Saturday, February 1, 2020

கிரஹாம் பெல் - நூல் அனுபவம்





பல சமயங்களில் தொலைபேசியை வைத்துக்கொண்டு சிலர் பண்ணும் சேட்டைகளை பார்க்கும்போது, போனை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில மாட்டுனா.. என நாம் சொல்வது சகஜமான விஷயம். நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் நிஜமாகவே அந்த நபர் கடந்த வாரம் என் கையில் மாட்டினார். ஒரு புத்தக கடையில்


ஹோய் ஹோய் என்றுதான் தொலைபேசிப் பேச்சைத் தொடங்க வேண்டும் என்றார் பெல். அவர் வாழ்நாள் முழுதும் அப்படித்தான் பேசினார். ஆனால் எடிசன் பயன்படுத்திய ஹெல்லோ என்ற சொல்தான் இன்றுவரை பயன்பட்டு வருகிறது.


கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்கும்பொழுதெல்லாம் எழும் உற்சாக இன்ஸ்ப்பிரேஷன் தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் கதையை படிக்கும் போதும் எழுகிறது. சற்றே அதிகமாய்.


டெலிபோனை கண்டுபிடிச்சவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என கீழ்நிலை வகுப்புகளில் ஒரு ஃபில் இன் தி பிளாங்ஸ் அளவில் மட்டுமே நாம் அறிந்திருக்கும் இவரை பற்றி அறியப்படாத பல ஆச்சரியங்களை இலந்தை சு.இராமசாமி அவர்கள் இந்த புத்தகத்தில் அறியத்தருகிறார். 



அலெக் ஹெல்ம்ஹோல்ட்ஸ் கருவியை மேலும் ஆராய்ந்தான். ஜெர்மன் புத்தகத்தைப் படித்து மனிதக் குரலை மின்சாரம் மூலம் தொலைவுக்கு அனுப்ப முடியும் என்று ஹெல்ம்ஹோட்ஸ் எழுதியிருப்பதாகத் தவறாகப் புரிந்து கொண்டான்.

தனக்கு மின்சாரத்தைப் பற்றி அதிகம் தெரியாதது ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது என்றும் தெரிந்திருந்தால் தொலைபேசியின் அடிப்படைக் கொள்கையைப் பற்றிச் சிந்தித்திருக்கவே மாட்டேன் என்றும் சொன்னான் அலெக்.


தொடர்ந்து கற்கும் திறனும், விடா முயற்சியும் மற்ற விஞ்ஞானிகளை போலவே பெல்லுக்கும் இருந்தாலும் மற்றவர்களை விட ஒரு வித்யாசமான குணமும் அவரிடம் இருந்தது. கண்டுபிடிப்புகள் குறித்த தீவிர ஆராய்ச்சியில இருக்கும்போதும் அதை அப்படியே ஒதுக்கி விட்டு காது கேளாதோருக்கு காணும் முறை பயிற்சி அளிப்பதில் முனைப்பு காட்டி அலெக் என அழைக்கப்பட்ட பெல், அதிசயிக்க வைக்கிறார்.



பெல்லுக்கு வியாபாரத்தைப் பற்றிய நுணுக்கங்கள் அதிகம் தெரியாது. என்னை வியாபாரி ஆக்காதீர்கள். தயவு செய்து என்னை என்னுடைய கண்டுபிடிப்புகளோடு உலவ விட்டு விடுங்கள் என்று பெல் சொன்னார்.

பேட்டன்ட் பிரச்சினை, வழக்குகள், வழக்கறிஞர்கள், போட்டியாளர்கள் என கிரஹாம் பெல் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு தந்திருப்பார் என்றே தோன்றுகிறது.



ரயில்வே ஸ்டேஷனுக்குக் காதலியை வழியனுப்ப வந்தார் பெல். அங்கு வந்ததும் தன் கையிலிருந்த டிக்கெட்டையும் தான் பெல்லுக்கே தெரியாமல் எடுத்து வந்திருந்த தொலைபேசிக் கருவியையும் அவர் கையில் கொடுத்து பெல்லை ஃபிலடேல்ஃபியா செல்லுமாறு கேட்டுக்கொண்டார் மேபெல்.


பெல் ஏற மறுத்தார்.

மேபெல் கண்களில் கண்ணீர்.

அதுவரை மேபெல்லின் கண்களில் கண்ணீரைப் பார்த்தறியாத பெல், வேறு வழியின்றி ஓடுகிற ரயிலில் ஏறினார்.



பெல், மேபெல்லின் மேல் காதல் கொள்வது, அந்நியன் ஸ்டைல் விக்ரம் போல் காதலியின் அம்மாவிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்புவது, திருமணம், அவரது காதல் மனைவி பெல்லுக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருப்பது என பெல்லின் பெர்சனல் வாழ்க்கையையும் சொல்லி போரடிக்காமல் செல்கிறது புத்தகம்.


28 ஜனவரி 1882ல் சென்னை, பம்பாய், கல்கத்தா, கராச்சி என்ற நான்கு இடங்களிலும் ஒரே நாளில் தொலைபேசித் தொடர்பகங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் 24 சந்தாதாரர்களுடன், 22 எர்ரபாலு செட்டித் தெரு என்னும் முகவரியில் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.


உலகப்புகழ்பெற்ற பிராண்டுகளான ஏ.டி.& டி., நேஷனல் ஜியாகிராபிக் போன்றவை கிரஹாம் பெல்லில் இருந்து துவங்குகிறதா..இதுபோன்று ஆங்காங்கே கிடைக்கும் பல நல்ல தகவல்கள் மூலம் உங்கள் ஜெனரல் நாலேட்ஜை கொஞ்சம் வளர்த்துக்கொள்ளலாம்.


மற்ற எந்த நூற்றாண்டுக்கும் இல்லாத பெருமை 19 ம் நூற்றாண்டுக்கு உண்டு. மனிதன் தோன்றிய நாள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இருந்த வாழ்க்கை முறைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவன் வாழ்க்கை முறை அமைந்த விதத்துக்கும் பெருத்த மாறுபாடு இருந்தது.



இன்று பல்லாயிரக்கணக்கான செய்திகளை ஒரே நேரத்தில் ஓர் ஆப்டிக்கல் கேபிளில் அனுப்பமுடிகிறது என்றால், அதற்கு அன்று அடித்தளம் போட்ட பெல்லுக்கு நாம் தலைவணங்க வேண்டும். ஆனால் அதனால் எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை.


தொலைத்தொடர்பில் இன்று ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிக்கு பெல் முக்கிய காரணகர்த்தா. ஒரு மனிதனின் வாழ்நாள், அவரை அடுத்து வந்து கொண்டிருக்கும் சந்ததிகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது பாருங்கள். 
ஒரு மனிதனின் உழைப்பு நம் அனைவரின் அலைச்சலையும் காலம், பொருள் விரயங்களையும் மாபெரும் அளவில் குறைத்திருக்கிறது. 
ஒரு மனிதனின் சேவை மனப்பான்மை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைமுறையையே புரட்டிப்போட்டிருக்கிறது. 


அந்த ஒரு மனிதன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் வாழ்க்கையை முறையை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. சிறப்பாக அறியத் தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


சிரி, மலர்ச்சியோடு இரு. விரைவிலேயே நீ அப்படியே இருப்பதை உணர்வாய் என்று பெல் அடிக்கடி சொல்வதுண்டு


________________________________________________________

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
இலந்தை சு.இராமசாமி
கிழக்கு பதிப்பகம்


நீல வண்ண சொற்றொடர்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்.
________________________________________________________