நூல் அனுபவம் - ஏ.ஆர்.ரஹ்மான் - என்.சொக்கன்
'நான் இந்த விருதை வாங்கும்போது அதை நேரில் பார்ப்பதற்கு என்னை வாழ்த்துவதற்கு என் அம்மா இங்கே வந்திருக்கிறார். அதைத்தான் நான் பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன்'
கையில் ஆஸ்கார் விருதினை பெற்றுக்கொண்டு தாயையும் தாய்மொழியையும் ஏ.ஆர்.ரஹ்மான் பெருமைப்படுத்திய் அந்த கணத்தை பார்த்து புல்லரித்து போய் உட்கார்ந்து இருந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை அடைவதற்கு அவர் கடந்து வந்த சோதனைகளை என்.சொக்கன் எழுதி வெளிவந்திருக்கும் 'ஏ.ஆர்.ரஹ்மான்' புத்தகத்தில் படித்தபொழுது ரொம்பவும் ஆச்சர்யமாகவும் இன்ஸ்பயரிங் ஆகவும் இருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட, கற்றுக்கொண்டிருந்த இசையை வைத்து இரவில் பணியும் காலை பள்ளியும் என சோதனைகளை அவர் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற உழைத்ததும், அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தி வழிநடத்திய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ரஹ்மானின் இசைக்கு பின்னால் ஒரு தாயின் கனவு இருக்கிறது என்பதை அறியும்பொழுது ரஹ்மான் மேல் இருக்கும் மரியாதை இன்னும் பல படிகள் உயர்ந்துவிட்டது.
'அப்பாவோட தொழிலை நீ தொடர்ந்து செய்யணும் திலீப், பெரிய இசையமைப்பாளரா, திறமைசாலியா பெயர் வாங்கணும். அதுதான் என்னோட ஆசை. உங்க அப்பா இப்போ உயிரோட இருந்திருந்தா, அவரும் இதையேதான் சொல்லியிருப்பார்.'
அப்பாவின் இசைக் கருவிகள், மற்ற சாதனங்களோடு திலீப்பும் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களுக்குப் பயணம் செல்ல ஆரம்பித்தான். அங்கே உள்ள இசை அமைப்பாளர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், இசை நடத்துனர்களையெல்லாம் சந்தித்து அவர்களிடம் பணிவாகப் பேசுவான். 'எனக்கு இந்தக் கருவிகளை நன்றாக வாசிக்கத் தெரியும். தயவு செய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்பான்.
தனது குடும்பத்தின் வறுமை நிலையை விரட்டி அடிக்க ரஹ்மான் கருவிகளை இசைக்கும் பணியிலும் அதில் காட்டிய நேர்த்தியினால் பின்னர் படிப்படியாக உயர்ந்து விளம்பரங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் என்பது போன்ற பலர் அறியாத தகவல்களை அறியத்தந்து ஆச்சரியப்படுத்துகிறது இந்த புத்தகம்.
தயக்கத்தோடு வேலையைத் தொடங்கிய திலீப்புக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை அதிகரித்தது. தன்னுடைய சிந்தசைஸரிலேயே மொத்த விளம்பர இசையையும் உருவாக்கிப் பதிவு செய்துவிட்டார்.
..சச்சின் டெண்டுல்கரும் கபில் தேவும் வந்து 'பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று புன்முறுவல் செய்வார்களே, அந்த விளம்பரம் ஞாபகமிருக்கிறதா? அது திலீப் கைவண்ணம்தான்.
ரஹ்மானின் இசைப்பயணத்தில் அவரது உயரம் ஏதோ ஒரே நாளில் அதிர்ஷ்டத்தில் முளைத்துவிடவில்லை. செய்யும் எதிலும் அவரது புதுமை, ஈடுபாடு, தனித்திறமை ஆகியவைதான் அவரை இன்னும் இன்னும் உயர்த்திக்கொண்டே போகிறது. விளம்பரங்களில் அவர் காட்டிய புதுமைதான் அவருக்கு ரோஜா பட வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.
.. தளபதி ரிலீஸுக்குப் பிறகு, மணிரத்னமும் இளையரஜாவும் பிரிந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பரபரப்பாக வெளியிட்ட பத்திரிக்கைகள், 'இளையராஜாவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?' என்று கேள்வி எழுப்பின. 'இனிமேல் மணிரத்னத்தின் படங்களில் பாடல்களின் தரம் குறைந்துவிடும்' என்று ரசிகர்களும் வெளிப்படையாகவே பேசினார்கள்.
இதனால் திலீப் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முதல் படத்திலேயே அவர் இளையராஜாவுடன் நேரடியாக ஒப்பிடப்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
முதல் படத்திற்கு ஒப்புக்கொண்ட நிலை, அவர் செயல்பட்ட விதம், நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவை. நூலாசிரியர் என்.சொக்கன் புத்தகத்திற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது நூலில் கிடைக்கும் பல குறிப்புகளிலிருந்து தெரிகிறது.
அன்றைக்கு, திலீப்பினுடைய முதல் பாடலை இசையமைக்க வாத்தியக் கலைஞர்கள் யாரும் வரவில்லை. ஆகவே, அவர்களுடைய துணை இல்லாமல், அந்தப் பாடலுக்குத் தேவையான எல்லா இசைத்துணுக்குகளையும் கீபோர்ட், சிந்தசைஸர், கணினி உதவியுடன் அவரே வாசித்து உருவாக்கத் தொடங்கினார்.
அந்த முதல் படத்திலேயே அதற்குமுன் தமிழில் வந்த எல்லாப் பாடல்களையும் 'பழைய இசை'யாகத் தோன்றச் செய்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு, ஒவ்வோர் இசையமைப்பாளரும் இதே மாதிரியான நவீன ஒலியைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம், ரஹ்மானின் இசை பயணத்தில் ஆங்காங்கே அவர் கொடுத்த ஹிட்ஸ்களை குறிப்பிட்டு சில பாடல் சார்ந்த ஆச்சரியங்களையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு இந்த சங்கதியை படித்த பின்னர் இந்த பாடலை இன்னுமொரு முறை கேட்டு ஆச்சரியப்பட்டு போனேன்.
'ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல' என்கிற சோகப் பாடலை ஷாகுல் ஹமீது பாட, வேறு எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க கோரஸ் குரல்களை மட்டும் பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். ஆனால், அந்தப் பாட்டைக் கேட்கிறவர்களுக்கு எதுவும் உறுத்தலாகத் தெரியாது.
இந்த புத்தகத்தினை ஒரு பயாக்கிராபி புத்தகமாக லேபிளுடுவது தவறு. இது ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக அமைந்திருக்கிறது. ஆசிரியரின் நடையாளுமை அப்படியான எண்ணத்தை வலுவாக தோற்றுவிக்கிறது. ரஹ்மானின் பல்வேறு காலகட்டங்களிலும் அவரது எதிர்நீச்சல், முக்கியமாக தொழிலில், கலையில் அவரது மனப்பான்மை ஆகியன முன்னேற விரும்பும் யாரும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள்.
ரஹ்மானின் ஒரு சிறப்பான மனப்பான்மை இனோவேஷன். வந்தே மாதரம் ஆல்பம் பிறந்ததும் அவரது இந்த தொடர்ச்சியான புதுமை விரும்பும் தாகத்தினால்தான்.
'ஏதாவது புதுசா செய்யணும்ப்பா'
நூறாவது முறையாக ரஹ்மான் அதையே சொன்னார். ஆனால், அந்த 'ஏதாவது' எனன என்பதுதான் அவருக்கும் புரியவில்லை, எதிரில் உட்கார்ந்திருந்த பரத் பாலாவுக்கும புரியல்லை.
எதிலும் எளிதில் திருப்தி அடையாதது, தன்னடக்கம், புதுமை விரும்புதல், ஈடுபாடு, புதிய முயற்சிகள் என்பன போன்ற ரஹ்மானின் சீக்ரெட் பார்முலாக்களை அவரது பல நிலை எண்ண ஓட்டங்களை புத்தகம் வாரி வழங்குகிறது.
'எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோநிலையோடு ஒரு பாடலை உருவாக்க உட்கார்ந்தால், அதே பழைய விஷயங்களைத்தான் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்போம்' என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கொள்கை, 'அதற்குப் பதிலாக, நான் எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொள்கிறேன், அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்து பார்க்கிற முனைப்பு வருகிறது'
ரஹ்மான் சுலபத்தில் திருப்தியடையாத பேர்வழி. தான் உருவாக்கிய இசை ஒரு குறிப்பிட்ட தரத்தை எட்டியதும், 'இது போதும்' என்று வெளியே தள்ளிவிட்டு, அடுத்ததைக் கையில் எடுத்துக்கொள்கிற பழக்கம் அவரிடம் இல்லை.
கையில் ஆஸ்கார் விருதுடன், எல்லா புகழும் இறைவனுக்கே என அமைதியாக சொன்ன ரஹ்மானின் 'டவுன் டூ எர்த்' சிம்பிளிசிட்டியினை வியக்காதவரில்லை. ரஹ்மானின் தன்னடக்கத்திற்கும் திறமைக்கும் அவர் இன்னும் பல உயரங்களை தொடக்கூடியவர், யாரும் கற்பனை செய்ய முடியாத புதிய பரிமாணங்களை இசையில் படைக்க வல்லவர். இத்தகைய தனித்துவமான கலைஞனின் கதையை சிறப்பாக அறியத்தந்தமைக்கும் ஒரு 'ஃபீல் குட்' வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதற்கும் ஆசிரியர் என்.சொக்கன் பாராட்டப்பட வேண்டியவர் ஆகிறார்.
_________________________________________________________________
பழுப்பு நிற எழுத்துக்கள் புத்ககத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_________________________________________________________________
_____________________________________________
_____________________________________________