Wednesday, October 8, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 08 10 14இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித்தொடர் வரும் 12ம் தேதி துவங்க இருக்கிறது. சென்னையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் துவங்கிவிட்டன. 100 ரூபாயிலிருந்து டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஹிட் ஆகிவிட்டால் ஐபில் போல விலை ஏற்றிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

'தயவு செஞ்சு லோகோவை மாத்துங்க' என சென்னை அணியின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் கமெண்ட் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. வழக்கமான சிங்கம், புலி, கரடி என யோசிக்காமல் கிரியேட்டிவ்வான ஐடியா. அவரவர் அணி லோகோ வீட்டில் இருக்கிறதோ இல்லையோ, நமது அணி சின்னமான திருஷ்டி பொம்மை நாட்டில் பலரது வீடுகளில் ஏற்கனவே இருக்கிறது :)

அபிஷேக் பச்சனுடன் தல தோனியும் தற்பொழுது இந்த அணியின் கோ ஓனர் ஆகி இருக்கிறார். எனது கவலை எல்லாம், மேட்ச் ஜெயிப்பது போல் இருந்தால், நான்தான் முடித்து வைப்பேன் என வழக்கம்போல் தோனி கிரவுண்டில் இறங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்!

***

கடந்த வாரம் Times Now சேனலில் மோடியின் மேடிஸன் ஸ்கொயர் அமெரிக்க நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்தேன். ஷங்கர் படத்திற்கு இணையான மேக்கிங்கில் இருந்தது.

தேசிய கீதத்தின் போது மோடியின் முகம் மீது ஒரு லேயரில் தேசிய கொடி பறக்கிறது.  30 வருடங்களுக்கு முன்னரே ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதி வைத்த கட்டுரைகளை ஒத்த கருத்துக்களை ஹிந்தியில் பிரதமர் பேச அமெரிக்க இந்திய கொடிகளுடன் மோடியின் உருவம் பொறித்த பதாகைகளை அசைத்தபடி 'மோடி மோடி' என அரங்கமே அதிர்கிறது. இது போதாதென்று எந்த பிரதமருக்கும் இல்லாத பிரம்மாண்ட வரவேற்பு என மோடி பராக்கிரமங்களை கீழே ஸ்க்ரோலிங்கில் ஓட விட்டுக் கொண்டிருந்தது சேனல்.

இதையெல்லாம் உடன் பார்த்துக் கொண்டிருந்த நண்பன், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி 'மோடிஜிதான்டா அடுத்த பிரதமர்.. அவருக்குதான் ஓட்டு போடுவேன்.. மன்மோகன் சிங்கை வீட்டுக்கு அனுப்பனும்' என்கிறான். ஃபன்னி ஃபெல்லோ..!

# தட் 'தேர்தல் முடிஞ்சிடுச்சில்ல.. பிரசாரத்தை எப்போ சார் முடிப்பீங்க...?' மொமண்ட்!

***


ஏதாச்சும் டீஸரோ, போஸ்டரோ வந்தா அது எதுல இருந்து காப்பின்னு கண்டுபிடிச்சு சொல்லலைன்னா நம்மளை இணையவாசியா ஒத்துக்க மாட்டாங்க. அதனால் என் பங்குக்கு இதை கண்டுபிடிச்சிருக்கேன். பைப்புக்குள்ள இறங்கி பல பேரை அடிச்சு நொறுக்கி பல தடைகள் கடந்து இளவரசியை காப்பாத்துற மேரியோவின் லைப் ஹிஸ்டரிதான் கத்தி படத்தின் கதை. எப்பூடி?

# ஐ காப்பிடா - கத்தி காப்பிடா - புரூ காப்பிடா

***

தங்கள் படங்கள் வரும்பொழுது சில ஹீரோக்கள் சி.டி. பஜார்களில் அதிரடி ரெய்டு நடத்தி "ஏன்டா இப்படி ஏமாத்தி பிழைக்கிறீங்க?" என கம்பீரமாய் கேட்கிறார்கள். ஆனால் பாருங்கள் 30 ரூபாய் பாப்கார்னை 150 ரூபாய்க்கு கேள்வி எதுவும் கேட்காமல் வாங்கி செல்கிறான் ரசிகன்.

# பஜார்ல பண்ணா ரத்தம்; மல்டிபிளக்ஸ்ல பண்ணா தக்காளி சட்னி

No comments: