அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது. வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.
அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது. அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.
இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.
ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும். கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம். ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும். வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.
விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள் இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.
யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.
சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது. இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது. ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன். என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.
கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது. யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.
"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"
கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!
__________________________________
யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்
புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html
_______________________________
சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
No comments:
Post a Comment