இந்நிகழ்வில் பதிவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், பலா பட்டறை ஷங்கர், பட்டாம்பூச்சி சூர்யா, மணிஜி, எல்.கே. மணி ஆயிரத்தில் ஒருவன், பதிப்பாளர் குகன், அதி பிரதாபன், சங்கவி, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், மோகன் குமார், திசைகாட்டி ரோஸ்விக் ஆகியோரை சந்தித்து பேச முடிந்தது மகிழ்வாய் இருந்தது.
நான் சென்ற பொழுது கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வந்திருந்தார். சுரேகா சிறப்பாக தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். மயிலன் என்பவரது கிரியேட்டிவ்வான கவிதைக்கு அரங்கம் அதிர்ந்தது.
கட்டக்கடைசியாய் கேபிள்ஜி தனது எண்டர் கவிதையை வாசித்தார். கவியரங்க இறுதியில் தேநீருடன் போண்டா வழங்க ஆரம்பித்தனர். சும்மா சொல்லக்கூடாது போண்டா வாசனை சுர்ரென தூக்கியது. ஒரு கட்டத்தில் சுரேகா போண்டாவிடமிருந்து எங்கள் கவனத்தை மீட்டெடுக்க அறிக்கை விடும் அளவிற்கு சென்று விட்டது.
சரியாய் அப்பொழுது பேச எழுந்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், "போண்டா கிடைச்சவங்க சாப்பிடலாம் தப்பில்லை... சில பேரு கையில வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என தனது இன்டெலிஜன்ட் ஹுமர் முத்திரையுடன் பேச்சை துவக்கினார். இருபது முதல் முப்பது நிமிடம் அவர் பதிவுகள், பதிவர்கள், பதிவுலகம் குறித்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பதிவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பொருள் பொதிந்ததாக இருந்தது.
விழாவில் வெளியிடப்பட்ட பெண் பதிவர் சசிகலா சங்கர் அவரது தென்றலின் கனவு புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது சிறப்பு. அவருக்கும் வாழ்த்துக்கள்.
பின்னர் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற, அரட்டை கச்சேரிகளில் பங்கெடுத்துவிட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களை பிலாசபி பிரபா மூலம் அறிந்து அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன். நிச்சயம் சிறப்பானதொரு நிகழ்வு. மென்மேலும் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....!