உங்க ராசிக்கு சனி பெயர்ச்சியினால கண்டம் இருக்கு இனிமே டைம் சரியா இருக்காது. அதனால உங்க வாட்ச் கூட சரியா ஓடாதுன்னு ஏதாவது வாரா இதழ்ல படிச்சீங்களா... அதையே மண்டையில போட்டு யோசிச்சிக்கிட்டு இருந்தா எப்படி... நம்மக்கிட்ட சொல்ல வேண்டியதுதான...
இதோ பாருங்க நீங்க எந்த ராசியா வேணா இருந்துட்டு போங்க இந்த சனி பெயர்ச்சி பத்தி நீங்க ஒன்னியும் கவலை பட வேணாம்... நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு பரிகாரம்தான்... நேரா போயி சின்ன தளபதி பரத் நடிச்சிருக்கிற ஆறுமுகம் படத்தை ஒரே ஒரு வாட்டி முழுசா பாருங்க. (பாதியில எழுந்து வந்தா பரிகாரம் பலிக்காது. அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல சொல்லிபுட்டேன்.)
இந்த படத்தை பாத்தா எப்படிங்க தோசம் போகும்னுதானே கேக்குறீங்க. வரேன் வரேன்... இந்த படத்தை முழுசா பாத்துட்டீங்கன்னா உலகத்துல வேற எந்த கொடுமையும் ஒரு விஷயமாவே உங்களுக்கு தெரியாது... ஏன்னா படம் முழுக்க கொடுமையோ கொடுமை அவ்ளோ கொடுமை கொட்டி கிடக்கு...
நாம லொள்ளு சபா பாத்திருப்போம். ஒரு நல்ல படத்தை எடுத்துகிட்டு அதே காட்சிகளை காமெடியா மாத்தி அமைப்பாங்க. இங்க பாருங்க அண்ணாமலை படத்தை அப்படியே எடுத்து அதை எவ்வளவ்வு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுதியிருக்கங்க.... எனக்கு தெரிஞ்சி லொள்ளு சபால கூட ஒரு படத்தை இவ்ளோ அசிங்க படுத்தியது இல்லை. வேற யாராவது எடுத்திருந்தா கூட மன்னிச்சிடலாம். ஆனா அண்ணாமலை எடுத்த அதே டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவே இந்த வேலையை செஞ்சிருக்காருன்னா அட போங்க சார் ரொம்ப சின்ன பிள்ளைதனமா இருக்கு.
ஏன்டா கண்ணா பின்னானு எழுதுற படம் எடுக்குறவங்க பாவம் இல்லையானு தயவு செஞ்சு யாரும் கேட்டுடாதீங்க. ஆறுமுகம், டைரக்சன் சுரேஷ் கிருஷ்ணானு விளம்பரத்துல போட்டிருந்துச்சு . சரி நல்ல இயக்குனாராச்சேன்னு அவரை நம்பி போனேங்க. அண்ணாமலை, பாட்ஷா, போன்ற பல வெற்றி படங்களை எடுத்த இயக்குனரா இது.. எனக்கெனவோ ஒரு டவுட்... இந்த பிரபல பதிவர்கள் பெயரில் போலியானவர்கள் பதிவு போடுவது போல யாரோ போலி சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை எடுத்திருக்க கூடும் என நினைக்கிறன்.
அண்ணாமலை படத்தை அப்படியே 80 சதவிகிதம் எடுத்து வச்சிருக்காரூங்க. மீதி 20 % நல்லா இருக்கானு கேக்காதீங்க. அதுல படையப்பா-10%, பாட்ஷா- 5%, , சிவாஜி- 2%, தெலுங்கு படங்களின் வாசனை - 3% என்கிற பார்முலாவில் உள் பங்கீடு இருக்கு. இவ்வளவும் சூப்பர் ஹிட் படங்களாச்சே .. இதோட கலவை எப்படி சூப்பரா இருக்கும்னு யோசிக்கிறீங்களா.. நீங்க ரொம்ப பாசிடிவ் கேரக்டர் சார் !
ஆனா நீங்களே ஒரு பயங்கர நெகடிவ் கேரக்டரா இந்த கலவையை யோசிச்சி பாருங்க. சாம்பார், சட்னி, குருமா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணா வாந்தி எடுக்குற மாதிரி ஒரு காக்டைல் வருமே.. ஆங்... கரெக்ட்டு. படம் அப்பிடி இருக்க்கி....
அதுல பால் வியாபாரம் இதுல இட்லி வியாபாரம். அதுல அப்பா கட்டுன வீடு இதுல அம்மாவோட சமாதி. அதிலும் சமாதியை இடிச்ச உடனே பரத் சொல்ற டயலாக் செம காமெடி. இவ்ளோ நாள் உயிரோட (?) சமாதியில இருந்த எங்க அம்மாவை இடிச்சி கொன்னுடீங்களேடா ....( ஸ்..ஸ்... ப்பா... முடியல... சுரேஷ் கிருஷ்ணாவுக்குள்ள ஒரு மினி பேரரசு ஒளிஞ்சிக்கிட்டிருக்கார்னு இப்பதான் தெரியுது ) அப்புறம் அண்ணாமலை வரலாற்று சிறப்பு வாய்ந்த சபதம் டயலாக்... உன்னோட முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி........ அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அதை எவ்வளவவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுத்தி இருக்காங்கம்மா.
சரத்பாபு கேரக்டர்ல ஒரு புது முகம்(எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு). ராதாரவி கேரக்டர்ல ரம்யாகிருஷ்ணன். குஷ்பூ கேரக்டர்ல ப்ரியாமணி ஆண்டி. ஜனகராஜ் கேரக்டர்ல கருணாஸ். வைஷ்ணவி கேரக்டர்ல சரண்யா மோகன். அப்புறம் சொல்லவே வருத்தமா இருக்கு ரஜினி கேரக்டர்ங்க்ற நெனப்புல பரத் ( சத்தியமா முடியல).
அநேகமாய் அந்த சிவப்பு கலர் துண்டு இப்போதெல்லாம் கோ-ஆப்டெக்சில் கூட விற்கமாட்டார்கள் ஆனால் அதை இந்த பரத் எங்கு போனாலும் இடுப்பில் கட்டி கொண்டு அண்ணாமலை லுக் வர வழைக்க முயற்சி செய்திருக்கிறார் பாருங்க.... சரி இடுப்பில் துண்டு கட்டினால்தான் ரஜினி லுக் வரவில்லை செகண்ட் ஹாபில் கோட் சூட் போட்டாலாவது பணக்கார அண்ணாமலை கெட்டப் வருமா என்றால்.. அட போங்கடா அதுக்கு அந்த துண்டே தேவலை.
சரத் பாபு கேரக்டர்ல அந்த நடிகர் ஒன்னும் சொல்றதுக்கில்லை. ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி என நினைத்து கொண்டு ரொம்பவும் இம்சிக்கிறார். அதிலும் அவர் வரும் காட்சிகளில் "இஸ் புஷ் தஸ் முஷ்" என டெரராய் பின்னணி இசை கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்... அப்படியே நாம் பயந்து விடுகிறோம் எப்படா வீட்டுக்கு போறதுன்னு. சரண்யா மோகனை இதுக்கு மேல யாரும் மொக்கை பண்ண முடியாது. (ஏன் மேடம் நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு...?)
இதுக்கு மேலவும் கை பர பரன்னு டைப் அடிக்கனும்னு தோணுது. ஆனா இப்படியே போனா இந்த படத்தை பத்தி ஒரு ப்ளாகே ஆரம்பிக்கிற அளவு மனம் குமுறுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.
கடைசியா ஒரு விஷயம். நீங்க ரஜினி ரசிகரா இருந்தா படம் பாக்கும்போது தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கணும்னு தோணும். நீங்க ரஜினி ரசிகர் இல்லேன்னா உங்க சட்டையை கிழிக்கணும்னு தோணும். நீங்க பதிவரா இருந்தா வீட்டுக்கு போய் பதிவு போட்டு கிழிக்கணும்னு தோணும். ஆக மொத்ததுல ஆறுமுகத்துல அப்படி என்னத்த கிழிச்சிருக்காங்கன்னு யாரும் கேக்க முடியாது!