கடுப்படிக்கும் கணவன், பேசாத மனைவி, திட்டிக்கொண்டே இருக்கும் தந்தை, டென்சன் ஏத்தும் உயர் அதிகாரி, பாலிட்டிக்ஸ் செய்து படுத்தி எடுக்கும் சக ஊழியர்கள்.. கொஞ்சம் யோசித்து பார்த்தால் பிறருடன் நமக்குண்டான உறவு பழுதுகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகலாம். நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை அல்லது பிடிக்குமாறு நாம் நடந்து கொள்ள முடியவில்லை என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் சரி செய்து எல்லோரும் அன்பு செலுத்தி மதிப்பது போல் பெயர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா?
கவலையை விடுங்கள். உங்கள் பிரச்சினை இன்றோடு தீர்ந்துவிட்டது.
ஒரே புத்தகம். உங்களை, உங்கள் வாழ்க்கையை மாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வைத்து உங்களை யாவரும் விரும்பும் வகையில் மாற்றப்போகிறது.
1937ல் வெறும் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்த 'How to win friends and influence people' என்கிற புத்தகம்தான் அது. அன்று முதல் இன்றுவரையில் சர்வதேச பெஸ்ட் செல்லர் வரிசையில் கம்பீரமாக இடம் பிடித்துள்ள இப்புத்தகம் உலகெங்கிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றி தங்களை மதிப்புமிக்கவராக மற்றவர்கள் கருதுகிறார்கள் என கூறி தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெயர் பெற்றது. அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் இருக்கிறது?
மனிதர்களிடம் பழகும் முறை, அவர்களை புரிந்துகொள்வது, ஒவ்வொருவரையும் அணுகும்முறை, பேசும் விதம், முக்கியமாய் பேசக்கூடாத விதம் என இன்டர்பெர்சனல் ஸ்கிள்ஸ் எனப்படும் மனித உறவுகளை கையாளும் முறைக்கு இன்றைய தேதி வரை உலகில் இதைவிட சிறப்பான புத்தகம் வேறெதுவும் இல்லை. புத்தக ஆசிரியர் டேல் கார்னகி மனவளக்கலை பயிற்சியின் பரமப்பிதா என்று போற்றப்படுபவர். இவரது கருத்துக்கள், பயிற்சி முறைகள் இல்லாமல் இன்று எந்த பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகளும் நடப்பது இல்லை.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விதிமுறையாக தரப்பட்டிருக்கும். படித்து தொகுத்துக்கொண்டு நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும். இன்று எதை செய்தோம் எதை தவற விட்டோம் என்கிற பரிசீலனை சில நாட்களுக்கு அவசியம் செய்து பார்க்க வேண்டும். நாளடைவில் அந்த விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தும் விதமும் நமக்கு எளிதாக கைவந்துவிடும்.
2003ல் ஒரு மனவளக்கலை பயிற்சி வகுப்பில் இந்த புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் பயிற்று வித்து விதிமுறைகளை தினமும் ஒரு கார்டில் அச்சடித்து கொடுத்தார்கள். அதை நடைமுறையில் செயல்படுத்தி அடுத்தடுத்த வகுப்பில் அனைவரது அனுபவங்களும் கூறப்படும். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்தது, இதன் பயன் புரிந்து சீரியஸாக செயல்படுத்த ஆரம்பித்தேன். இன்று இப்புத்தகத்தின் பல கருத்துக்கள் மனதில் ஊறி எண்ணங்களாகி சில எனது கேரக்டராகவே மாறிவிட்டது.
அட இந்த விஷயம் இவ்வளவு நாளா தெரியாம போச்சே என வியக்கும் அளவில் இந்த புத்தகத்தின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி பார்க்கையில் நமக்கு ஆச்சரியமிக்க மாற்றங்கள் உறவுகளிடத்தில் மட்டுமல்லாது பழகும் அனைவரிடத்திலும் நிகழ்வதை காண முடியும்.
உங்கள் வேலையில் பணியாளர்கள், அதிகாரிகளிடையே நல்ல பெயர் எடுக்கப்போகிறீர்கள். நண்பர்கள் உறவினர்களிடத்தில் உண்மையான அன்பையும் அன்னியோன்யத்தையும் அதிகரிக்க போகிறீர்கள். சமூகத்தில் உங்களது மதிப்பு உயரப்போகிறது. உங்களை அனைவரும் விரும்ப போகிறார்கள். உங்களை 'நண்பேன்டா' என யாவரும் அன்போடு அழைக்கப்போகிறார்கள். அதற்கு முதல் படியாக நீங்கள் இந்த புத்தகத்தை வாங்க போகிறீர்கள்.
இந்த புத்தகம் பிளாட்பாரம் தொடங்கி பிரம்மாண்டாமான அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லையென்றால் அது புத்தக கடையே அல்ல.
4 comments:
//இந்த புத்தகம் பிளாட்பாரம் தொடங்கி பிரம்மாண்டாமான அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லையென்றால் அது புத்தக கடையே அல்ல. //
என் இந்த கொலை வெறி? அப்படினா எங்க ஊர்ல புத்தக கடையே இல்லை.
Going to download the book...
நல்ல பதிவு.
படிச்சுடலாம்.
Post a Comment