பூமியின் குரலை ஒடுக்கியிருக்கும் கொரோனா வைரஸின் சொந்த ஊர் என்கிற வகையில், ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் சீனாவின் அறியப்படாத செய்திகளை, வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் சிறந்த புத்தகம், 'சீனா விலகும் திரை' ; ஆசிரியர்: பல்லவி அய்யர்; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.
இடப்புறம் இருந்துகொண்டு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானை நமக்கு நன்கு தெரியும். எப்பொழுதும் அதையே பார்த்திருப்போம். ஆனால் கழுத்தை நேர் எதிரே திருப்பி இந்தப் பக்கம் இருக்கும் சீனாவை நாம் அந்த அளவு கண்டுகொள்வதே இல்லை.
நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் மெழுகில் வார்த்த சீன பொம்மைகளிலிருந்து ஆயிரங்களில் கிடைக்கும் எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் வரை சீன பொருட்கள் இல்லாமல் நாம் இல்லை என்றாகிவிட்ட இன்றைய நிலையில் சீனாவை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
இந்தியாவில் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது; சீனாவில் இல்லை. இருந்தும் சாலைகள், மின்சாரம், சாக்கடை, தண்ணீர், ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கூடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டது.
சீனாவின் பலம், பலவீனம், மக்கள் மனப்பான்மை, சர்வாதிகார அரசு, தொழில் முறை, பாரம்பரியம், வரலாறு என புத்தக ஜன்னலின் வழியே திரையை விலக்கி பல்லவி ஐயர், சீனாவின் அப்பட்டமான காட்சிகளை காண்பிக்கும்பொழுது, தலை முதற்கொண்டு வால் வரை அமைதியாய் இருக்கும் இந்த டிராகன் மிருகத்தின் சுய உருவத்தை பார்ட் பை பார்ட் அறிய முடிகிறது.
இணையம் என்கிற முரட்டு செய்தித் தொடர்புக் குதிரையை அடக்கிச் சவாரி செய்ய அரசாங்கம் ஏராளமாகச் செலவழித்தது... கூகிளில் போய் ஃபலன் காங் என்று தேடினாலோ, அல்லது சும்மா 'சீனா மனித உரிமைகள்' என்று அடித்தாலோ உடனே உங்கள் இணையத் தொடர்பு அறுந்து விடும்!
சீனாவிற்கு கிளம்புகையில் ஃபிளைட்டில் உட்கார்ந்து இதெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது என ஒரு பாஸ்ட் பார்வர்ட் டிரைலர் காட்டுவதாகட்டும், முடிவுரையில் முதலில் வேலை பார்த்த கல்லூரிக்கு சென்று நினைவுகளை அசை போடுவதாகட்டும் பல்லவி, ஒரு ஃபீல் குட் சினிமாவிற்குண்டான அம்சங்களுடன் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.
சீனாவிலிருந்து வந்திருந்த ஒரு வர்த்தகக் குழுவினரை தாஜ் மகாலைப் பார்க்க அழைத்துப் போயிருந்தேன். டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். வெகு நேரம் வரை அமைதியாக பஸ் ஜன்னலுக்கு வெளியே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், லியோனிங் மாகாணத்திலிருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொழில் முனைவர் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டார். 'மேடம், நாம் நெடுஞ்சாலையில் போகப் போகிறோம் என்று சொன்னீர்களே, அந்த நெடுஞ்சாலை எப்போது வரும்?' நாசமாப் போச்சு, அதே நெடுஞ்சாலையில்தானே இரண்டு மணி நேரமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!
நன்றாக கைவரும் நகைச்சுவை உணர்வை அதிகமாக பயன்படுத்தாமலும், எந்த இடத்திலும் ஜோடனைகள் செய்யாமலும் இயற்கையான நடையில் நூல் செல்வது சுகமான வாசிப்பனுவத்தை தருகிறது.
1990-களின் ஆரம்பத்தில் இந்தியாவின் சாலை வசதிகள் சீனாவைவிட உயர்வாக இருந்தன. மொத்த நீளத்திலாகட்டும், ஜனத்தொகை அடிப்படையில் தலைக்கு எவ்வளவு சாலைகள் இருக்கின்றன என்ற விகிதாசாரமாகட்டும் - இந்தியாதான் முன்னே இருந்தது. பதினைந்து வருடத்தில் நிலைமை தலைகீழ். இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தன்னுடைய குண்டுகுழிகளிலேயே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, சீனா சீறப் புறப்பட்டு மேலே போய்விட்டது.
எந்த கருத்தானாலும் அங்கு ஆசிரியர், சீன-இந்திய ஒப்பீட்டு பார்வையை செய்ய தவறவில்லை. இதன் மூலம் டைட்டிலில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் திரையையும் விலக்கி காண்பிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நாம் தவற விடும் வளர்ச்சியை சீனா எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பது உட்பட நமது ஜனநாயகத்தை அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பது வரை பல்வேறு கட்டங்களில் செய்யப்படும் இந்த ஒப்பீடு உண்மையிலேயே மிகுந்த கருத்தாக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முன்னூற்றி சொச்சம் உள்ள ஒரு குண்டு புத்தகம். ஒரே அமர்வில் நாம் படிக்கக்கூடிய அளவு நேரமிருந்தால் பரவாயில்லை. ஆனால் நாளொரு முறை வாரமொருமுறை படிப்பதாயின் அந்த புத்தகம் அடுத்தடுத்து நாம் கூப்பிடுவது அவசியம். இந்த புத்தகம் அவ்வாறு என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. திருப்புமுனையிலேயே என்னை அசத்திய ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்திலும் அசத்துகிறார்.
'....இந்தியா, டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு பிரச்னை பற்றி நாலு பேர் நாலு அபிப்பிராயத்தைத் தெரிவிப்பது சர்வ சாதாரணம். அதற்காக அவர்களுக்குள் சண்டை என்று அர்த்தமல்ல. வேறு எவ்வளவோ விஷயங்களில் அவர்கள் கருத்து ஒத்துப்போகவும் செய்யலாமே.'
'தெரியும்' என்று தலையை உலுக்கினாள் ஷாவோ.'ஆனால் சீனாவில் வழக்கமே வேறு. இங்கே எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்!
கல்லூரி ஆசிரியராக துவக்க நாட்கள், ஷாவோலின் மடம், தொழில்துறையில் முன்னேறிய பணக்கார கிராமம், வணிக வளாக நகரம், ஆசிரியர் வாழ்ந்த பாரம்பரிய குப்பம் ஹுடாங், திபெத் லாசாவிற்கு விடப்பட்ட முதல் ரயில் பயணம், சந்தித்த பல்வேறு வகையான மக்கள், அவர்களுடனான அனுபவங்கள் என துடிப்புள்ள துணிச்சல் மிக்க நிருபரின் பல்வேறு நிலை வாழ்க்கை குறிப்புகள் வழியே சீனாவை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமான விஷயம், புரிந்து கொள்ள எளிதாகவும் இருக்கிறது.
சீனா குறித்த புரிதல் வேண்டுவோருக்கு ஏராளமான விவரங்கள் சொல்கிறது 'சீனா விலகும் திரை!'
கட்டுரையாளர் : சுகுமார் சுவாமிநாதன், வலைமனை
No comments:
Post a Comment