"இவனை தூக்கிட்டு வர்றதுக்கு மூணு பேரா?" என தனுஷ்ஷை குறித்து ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். உண்மைதான். அவர் உருவம் அப்படி. ஆனால் தனுஷின் ஆற்றலை தனியாக டவுன்லோட் செய்து வைத்தால் முன்னூறு பேர் வந்தாலும் தூக்க முடியாது போல் இருக்கிறது. மூன்று வெவ்வேறு கால நிலை காதலனாக தனுஷ். மூனா ரூனா, அஷ்வின், காளி என கிரியேட்டிவ்வாக எதையாவது செய்யத் துடிக்கும் கலைஞனுக்கு செம ட்ரீட்டான ப்ராஜக்ட். தனுஷ் எப்படி செய்திருக்கிறார் என ஆராய்ந்து எழுத முடியாது. பம்மல் வ்வ்வே சம்பந்தம் சொல்வது போல அப்படியே அனுபவிக்க வேண்டியதுதான்.
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் என குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் வரிசையில் கே.வி.ஆனந்த். பொதுவாகவே காதலை கசக்கி பிழியும் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அட.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்கய்யா என்பது போல் இருக்கும். "இதுவரை முழுமையான காதல் படங்கள் நான் செய்ததில்லை.. அனேகனில் பண்ணியிருக்கேன்" என கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் சொன்னபோது, 'என்னடா.. மாற்றான் தந்த சறுக்கலில் இவரும் இப்படி ஆயிட்டாரே.. படம் காதல் கத்திரிக்காய் என ரொம்ப சிம்பிளா இருக்கும் போலிருக்கு' என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது பேட்டியில் 'க.மொ.வி.' இறக்க விரும்பாமல் தன்னடக்கமாய் இருந்துவிட்டு படத்தில் அதை செய்திருக்கிறார்.
கதையே கதாநாயகியை சுற்றி நகர்வதால் அழகு பதுமையாய் மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்யும் பெண் வேண்டும். எங்க பாஸ் கண்டுபிடிச்சீங்க உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு அசத்தும் அமைராவை? மூன்று கால நிலைகளிலும் செம க்யூட் அன்ட் ஸ்வீட். தொடர்ந்து ஐ, இசை இரண்டு படங்களிலும் வெளி மாநில/நாட்டு கதாநாயகிகளின் மொழிக்கு பொருந்தும் அல்லது பொருந்த வைக்கப் பட்டிருக்கும் உதட்டசைவு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யம்.
கனக்ஷன்ஸ் ஜெகன் ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பாமலே 'ஏ' சர்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற பொதுவிதி இந்த படத்தில் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு வசனங்களை தவிர அவரது வால்யூமை குறைத்தே வைத்திருக்கிறார்கள்.
முதல் பாதி கார்த்திக் சூப்பர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் சூப்பராக இருந்திருக்கலாம். 'இசை' போன்ற ஒரு ஸ்கிரிப்டில் சத்யராஜ் துவம்சம் செய்தது போல் அனேகனில் வாய்ப்பு இருந்தும் கார்த்திக் கொஞ்சம் குறைவாகவே செய்திருக்கிறார். இல்லை அவர் டிசைனே அப்படித்தானா தெரியவில்லை.
ஓரு பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை தியேட்டர் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது கடைசியாய் எப்போதென ஞாபகம் இல்லை. டாங்கா மாரியில் ஸ்பீக்கரை விட ரசிகர் குரல் தெறிக்கிறது. வெறும் குத்தாட்ட பாடலாக இல்லாமல் அதற்குள்ளும் கதையை வைத்ததற்கு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் அதற்கடுத்தாய் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ரோஜா கடலே' பாடலை அப்படி கிராபிக்ஸ் பேக்கிரவுண்ட் லொக்கேஷன்களை வைத்து சுமாராய் காண்பித்தற்கு அந்த சபாஷை திரும்ப வாங்கி கொள்ள வேண்டும். ஹாரிஸ் இவ்வளவு அழகாக பாடல் போட்டும் இப்படி பண்றீங்களேம்மா...?
முதல் அரைமணி நேரம் அறுபதுகளில் பர்மா எபிசோட், பின்னர் இடைவேளை வரை இன்றைய காலகட்டம். இடைவேளை முடிந்ததும் எண்பதுகளின் சென்னை, பின்னர் இன்றைய நிகழ்வு என திறமையாக கட்டமைக்கப்பட்ட இந்த சயின்ஸ், பேன்டஸி, லவ் சப்ஜெக்ட், தமிழ் எழுத்துலகில் மின்னி பின் திரையிலும் மின்னத் தெரிந்த வெகு சொற்பமானவர்கள் பட்டியலில் சுபாவின் பெயரும் எப்படி இடம் பெற்றது என்பதற்கு தரமான சான்று.
தமிழுக்கு கொஞ்சம் புதிரான புதிதான கதை, அடுத்தடுத்து பரபரப்பாய் நகரும் காட்சிகள், அருமையான ஆழமான காதல் எபிசோட்ஸ், ஆங்காங்கே டிவிஸ்ட்ஸ் அன்ட் டர்ன்ஸ், நடிகர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ், துள்ளலான இசை இவை எல்லாவற்றையும் சிறப்பாக அசெம்பிள் செய்யத் தெரிந்த கெட்டிக்கார இயக்குனர் என ஒரு சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது அனேகன்.
2 மணி 40 நிமிடங்களும் கொடுத்த ரூ.120க்கு ரூ.1000 கிடைத்தது போல் ஒரு திருப்தி. இது போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட்டிற்கு இண்டு இடுக்கு குறைகளை வைத்துக் கொண்டு மூணரை, நாலு ஸ்டார்கள் தருவது பாவம். நான் தருகிறேன் கே.வி.ஆனந்த்... இந்தாங்க பிடிங்க 5 ஸ்டார்ஸ் ★★★★★
வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in
Tags: Anegan, Anegan Review, KV Anand, Dhanush, Amyra, Harris Jayaraj, AGS Productions
No comments:
Post a Comment