Thursday, February 3, 2022

நங்கநல்லூர் விஜயம்

 சிறு வயதில் அப்பா அடிக்கடி அழைத்துச் செல்லும் இடம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில். ஆன்மிக புரிதல்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நமக்கு கிடைக்கும் குடும்ப சுற்றுலா வாய்ப்பு என்கிற வகையில் அது ஒரு இனிய அனுபவமாகவே இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்கல் வரை ரயில் பயணம். அதன் பின்னர் நங்கநல்லூர் வீதிகளில் நடை பயணம். ஆட்டோல போலாமா என்பதெல்லாம் அபச்சார சொல். அப்பா ஐம்பது மீட்டர் வேகமாக நடக்க அம்மா, அக்கா, அண்ணன் நான் அனைவரும் பேசி சிரித்தபடி பொறுமையாக பின் தொடர்வோம். நாங்கள் பேசி சிரிக்க சிரிக்க அப்பாவின் வேகமும் கூடும்.

இப்போது ஆலயத்தை நினைத்தாலும் ஞாபகம் வருவது விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையும், தரிசனம் முடித்து திரும்புபவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தான்.  பல சமயங்களில் படைக்கப்பட்ட வடை மாலையில் இருக்கும் வடை நமக்கு வழங்கப்படும். காரமாக மிளகு மற்றும் ஏதேதோ போட்டு கரமுர என அருமையாக இருக்கும்

பல வருடங்களாக போகாத நிலையில் சில நாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பன் பிரசன்னாவுடன் கொளத்தூரில் இருந்து நங்கநல்லூர் புறப்பட்டோம்.

சின்ன வயதில் அப்பா வேகமாக முன் நடக்க அவரை பின் தொடர்ந்து செல்வோம். சில சமயம் இடப்புறம் திரும்பினாரா வலப்புறம் திரும்பினாரா என குழம்பி நிற்போம். இப்பொழுது கூகுள் கண்மணி காதில்  இப்படி திரும்பு அப்படி திரும்பு என சொல்லிக் கொண்டே வந்ததால் 45 நிமிடத்தில் ஆலயத்தை அடைந்தோம்.






சிறு வயது நினைவுகள் சிலிர்ப்பாய் எழுந்தன.  தரிசனம் முடித்து திரும்புகையில்  பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். வடை சுவை நாவில்  நாட்டியமாட எங்காவது கவுன்டர் சேல்ஸ் இருக்கிறதா என தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.

பல வருடங்கள் கழித்து ஆஞ்சநேயரிடம் அட்டென்டென்ஸ் போட்ட திருப்தியில் திரும்பினேன்.

மறுநாள் நடந்ததுதான் அதிசயம். 'நேற்று நீ என்னை பார்க்க வந்திருந்தல்ல.. இன்னைக்கு உன்னை நான் பார்க்க வர்றேன்' என்பது போல திங்கட்கிழமை காலை அலுவலகத்திற்கு வந்து நின்றார் ஆஞ்சநேயர்!




No comments:

91 club