Thursday, February 19, 2015

ஜப்பான் - நூல் அனுபவம்


‘இது முரம்… இது தூண்…’ என கண்ணை கட்டிக் கொண்டு யானையை தொட்டுப் பார்த்து உணர்ந்தவர்கள் போல, ஜப்பான் என்றால் சுறுசுறுப்பான மக்கள், தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் கில்லாடிகள், அணுகுண்டு வீசப்பட்ட நிலையிலும் தங்களது அசாதாரண உழைப்பால் மீண்டெழுந்தவர்கள் என அப்படியும் இப்படியுமாய் ஒரு புரிதல் வைத்திருந்தேன்.
கட்டை அவிழ்த்ததும்தான் இது யானை என்கிற பிரம்மாண்ட நிஜம் புரிவது போல், எஸ்.எல்.வி.மூர்த்தி அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஜப்பான் என்கிற புத்தகம் அறிவுக் கண்ணைத் திறந்து இதுதான் உண்மையான ஜப்பான் என உள்ளதை உள்ளபடி காண்பித்து பிரமிக்க வைக்கிறது.
ஜப்பானை தேவதைகள் உருவாக்கிய விதம் என நம்பப்படும் புராதான கதையில் துவங்கி இன்றைய தொழில்நுட்ப சாதனைகள் வரை வெகு விரிவாக ஜப்பான் குறித்து அறியத் தருகிறது இந்நூல். முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் ஜப்பானின் பங்கு, தன்னை வலிமையான சக்தியாக நிருபிக்க அந்நாடு எடுத்த முயற்சிகள், அதன் விளைவாய் கொடுத்த மிகப்பெரிய விலைகள் என பாட புத்தகங்களில் நாம் மேலோட்டமாக அறிந்திருந்த நிகழ்வுகளின் முழு பின்னணியும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
“ஒட்டுமொத்த ஜப்பானிய மக்கள் வாழவும், விவசாயம் தொழில் நடத்தவும் இருக்கும் மொத்த நிலப்பரப்பு தமிழ்நாட்டின் 80% மட்டுமே.” என துவக்கத்திலேயே ஜப்பானின் உருவத்தை நம் மனதில் பதிய வைத்துவிட்டு அத்தகைய சிறிய இடத்தினுள் நடந்த பிரம்மாண்டங்களை ஆசிரியர் விவரிக்கையில் நமக்கு ஏற்படும் சுவாரஸ்யம் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வைக்கிறது. ஜப்பானின் கற்காலம், மன்னராட்சிகள், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான வியாபார உறவுகள், சமுராய்கள், மதம், மக்கள், சாதனைகள், அவமானங்கள், வல்லரசு கனவு, அதற்கான விலை, வீழ்ச்சியில் இருந்து மீள்வது, அமெரிக்க உதவி, தொழில் புரட்சி, இன்றைய சவால்கள் என ஜப்பான் குறித்து ‘அ’ துவங்கி ‘ஃ’ வரை மிக விரிவாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
ஒரு அரசியல், வரலாற்று புத்தகமாக, நமது இந்திய தேசம் எங்கே நிற்கிறது, இன்னும் எங்கே செல்ல வேண்டும் என யோசனைகளை இந்த புத்தகம் தோற்றுவிக்கும் அதே சமயம், ஜப்பான் மற்றும் ஜப்பானியர்களின் ‘கற்கும் பசி’ முதலிய குணாதிசயங்களில் இருந்து தனி மனித அம்சங்களாய் நாம் பின்பற்ற வேண்டியவைகளையும் கோடிட்டு காட்டி ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகவும் மிளிர்கிறது.
அத்தியாயங்கள் மிகப் பெரியதாக இருப்பதாலும் ஒரே அத்தியாயத்தில் பல கால நிலைகள் கடந்து பல விஷயங்கள் சொல்லப்படுவதாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ள ’என்ன படித்தோம்’ என்பதை நினைவூட்டும் ஹைலைட்ஸ் பகுதி புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. 192 பக்கங்கள் உள்ள ஒரு நான்-பிக்ஷன் புத்தகம். ஒரே அமர்வில் படிக்க நேரம் வாய்க்காமல் அவ்வப்போது விட்டுவிட்டு படிக்க நேரும் நிலையில், அந்த புத்தகம் நம்மை தொடர்ந்து ஈர்ப்பது அவசியம். அந்த வகையில் யாரோ அழைத்தால் ஒலியெழுப்பும் செல்போன் போல இந்த புத்தகம் தன்னை நோக்கி அழைக்கும் விதத்தில் சிறப்பம்சங்களை தன்னுள்ளே பெற்றுள்ளது.
மேம்போக்காக வளர்ச்சி, வீழ்ச்சி என் சொல்லிவிட்டு செல்லாமல் தேவைப்படும் இடங்களில் முக்கிய தரவுகளை தந்து படிப்பவர்களுக்கு சிறந்த புரிதல் அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியரின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. ஒரு தேசத்தின் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்கிற விஷயங்களைப் பற்றிய அறிவு சுத்தமாய் எனக்கு இருந்ததில்லை. ஆனால் இந்த புத்தகம் ஜப்பானின் பொருளாதாரம் பற்றி சொல்லும் அதே வேளை ஒரு தேசத்தின் பொருளாதாரம் என்றால் என்ன ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, வளர்ச்சி, வீழ்ச்சி என்றால் என்ன என்பதையும் நமக்கு அறிய தருகிறது. உதாரணமாக பண வீக்கம், பண வாட்டம் பற்றியெல்லாம் போகிற போக்கில் மிக எளிமையாக புரிய வைக்கிறார் ஆசிரியர்.
எந்த இடத்திலும் வலிந்து வார்த்தை தோரணங்களை சேர்க்காமல் மிக இயல்பாக, அதே நேரம் வேகமாக செல்லும் நூல், சொல்லப்பட்டிருக்கும் கனமான உள்ளடக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இவ்வகையில் இந்த புத்தகம், மாணவர்கள், அதிகார மையத்தினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தரத்தில் அமைந்திருக்கிறது.
இதற்கு மேல் எவ்வளவு சொன்னாலும் கூட இந்த புத்தகத்தின் மதிப்பிற்கு இணையாக சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகும் என்பதால் இந்த புத்தகம் குறித்தான மதிப்புரைக்கு முடிவுரையே இல்லை!
ஆன் லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-782-4.html
________________________________________________________________
வலைமனை பிற புத்தக பரிந்துரைகளை படிக்க : புத்தக அனுபவம்
வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

No comments: