வாழ்க தூர்தர்ஷன்! வளர்க அப்டேட்டே இல்லாத நின் வெர்ஷன்!

***

சக கலைஞரை ஒருவர் தாக்கி பேசும்பொழுது அதனை கண்டிக்காமல் அதே துறையில் இயங்குபவர்கள் மௌனம் காப்பது மிகுந்த வலி தருகிறது. "வெறும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்கும் நாராயணசாமி ஆக விரும்பவில்லை" என பொன்னார் கூறி பல நாட்களாகியும் இதுவரை சந்தானம், பரோட்டா சூரி, ரோபோ சங்கர் என யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. '15 நாட்களில்..' கலக்கல் காமெடி சீரிஸில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாசாவிற்கே இந்த நிலைமை என நினைக்கும்பொழுது.... சத்திய சோதனை!

***
டவர் பார்க்கில் காற்றுடன் கலந்து பறக்கும் ஸ்கேட்டிங் செல்லும் சின்ன குழந்தைகளை அமர்ந்து பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் அமர்ந்திருந்தபோது அருகே அனைவரும் வாக்கிங் செல்லும் நட்ட நடு நடைபாதையில் மூன்று பெண்கள் கால் மணி நேரமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி கஷ்டப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். இவர்களைப் பற்றிய கவனமே இல்லாமல் இங்கிதம் அற்ற பொது ஜனம் குறுக்கே புகுந்து வாக்கிங் சென்றவாறே இருந்ததால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். பேஸ்புக்கிற்காய் புகைப்படம் எடுப்பவர்களது உணர்வை மதிக்காத சமுதாயம் வாக்கிங் போனால் மட்டும் ஆரோக்கியமானதாகி விடுமா என்ன? அட போங்கப்பா!