அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றி நிகழுமா என்பதும் கவுதமிற்கு ஹாட்ரிக் தோல்வி தவிர்க்கப்படுமா என்பதும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட்டை பொறுத்து இருந்தது.
நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என கடைசி இரண்டு படத்தில் சறுக்கல். மேலும் 'கவுதம் சரியா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலை' என்கிற சூர்யாவின் ஸ்கூல் மிஸ் கம்ப்ளெயின்ட். ஆகவே எதுவும் ரிஸ்க் எடுத்து சொதப்பி விடக்கூடாது. என்ன பண்ணலாம்..? சறுக்கிய ந.நவின் ஓவர்டோஸ் காட்சிகளோ, நீ.எ.பொ படத்தின் டோஸே இல்லாத காதல் காட்சிகளையோ அறவே தவிர்த்து விட வேண்டும். பிறகு?
பெயரைத் தந்த வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தான்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்களின் ரசிக்கப்பட்ட போர்ஷன்களை எடுத்துக் கொண்டு அதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர் எல்லாரையும் பொருத்தி சோளிகளை குலுக்கி போடுவது போல போட வேண்டியதுதான்.
ஆனாலும் அப்படி போடப்பட்ட இந்த 'என்னை அறிந்தால்' குலுக்கல் அழகாகவே விழுந்திருப்பது ஆச்சரியம். வெட்டுப்படாமல் தப்பிக்கவோ பழம் பழுக்கவோ ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் விழுந்த தாயம் போல, கவுதமிற்கு மீண்டும் நற்பெயரை இந்த படம் நிச்சயம் வாங்கி தரும். (அதுக்காக அடுத்த படத்துக்கும் சோளியை கையில எடுத்து எங்க சோலியை முடிச்சுப்புடாதீங்கப்பு.)
அனுஷ்காவில் கதையை ஆரம்பித்து, அப்படியே அஜித்தை இணைத்து, அங்கே அருண் விஜய்யை கொண்டு வந்து பர பரவென மிக சுவாரஸ்யமாய் துவங்குகிறது படம். அஜித்தின் அந்த மெல்லிசான கோடு பிளாஷ்பேக்கை சொல்லி அவர் அந்தப் பக்கம் போய்விட்டார் என அருண் விஜய் உடனான கேங்ஸ்டர் எபிசோடை தந்து சடாரென இந்தப் பக்கத்திற்கு ஷிப்ட் அடிப்பதில் இன்னும் கலக்குகிறது ஸ்கிரிப்ட்.
அதன் பின்பு திரிஷா, அவருடனான காதல், இழப்பு, பழிவாங்கல் என இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை. அதன் பின்பு பாசம், பயணம், ஆக்ஷன் என சென்று மீண்டும் அனுஷ்காவில் வந்து முன்பாதியில் விட்ட இடத்தில் அழகாக இணைகிறது. இதன் பின்புதான் பெரியதாக ஒரு டிவிஸ்ட்டோ சஸ்பென்ஸோ இல்லை. ஆனாலும் சேசிங், ஷார்ப் வசன மோதல் என போரடிக்காமல் சென்று சொதப்பாமல் முடிவது ஆறுதல்.
சும்மா நின்றாலே ரசிர்களுக்கு ஹேன்ட்ஸமாக அருள் பாலிப்பவர் அஜித். இதில் கவுதமின் ஆராதனையில் எப்படி இருப்பார்? கேங்ஸ்டர், ஐ.பி.எஸ், சால்ட் அண்ட் பெப்பர் என மூன்று தோற்றங்களிலும் அவ்வளவு லவ்லியாக இருக்கிறார். ஆசிஷ் வித்யார்தியிடம் தன் வீட்டில் கோபப்படும் இடம் ஆகட்டும், மேத்யூ கூட்டத்தை ஒழிக்க துப்பாக்கி எடுக்கும் இடம் ஆகட்டும், லுங்கியை கட்டிக்கொண்டு நாக்கை மடித்து ரசிகர்களுக்காக செம குத்து குத்தும் இடம் ஆகட்டும், பள்ளி வாகனத்தை மறித்து பெண்ணை கூட்டிக் கொண்டு பயணிப்பது ஆகட்டும்.. வழக்கம் போல தொண்டை கிழிய 'தல.. தல' என கத்தி மாளாமல் அமைதியாய் அதே உற்சாகத்துடன் அஜித்தை ரசிக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு வித்யாசமான ட்ரீட்.
திரிஷாவிடம் புரபோஸ் செய்யும் அந்த ரொமான்ஸ் காட்சியில் மட்டும் 'எனக்கு இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்லைப்பா' என்பது போலவே நடித்திருக்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாக இருக்கலாம். (இந்த அம்சம் அன்புச்செல்வனில் இருந்தும் ராகவனில் இருந்தும் சத்யதேவை வேறுபடுத்தி காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.) *இப்படியும் பாஸிட்டிவ்வா சொல்லிக்கலாம்.
"யாராச்சும் பத்த வைங்கடா.. நான் எப்படி வெடிக்கிறேன் பாருங்க.." என்பது போல் இருக்கும் சரவெடியாய் அருண்விஜய். பாண்டியா, அமுதன்-இளமாறன் போன்றவர்களின் குரூரத்தினை வெளிப்படுத்தாத ஆனால் அதே நேரம் நட்பை நம்பி ஏமாந்துவிட்ட வெறியுடன் தரமான வில்லனாக வெடித்திருக்கிறார். ஒரு நடிகர் கவுதமின் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை விட வேறென்ன பாராட்டு பெற்று விட முடியும்? பட்டாசு பாஸ்!
திரிஷாவா இது...? மை காட். பிளெயின் காட்டன் சாரியில் ஜெஸ்ஸியாக கவுதம் கைவண்ணத்தில் மின்னியவர்.. அப்படியே நேரெதிராய் சர்வ அலங்காரத்துடன் கண்களில் மையுடன் நடனத் தாரகையாக ஜொலிக்கிறார். திரிஷாவுடன் ஒப்பிடுகையில் வெயிட்டான ரோல் அனுஷ்காவிற்கு இல்லை. கொடுத்த ரோலை செய்திருக்கிறார். "என் ரோலை வேணும்னா அவங்க பண்ணட்டும்" என கவுதமிடம் அனுஷ்கா சொன்னதாக செய்திகள் வந்ததே. அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது. (வெவரம் மேடம் நீங்க!)
மியூசிக்கல் ப்ளே பார்த்திருக்கிறீர்களா.. பாடிக்கொண்டே முழுக் கதையையும் நடித்து காட்டிவிடுவார்கள். ஏறக்குறைய என்னை அறிந்தால் முதல் பாதி ஒரு லவ்லி மியூசிக்கல் ப்ளே. ஹாரிஸ் விளையாடி இருக்கிறார். சூப்பர் பாஸ்! தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல கொஞ்ச நாளாவது ஹாரிஸை யாரும் கலாய்க்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு மனிதர் உழைத்திருக்கிறார். ('நான் முன்ன மாரி இல்ல இப்போ.. ரொம்போ மாறிட்டேன்'னு அனேகன்ல ஒரு லைன் வருதே.. செம டைமிங் பஞ்ச் பாஸ் அது..! ஆஹா நானே கலாய்ச்சிட்டேனே.. மன்னிச்சூ மன்னச்சூ..)
‘பில்லா 2வில் விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொல்லி அடித்துவிட்டு, மூன்றாவதாக அஜித் 'என்னை அறிந்தால்' படத்தை தந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயாவில் அடித்தது. அடுத்ததாக நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் இரண்டிலும் சறுக்கிவிட்டு இப்போது கவுதம் 'என்னை அறிந்தால்' படத்தை சிறப்பாக தந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.
விவரிக்க முடியாத விஷுவல்ஸ், ஜில்லென்ற இசை, பற்றி எரியும் மோதல், பசுமையான காதல் என 'என்னை அறிந்தால்' தமிழ் சினிமாவின் உன்னதம். இங்கிலீஷ்ல சொன்னா எக்ஸலென்ட்!
ஏன் தமிழ், இங்கிலீஷ்ல சொல்றோம்னா... கவுதம் படம்னா எல்லாம் அப்படித்தான்!
No comments:
Post a Comment